/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
பச்சரிசிச் சோறு... அயிரை மீன் குழம்பு : நாவில் நீர் ஊற வைக்கும் "அசைவப்பொங்கல்'
/
பச்சரிசிச் சோறு... அயிரை மீன் குழம்பு : நாவில் நீர் ஊற வைக்கும் "அசைவப்பொங்கல்'
பச்சரிசிச் சோறு... அயிரை மீன் குழம்பு : நாவில் நீர் ஊற வைக்கும் "அசைவப்பொங்கல்'
பச்சரிசிச் சோறு... அயிரை மீன் குழம்பு : நாவில் நீர் ஊற வைக்கும் "அசைவப்பொங்கல்'
PUBLISHED ON : ஜன 18, 2011

தென் மேற்கு பருவக்காற்று ஊசியா உடம்பைத் துளைக்க, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே இருக்கும் தேனி மாவட்டத்தில் வீரபாண்டியை அடுத்த கோட்டூர் கிராமத்தில் தான் இந்த பச்சரிசிச் சோறு, அயிரை மீன் குழம்பு பொங்கல். விவசாயமே இங்கு பிரதானத் தொழிலாக இருந்தாலும், படிப்பறிவு இல்லாத குடும்பங்கள் இங்கு அரிது. எத்தனை தான் பட்டம் பெற்றாலும், வெளியூரில் பணிபுரிந்தாலும், விடுமுறை நாட்களில், மண்வெட்டியுடன் வயலில் இறங்கி வேலை செய்வது, இவர்கள் நிலத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும், நன்றியையும் காட்டுகிறது. மண்ணின் மீது நேசம் கொண்ட இக்கிராம மக்கள், மூன்று நாளும் உற்சாகம் கரை புரள கொண்டாடும் பண்டிகை பொங்கல். ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டிற்கு வெள்ளை அடித்தல், பித்தளைப் பாத்திரங்களை துலக்குதல் என பெண்கள் சுறுசுறுப்பாகி விடுகின்றனர்.
போகிப் பண்டிகை அன்று சூரிய உதயத்தில் வீட்டில், காப்புச் செடியுடன், வேப்பிலை, மாவிலை, நவதானியம் வைத்து மங்கல காப்புக் கட்டப்படுகிறது. தை முதல் நாள் சூரிய உதயத்தில் வீட்டு வாசலில் கோலமிட்டு, வெண்கலப் பானையில் சர்க்கரைப் பொங்கல் வைக்கின்றனர். அதை, அருகில் உள்ள தெய்வங்களுக்கு படைத்து வணங்கி, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு கொடுத்தபின், பொங்கல் பண்டிகையின் அடுத்த கட்ட நடவடிக்கை களை கட்டுகிறது. தை முதல் நாளை மீன் பிறந்த நாளாக கருதி, அந்நாளைக் கொண்டாடும் விதமாக, வாய்க்காலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
அந்த போகத்தில் அறுவடை செய்த நெல்லில் இருந்து எடுத்த பச்சரியை சமைத்து, மீனுடன் பச்சை மொச்சை கலந்து குழம்பு சமைக்கப்படுகிறது. அழகிப் போட்டியில், 'கேட் வாக்' போகும் குமரிகளைப் போல் உழவர் திருநாளில் மாடுகள் அலங்காரம் செய்யப்பட்டு ஊரை வலம் வருவது கொள்ளை அழகு. மாலையில் நடக்கும் மஞ்சள் நீராட்டில், பெண்கள் மஞ்சளுடன், சுண்ணாம்பு, மாட்டுச்சாணம், சிவப்பு, நீலக்கலவை, கரித்தூள் கலந்து மாதக்கணக்கில் குளித்தாலும் போகாத அளவு, முறை மாமன்களை வஞ்சம் தீர்க்கும் நிகழ்ச்சியும் நடந்தேறுகிறது. எல்லா உற்சாகங்களும் ஓந்த பின், நாவில் மட்டும் அல்ல, மனிதிலும் இனிக்கும் பொங்கலாக, 'அடுத்த பொங்கல் எப்போ' என ஆவலுடன் காத்திருப்பர் கள்ளம் கபடமில்லாத கிராமத்து மக்கள்.

