PUBLISHED ON : ஜன 18, 2011

பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள். வீடுகள், மாட்டுத் தொழுவங்களுக்கு வண்ணம் தீட்டி, பச்சரிசி, புது வெல்லம், செங்கரும்பு, மஞ்சள், மாக்கோலம், புத்தாடையுடன் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகை இது. கால்நடைகளை நீராடச் செய்து, தான் உண்ட பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிப்பர். பிழைப்புக்காக திசைகள் எட்டும் சென்ற பந்தங்கள் இந்நாளில் ஒன்றுகூடி மகிழும். மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலம்தான். எதிர்பார்த்ததை விட இம்முறை கொட்டித் தீர்த்த மழை. இது ஒரு புறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் கடன் வாங்கி செலவு செய்த பணத்தையாவது எடுக்க முடியுமா? என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கும் பயிர் சேதம் ஒருபுறம். எது எப்படியோ 'இதுதான் இயற்கை நமக்கு விதித்த கோட்பாடு' என ஆசுவாசப்படுத்திக்கொண்டு விவசாயிகள் தைத் திருநாளை கொண்டாடுகின்றனர்.
தென்மாவட்ட விவசாயிகள் சிலர் மனந்திறக்கின்றனர்...
செண்பகராஜ், வத்தலக்குண்டு: கடன் வாங்கித்தான் விவசாயம் செகிறோம். கஷ்டங்களுக்கு மத்தியிலும், பழமை மாறாமல் முதல் நாள் வீடு, மறுநாள் தோட்டத்தில் பொங்கல் கொண்டாடுவோம். வயலில் வேலை செயும் கூலிகளுக்கு புத்தாடைகள் வாங்கி கொடுப்போம்.
காமராஜ்பாண்டியன், கோம்பைபட்டி: மழை குறைவால் ஆடு, மாடுகளை விற்றுவிட்டோம். பருவம் தவறிய மழையால் எங்களுக்கு பாதிப்பு அதிகம். வெங்காயம், பூக்கள் அழுகிவிட்டன. நெல் நடவுக்கு அதிகம் செலவாகிவிட்டது. இதனால் பொங்கல் கொண்டாடுவது சிரமம் தான். கிராமங்களிலும் விளை நிலங்களை விற்பது அதிகரித்து உள்ளது. இதே நிலை நீடித்தால் ஐந்து ஆண்டுகள் கழித்து ஒரு ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் கோடீஸ்வரனாகும் நிலை உருவாகும்.
சக்திவேல், கூடலூர்: விவசாய நிலங்களில் வேலை செயும் தொழிலாளர்களுக்கு புதிய ஆடை, விடுமுறையுடன் கூடிய சம்பளம் கொடுத்து, அவர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடுவது ஒரு தனிச் சிறப்புதான். மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளை நீராட்டி, அலங்காரம் செது வழிபடுவோம்.
வடிவேலு, ராமநாதபுரம்: கன மழையால் பொங்கல் சிறப்பாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், பயிர்கள் நீரில் மிதக்கின்றன. அறுவடை செய்து விவசாயிகள் பொங்கல் கொண்டாட முடியாத நிலை. பயிர் காப்பீடு செய்ய அலைவதால், பலருக்கு பொங்கல் பண்டிகை குறித்த சிந்தனையே இல்லை.
மாயக்கண்ணன், திருப்புவனம்: ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்கிணங்க ஆவணி, புரட்டாசியில் நடுதல், தையில் அறுவடை என்ற நிலை, தற்போது இல்லை. பருவ மழை தவறுவதால் நடவு, அறுவடை தள்ளிப்போகிறது. நோய் தாக்குதல் அதிகரித்து, விளைச்சல் குறைகிறது. அறுவடை பருவத்தில் தான் நெல் பால் பிடிக்கிறது. இதனால் தை மாதம், பணம் இருப்பதில்லை. ஏற்கனவே கடன் வாங்கி சாகுபடி செய்துள்ள நிலையில், மகசூல் பாதித்துள்ளது. பண்டிகையை முழு மனதோடு கொண்டாட முடிவதில்லை. உலகத்தோடு ஒத்துப்போதல் என்ற சம்பிரதாயத்திற்காக கொண்டாடுகிறோம்.
பெரியகருப்பன், தண்டியனேந்தல்: முன்பு வீடுகள் தோறும் மாடுகள் இருந்தன. வேலை செய்து செய்து களைத்துப் போன விவசாயிக்கும், மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் கொண்டாடப்பட்டது. தற்போது இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர். உழவு மாடுகளின் பயன்பாடு குறைந்ததிலிருந்து விவசாயமும் செழிக்கவில்லை. பொங்கல் கொண்டாடுவது கடமையாக கருதுகின்றனரே தவிர, உண்மையான விவசாயிகள் பொங்கல் கொண்டாடுவதை தவிர்த்து வருகின்றனர்.
பாண்டி, தென்பழஞ்சி: பல ஆண்டுகளுக்கு பின் கனமழையால் மானாவாரி கண்மாகள் நிரம்பியுள்ளன. இதனால், 30 ஆண்டுகளுக்கு பின் தற்போது, இருபோக சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. இதனால், பிழைப்புக்காக வெளியூர் சென்றவர்கள் தற்போது, சொந்த கிராமங்களுக்கு திரும்புகின்றனர். அறுவடை செய்த நெல்லை பொங்கலன்று சுவாமிக்கு படைப்போம். காப்பு, கரும்பு, மஞ்சள் கட்டி பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடுவோம். விளை நிலம், கோயில்களில் காப்புக் கட்டுவோம். மண்பானையில்தான் பொங்கல் வைப்போம். இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிப்போம்.

