
தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறுவதுண்டு. தை பிறந்தவுடன் வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்கான பணிகளை தமிழர்கள் துவக்கி விடுவர். பொங்கல் பண்டிகை, தமிழகம் மட்டுமின்றி தரணி முழுவதுமுள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது என்பது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஹிந்தி பேசும் மக்கள் நிறைந்த மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இம்மாநிலத்தில் போபால், இந்துார், மெக்வா உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான தமிழர்கள் தொழில் நிமித்தமாக வசிக்கின்றனர். போபாலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர். வேலை தேடி வெளியிடங்களுக்கு சென்றாலும் தமிழர் பாரம்பரியம், கலாசாரத்தையும் பறைசாற்றி வருகின்றனர். போபாலில் தமிழர்கள் போபால் தமிழ் சங்கம் என்ற அமைப்பை நிறுவியுள்ளனர். 17 உறுப்பினர்களுடன் 2013ல் துவங்கப்பட்ட இச்சங்கத்தில் தற்போது 900 உறுப்பினர்கள் உள்ளனர்.
வடமாநிலங்களில் குடியேறிய தமிழ் குடும்பங்களின் இளையதலைமுறையினர், தமிழ் மொழியை நன்கு கற்க இச்சங்கம் உதவுகிறது. தமிழர்கள் மட்டுமின்றி வடமாநிலத்தவரின் குழந்தைகளுக்கும் தமிழ் கற்று கொடுக்கின்றனர்.
பொங்கல், சித்திரை தமிழ் புத்தாண்டு பிறப்பை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறது இந்த சங்கம். உலகின் பல்வேறு தமிழ் அறிஞர்கள், விருந்தினர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
சங்க செயலாளர் சுவாமிநாதனிடம் பேசியதிலிருந்து...
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு... உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு, அதை உரக்க சொல்வோம் உலகிற்கு என்பதை நோக்கமாக கொண்டு இச்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. பி.எச்.இ.எல்., மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் போபாலில் இருப்பதால் தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் இங்கு வசிக்கின்றனர். தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் ராஜ்ய சபா எம்.பி.,யாக இருந்த போது எங்கள் சங்கத்திற்கு பல முறை வந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவோம். பொங்கல் படைத்து பரிமாறுவோம். வடமாநிலத்தவர் விரும்பி வாங்கி உண்பர். அறுசுவை விருந்தும் உண்டு.
இந்தாண்டு ஜன., 19ல் போபால் கோவிந்தபுர கேரியர் காலேஜ் ஆடிட்டோரியத்தில் நடக்கும் பொங்கல் விழாவில் ம.பி., மாநில மக்கள் தொடர்பு அமைச்சர் சர்மா, அரசு துணை செயலாளரான தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரி இளையராஜா பங்கேற்கின்றனர். தமிழக இயல் இசை நாடக மன்றத்தினர் ஒத்துழைப்புடன் பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
சங்க நிர்வாகிகள் வழங்கும் நிதியுதவியை கொண்டு ஏழை மாணவர்களுக்கு சீருடைகள், கல்வி உபகரணங்கள், பாடநுால்களை வழங்கி வருகிறோம். பள்ளி கட்டணம் செலுத்த முடியாத குழந்தைகளுக்கு உதவுகிறோம். சுனாமி தாக்கிய போது சங்கம் சார்பில் தமிழக அரசிடம் ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. விரைவில் தமிழ் மையம் ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளோம். மத்திய பிரதேச பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.
பொங்கல் வாழ்த்த கூற 93031 04208
மேஷ்பா