/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
10 ஏக்கர்; 9 பாரம்பரிய நெல் ரகங்கள்! - சாதித்த சிவராமன்
/
10 ஏக்கர்; 9 பாரம்பரிய நெல் ரகங்கள்! - சாதித்த சிவராமன்
10 ஏக்கர்; 9 பாரம்பரிய நெல் ரகங்கள்! - சாதித்த சிவராமன்
10 ஏக்கர்; 9 பாரம்பரிய நெல் ரகங்கள்! - சாதித்த சிவராமன்
PUBLISHED ON : ஜன 15, 2020

பண்பாட்டை இழந்த பகுத்தறிவும், பாரம்பரியத்தை மீறிய அறிவியலும் முன் இனிக்கும், பின் கசக்கும். ஆம் பகுத்தறிவு என்ற பெயரில் பண்பாட்டையும், அறிவியல் என்ற பெயரில் பாரம்பரியத்தையும் இழக்கும் போது தமிழர்களின் அடையாளம் மறைக்கப்படுகிறது அல்லது அழிக்கப்படுகிறது என்றே கூறலாம்.
சில ஆண்டுகளாக ஒட்டுரக அரிசியில் இருந்து பாரம்பரிய ரகத்திற்கு மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழ்வாதாரத்தை இழக்கும் தருவாயில் இருந்து மீண்டு, பாரம்பரிய இயற்கை விவசாயத்துக்கு திரும்பிய விவசாயி ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாரம்பரிய நெற்பயிர்களை விளைவித்து ஒரு வேளாண் பல்கலைக்கழகமாகவே திகழ்கிறார்.
வறண்ட பூமியான சிவகங்கை வடக்கு எல்லை எஸ்.புதுார் ஒன்றியம். இங்குள்ள உலகம்பட்டியை சேர்ந்தவர் உ.சிவராமன். 10ம் வகுப்பு வரை படித்தவர், படிக்கும் போதே விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். விவசாய குடும்பம் எதிர்நோக்கும் அதே வறட்சி, அதே நஷ்டம் இவரது குடும்பத்தையும் தாக்க, 2007ல் சிங்கப்பூர் பறந்தார் கட்டட தொழிலாளியாக. வெளிநாடு வேலைக்கு சென்று திரும்பியவர், கணக்கு பார்த்தால் வட்டி கூட மிஞ்சாது என்ற புதுமொழியுடன் 2014ல் ஊர் திரும்பினார். ஏற்கனவே மறைந்த நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் கூறிய அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் அசை போட்டு வந்தவர் தனது வயலில் அவற்றை பரிசோதித்து பார்க்க ஆரம்பித்தார்.
நெல் ஜெயராமனிடமிருந்து வாங்கிய பாரம்பரிய விதைகளை, ரசாயன உரமில்லாமல் பயிரிட்டு பாதுகாத்து வளர்த்தார். பாரம்பரிய நெல் விதைகளை பயிரிட்டு அனைத்து அறுவடையிலும் வெற்றியும், லாபமும் கண்டார். தற்போது பத்து ஏக்கரில் 9 விதமான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வளர்த்து வருகிறார்.
அவர் கூறியதாவது: பாரம்பரிய ரகங்களை கைவிட்டபோதே ஆரோக்கியமும் நம்மை கைவிட்டுவிட்டது. ஒட்டு ரகங்களை பயிரிடும் போது பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும்; பாரம்பரிய ரகங்களில் பூச்சி தாக்குதல் குறைவாகவே உள்ளது.
அறிவியல் என்ற பெயரில் பயிர்களின் எதிர்ப்பு சக்தியை குறைத்து விட்டார்கள். நான்கு ஆண்டுகளாக ரசாயன உரம், ரசாயனபூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களையும், இயற்கை பூச்சிக்கொல்லி கரைசல், விரட்டிகளை மட்டுமே பயன்படுத்துகிறேன். மகசூல் அதிகமாக கிடைப்பதுடன், செலவு குறைந்து நல்ல லாபம் கிடைக்கிறது.
ஆண்டுக்கு கூலியாக மட்டும் 2 முதல் 3 லட்ச ரூபாய் வரை கொடுக்கிறேன். இந்தாண்டு 10 ஏக்கரில் பாரம்பரிய ரகங்களான மாப்பிள்ளை சம்பா, காட்டுயானை, கருடன் சம்பா, செம்புழுதி சம்பா, ஆத்துார் கிச்சடி சம்பா, துாயமல்லி, குளவாழை, கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, சீரக சம்பா ஆகியவற்றை பயிரிட்டுள்ளேன். அனைத்திலும் மகசூல் நிறைந்துள்ளது என்றார்.
இவரது சாதனை விவசாயத்தை பாராட்டி மாவட்ட நிர்வாகம் சிறந்த இயற்கை மற்றும் தோட்டப்பயிர் விவசாயிக்கான விருதை அளித்திருக்கிறது. பாரம்பரிய விவசாய ஆர்வலர்களையும், மாணவர்களையும் வரவழைத்து இரண்டுமுறை அறுவடை திருவிழா நடத்தியுள்ளார். இந்தாண்டும் இவரது அறுவடை திருவிழாவில் பங்கேற்க பலர் ஆர்வமுடன் காத்திருக்க, நம்மாழ்வார் விதைத்துச்சென்ற பாரம்பரிய விதையாகவே மாறி, நெல் ஜெயராமன் விட்டுச்சென்ற பணியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அவரை பாராட்ட 84892 07699
-தனா

