PUBLISHED ON : ஜன 15, 2020

வெண்மேகம் துாவிச் சென்ற பொன்துளியில் துளிர்த்தெழுந்த மஞ்சள் தேகக்காரி...! மீன்களின் கண்களை விழிகளாக்கி கண்டோரை கவர்ந்திழுக்கும் மாயக்காரி...!
பிற மாநில நடிகைகளே ஜொலிக்கும் தமிழ்த் திரை வானில், ஒளி பொங்கி மிளிரும் கொங்கு தேசக்காரி...! சினிமாப் பிரியர்களை மயக்கத்தில் தவிக்க வைக்கும் அழகு மங்கை அதுல்யா, பேசிய தருணம்
* சூட்டிங்கில் படு 'பிஸி'யாமே...!
பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. கதைகளை கேட்டு, பிடித்ததை தேர்வு செய்து நடிக்கிறேன். நாடோடிகள்-2, அமலாபால் தயாரிக்கும் 'கடாவர்' படங்கள் சூட்டிங் முடிந்துவிட்டன. விரைவில் திரைக்கு வந்துவிடும். ஜெய் உடன் 'எண்ணித்துணிக' படம் மற்றும் எஸ்.பி.பி., சரண் தயாரிப்பில் வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்கிறேன்.
* திரைத்துறை விரும்பி வந்ததா?
இல்லை. கல்லுாரி காலத்தில் நண்பர்கள் சேர்ந்து மூன்றாண்டுகளாய் எடுத்தப்படம் தான் 'காதல் கண் கட்டுதே'. அந்த படம் எடுக்கும் போது, வரவேற்பு கிடைக்கும் என நான் நினைத்ததில்லை. எதிர்பார்ப்புகளுக்கு மீறிய வரவேற்பு கிடைத்ததால், நடிப்பில் ஆர்வம் வந்தது. இப்போது இத்தொழிலை மிகவும் நேசிக்கிறேன்.
* கிறங்கடிக்கும் அழகின் ரகசியம்...!
ஓரளவு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். அதிகளவு காய்கறிகள் எடுத்துக்கொள்வேன். நேரம் கிடைத்தால் 3 மணி நேரம் கூட 'ஜிம்'ல செலவிடுவேன். சூட்டிங் பரபரப்பு என்றால் 'ஜிம்' பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை.
* ஜல்லிக்கட்டு பிடிக்குமா...!
நான் பிறந்த கோவையில் உள்ள கிராமத்தில் எங்களுக்கு தோட்டம் உள்ளது. அங்கு தொழுவம் வைத்து பசு வளர்க்கிறோம். எனது தாத்தா ஒரு மாட்டு வியாபாரி. அவர் இருக்கும்போது இரு ஜல்லிக்கட்டு மாடுகளும் இருந்தன. எனவே குழந்தை பருவம் முதல் மாடுகள் மீது பிரியம் உண்டு. ஜல்லிக்கட்டு நம் அடையாளம் என்பதால் இன்னும் அதிகம் பிடிக்கும்.
* உங்கள் புத்தாண்டு தீர்மானம்?
பல முறை தீர்மானம் எடுத்து தோற்றது தான் மிச்சம். நேரத்திற்கு சாப்பிட வேண்டும்ணு தீர்மானம் எடுத்தால் கூட காப்பாற்ற முடிவதில்லை. அதனால் இம்முறை, எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்ங்கிற வேண்டுதல் மட்டும் தான்.
* அதுல்யாவின் பொங்கல் தினம்...
வழக்கமாக கிராமத்து தோட்டத்தில் குடும்பத்தோடு கொண்டாடுவோம். புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவோம். கால்நடைகளின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி வழிபடுவோம். கிராமத்து குழந்தைகளுடன் பொங்கல் உண்டு மகிழ்வோம். இம்முறையும் அப்படித்தான்.
* பொங்கல் 'சேதி'?
தீபாவளி போன்று பல பண்டிகைகள் கொண்டாடினாலும், தமிழர் திருநாளான பொங்கல் நமக்கு எப்போதுமே தனித்துவமானது. இப்பண்டிகை தினத்தில் நம்மை வாழ வைக்கும் விவசாயிகளை நினைவுகூர தவறக்கூடாது. விவசாயத்தையும், கால்நடைகளையும் போற்றி காக்க வேண்டும். கால வெள்ளத்தில் நம் பாரம்பரியம் காவு போகாமல் காப்பதும் அவசியம்.
தமிழ்நாடன்

