/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
சீனாவில் தித்திக்கும் 'தை மகள்'! - சேலை, வேட்டி கட்டி கலக்கும் சீனத்து பொங்கல்
/
சீனாவில் தித்திக்கும் 'தை மகள்'! - சேலை, வேட்டி கட்டி கலக்கும் சீனத்து பொங்கல்
சீனாவில் தித்திக்கும் 'தை மகள்'! - சேலை, வேட்டி கட்டி கலக்கும் சீனத்து பொங்கல்
சீனாவில் தித்திக்கும் 'தை மகள்'! - சேலை, வேட்டி கட்டி கலக்கும் சீனத்து பொங்கல்
PUBLISHED ON : ஜன 15, 2020

தொன்மையும், மென்மையும், செழுமையும் கலந்த தமிழ் பண்பாட்டின் வீரியத்தையும், தமிழர்களின் வீரத்தையும் பறைசாற்றும் தைத்திருநாளை அதே கலாசாரம் மாறாமல் சேலை, வேட்டி அணிந்து சீனர்கள் கொண்டாடுகிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை தானே.
சீனாவில் உள்ள யுன்னான் மீன்சு பல்கலையில் தமிழ் படிக்கும் சீன மாணவர்கள் தான் ஒவ்வொரு ஆண்டும் தை மகளை வாஞ்சையோடு போற்றி வரவேற்று மூத்த மொழிக்கு பெருமை சேர்க்கின்றனர். தமிழ் வார்தைகளின் சுவையறிந்து அதன் மீது கொண்ட தீராத காதல் கொண்டதால் தன் பெயரை 'நிறைமதி' என மாற்றிக்கொண்ட சீன தமிழ் பேராசிரியை கிக்கி ஷாங் தான் இதற்கு ஏற்பாடு செய்கிறார்.
கடல் கடந்து வாழ்ந்தாலும் தமிழை நேசிக்கும் மொழி ஆர்வலரான அவர், சீனாவிலிருந்து நம்மிடம்...
தமிழகத்தின் முக்கிய பண்டிகை பொங்கல். தைத் திருநாளை ஒவ்வொரு தமிழர்களும் உணர்வுபூர்வமாக கொண்டாடுவதை பார்த்துள்ளேன்.
தமிழில் உள்ள பழமொழியால் ஈர்க்கப்பட்டு தமிழை முழுமையாக கற்றுக்கொண்டு வருகிறேன். தமிழை ஆழமாக கற்க கற்க அதன் கலாசாரம், பண்பாடு, தொன்மை வியக்க வைக்கிறது.
இங்குள்ள இப்பல்கலையில் 2014 முதல் தமிழ் துறை துவங்கி, அதன் பேராசிரியையாக உள்ளேன். சீன மாணவர்கள் பலர் தமிழை ஆர்வத்துடன் படிக்கின்றனர். தமிழ் மனம் மாறாமல் இங்கு பொங்கல் பண்டிகை கொண்டாடுவதன் மூலம் தமிழ் கலாசாரம், பண்பாட்டை அவர்களுக்கு எளிதாக நேரடியாக அறிய செய்ய முடிகிறது. ஆர்வம் மிகுதியால் தமிழ் படிக்கும் மாணவர்களே தங்கள் பெயரையே தமிழில் சூட்டிக் கொண்டுள்ளனர். இந்தியா - சீனாவின் பண்பாடுகளும் தொன்மையானதே. இரு நாடுகளும் உழவுத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
பண்டைய காலத்தில் அரசர்கள் கோயில்களை கட்டினர். விவசாயம் செழிக்க, விளைச்சல் அதிகரிக்க ஆண்டுதோறும் கோயில்களில் வழிபடும் பழக்கத்தை உருவாக்கி கொண்டனர். விவசாயம் செழித்து, வறட்சி, பேரழிவு போன்றவை வராமல் இருக்க வேண்டிக்கொள்வதே இந்த வழிபாட்டில் மைய கருவாக வைத்துக்கொண்டனர். இதனால் தான் முதல் விளைச்சலையே காக்கும் கடவுளுக்கு படைக்கின்றனர். சீனாவிலும் இதுபோன்ற பழக்கம் உள்ளது. இங்கும் நவீன அறிவியல் மற்றும் கருவிகள் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.
விவசாயிகளை கவுரவிப்பதற்காக சீனாவில் 'அறுவடை திருவிழா' என்ற பெயரில் ஒவ்வொரு செப்.,23ம் தேதி கொண்டாடுகிறோம். அதில் சீனர்கள் பல பிரத்யேக உணவுகளை சமைத்து நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்தளிப்பது வழக்கம். இதுவும் கலாசாரத்தை கொண்டாடும் விழாவே. இதுபோன்று தான் தைப்பொங்கலையும் நாங்கள் பார்க்கிறோம். தை மகளை வரவேற்கிறோம்.
கடந்தாண்டு மாணவர்கள் வேட்டி அணிந்தும், மாணவிகள் சேலை அணிந்தும் பாரம்பரியம் மாறாமல் தைப் பொங்கலை கொண்டாடினோம். கரும்பு, பச்சரிசி கிடைக்கிறது.
பொங்கலுக்கு தேவையான சில பொருட்கள் இங்கு கிடைக்காவிட்டாலும் 'பொங்கலோ... பொங்கல்...' என்ற உற்சாகத்திற்கு மட்டும் குறையிருக்காது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் உற்சாகம் தொடரும் என்கிறார் இந்த சீன மங்கை!
வாழ்த்த kiki.june0605@gmail.com
வியாஸ்

