/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
வெட்டி முறித்த குழம்பு புதுப்பானை கூட்டு!
/
வெட்டி முறித்த குழம்பு புதுப்பானை கூட்டு!
PUBLISHED ON : ஜன 15, 2016

தீபாவளி என்றால் பட்டாசு வெடித்து மகிழ்வோம். பொங்கல் என்றால் கடித்து சுவைக்கும் திருநாள். வெட்டி வைத்த கரும்பையும் வேகவைத்த பனங்கிழங்கையும், பற்கள் வலிக்க மென்று தின்னும் போது தான், பொங்கல் கொண்டாடிய திருப்தி கிடைக்கும். வழக்கமான பொங்கல் செய்வதை விட கரும்புச்சாறில் பொங்கல் செய்வதையும், புதுப்பானை கூட்டு வைப்பதையும் கற்றுத் தருகிறார், மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவரும், பெரியகுளம் மேரிமாதா கல்லூரி கேட்டரிங் துறைத்தலைவருமான எம்.எஸ்.ராஜ்மோகன்.
புதுப்பானை கூட்டு: வெண்பூசணி 500 கிராம், காய்ந்த மொச்சை, வெள்ளை சுண்டல் தலா 30 கிராம், தேங்காய் ஒன்று, உப்பு தேவையான அளவு. அரைப்பதற்கு 50 கிராம் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் 3, சீரகம் சிறிதளவு, சிறிய வெங்காயம் 5. தாளிப்பதற்கு எண்ணெய், கறிவேப்பிலை.
மொச்சை, சுண்டலை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். தேங்காயை அரைத்து தண்ணீர் பதத்தில் பால் எடுக்க வேண்டும்.
பாத்திரத்தில் வெண்பூசணி, சுண்டல், மொச்சை, தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து வேகவிட வேண்டும். அரைக்க வேண்டியவற்றை கரகரப்பாக அரைக்க வேண்டும். தேங்காய்ப்பாலில் காய்கள் வெந்தபின் அரைத்த கலவையை சேர்த்து மிதமான தீயில் விடவேண்டும். கறிவேப்பிலை தாளித்து இறக்கிவிடலாம். மிதமான காரத்தில் ருசியாக இருக்கும். வெண்பூசணிக்கு பதிலாக சுரைக்காய், சவ்சவ், பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்களை வைத்தும் சமைக்கலாம்.
வெட்டி முறித்த குழம்பு: கத்தரிக்காய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சைமொச்சை, அவரைக்காய், முருங்கை, வாழைக்காய், கருணைக்கிழங்கு, சுரைக்காய் தலா 50 கிராம். சிறிய வெங்காயம் 30 கிராம், பெரிய தக்காளி 2, புளி நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு. தாளிப்பதற்கு நல்லெண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், சீரகம், பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது. அரைப்பதற்கு தேங்காய் ஒன்று, காய்ந்த மிளகாய் 4, மிளகு ஒரு டீஸ்பூன், பூண்டு 4 பற்கள், மல்லிவிதை ஒரு டேபிள் ஸ்பூன்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தேங்காய் உட்பட அரைக்க வேண்டியவற்றை வதக்கி மிக்சியில் விழுதாக அரைக்க வேண்டும். புளியை கெட்டியாக கரைக்க வேண்டும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சிறிய வெங்காயம், தக்காளி வதக்கி புளியை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதனுடன் அரைத்த கலவை, கொஞ்சம் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிவரும் போது நறுக்கிய காய்கறிகளை சேர்க்க வேண்டும். மிதமாய் தீயில் வேகும் போது காய்கறிகளில் மசாலா, தேங்காய்ப்பால் சாறு நன்கு இறங்கி விடும். கடைசியாக சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.
கரும்பு பொங்கல்: பச்சரிசி 450 கிராம், பாசிப்பருப்பு 40 கிராம், தோல் சீவிய கரும்புத் துண்டுகள் கைப்பிடி அளவு, கரும்புச்சாறு ஒரு லிட்டர் லிட்டர், தண்ணீர் 750 மில்லி, சுக்குத்தூள், ஏலக்காய் தலா அரை டீஸ்பூன், நெய் 50 மில்லி, நறுக்கிய தேங்காய் துண்டுகள் ஒரு டேபிள் ஸ்பூன்.
பச்சரிசி, பாசிப்பருப்பை கழுவி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பானையில் தண்ணீர் விட்டு கொதிக்கும் போது பச்சரிசி, பாசிப் பருப்பு சேர்த்து வேகவிட வேண்டும். வெந்தபின் கரும்புச்சாறு சேர்த்து கொதிக்கவிட வேண்டும். சற்றே கெட்டியாகும் போது நெய் ஊற்றி ஏலக்காய், சுக்குத்தூள் சேர்த்து கிளற வேண்டும். இறக்குவதற்கு முன் நறுக்கிய கரும்பு, தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளற வேண்டும். கரும்புத் துண்டு சேர்ப்பதால் நிதானமாக மென்று சுவைத்து சாப்பிட வேண்டும். சூடாக சாப்பிட்டால் சுவைகூடும். இன்னும் சுவை அறிய 76678 28660
எம்.எம்.ஜெ.,