/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
காமெடி தர்பாரின் கலக்கல் நாயகன்'யோகிபாபு'
/
காமெடி தர்பாரின் கலக்கல் நாயகன்'யோகிபாபு'
PUBLISHED ON : ஜன 15, 2020

தமிழ் சினிமாவின் காமெடி தர்பாரில் தனக்கென தனி சிரிப்பு சிம்மாசனமிட்டு ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம் பிடித்த இவரை பார்த்தாலே சிரிப்பு வரும்... இவர் பேச்சை கேட்டாலே கவலை பறக்கும்... தன் தோற்றம் கண்டு கிண்டல் செய்தாலும் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மனநிலையுடன் திரையில் நடித்து கலக்கும் தியாகி... யோகி பாபு அளித்த பேட்டி.
* 2019ல் இரவு, பகலாக நடித்த படங்கள் குறித்து?
'கோமாளி', 'தர்மபிரபு', 'கூர்க்கா', 'ஜாம்பி', எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. 'தர்மபிரபு'க்காக காலை 6:00 மணிக்கு ஸ்பாட்டுக்கு போயிடுவேன். எமதர்மன் கெட்டப்புக்கு கிரீடம், உடையலங்காரம் உட்பட ஒரு மணிநேரம் ஆகும். ஆறு மணிக்கு ஷாம் ஆண்டனியின் 'கூர்க்கா' செட்டுக்கு போவேன். இரவு, பகலா 35 நாட்கள் நடிச்சிருக்கேன். இடையில் கிடைக்கும் நேரத்தில் 'ஜாம்பி' படம் நடித்தேன்.
* 'பிகில்' படத்தில் விஜய், அட்லி உங்களை துாங்க வைத்தது?
சத்தியமா உண்மைதான்... படப்பிடிப்பிற்கு போனால் இயக்குனர் அட்லி 'தலைவா முகம் டல்லா இருக்கு'ன்னு சொல்லுவாரு. 'கொஞ்சம் பாபுவை துாங்க வைத்து விட்டு சூட்டிங் பண்ணலாம்'னு விஜய் சொல்வாரு. முகம் டல்லா இருந்தால் ரெஸ்ட் எடுத்து நடிக்க சொல்வாங்க. சில காட்சிகளுக்கு எனக்கு டூப் போட்டாங்க.
* உங்களுக்காக காமெடி 'டிராக்' எழுதுவதற்கு குழு?
இதுவரை காமெடி டிராக் எழுத குழு வைச்சுக்கலை. படப்பிடிப்பு தளத்துக்கு போகும் போது இயக்குனர் டிஸ்கஸ் பண்ணும் போது எனக்கு மனசுல என்ன வருதோ அதை ஸ்பாட்டில் சொல்லிடுவேன். எழுதும் பழக்கம் எல்லாம் இல்லை.
* உங்க கெட்டப், லுக் மாற்றும் ஐடியா?
மார்ச் மாதம் அந்த முயற்சி எடுக்க போகிறேன்; முதல் முறையா என் ஸ்கிரிப்ட்ல நானே நடிக்கப் போறேன். 'யாயா' படம் இயக்கிய ராஜசேகர் தான் இந்த படத்தை இயக்குகிறார். 10வது படிக்கும் பள்ளி மாணவர் கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படத்துக்காக கொஞ்சம் தலை முடி வெட்டி கெட்டப் சேஞ்ச் பண்ற ஐடியா இருக்கு
* ஹீரோவா தொடர்ந்து நடிக்க உங்களுக்கு வாய்ப்பு வருதா?
நிறைய படங்களில் வாய்ப்பு வருது. ஆனால் நான் சம்மதிக்கலை. காமெடி மட்டும் சிறப்பா பண்ணனும்னு நினைக்கிறேன். பாலாஜி மோகன் தயாரிப்பில் 'மண்டேலா'ன்னு படத்தை ஒன்றரை ஆண்டுகளாக எனக்காக வெயிட் பண்ணி எடுத்திருக்காங்க. அதில் மட்டும் தான் நான் முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன்.
* 'தர்பார்' படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம்?
அவர் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் மாதிரி... வேகமானவர்; அவர்கிட்ட நிறைய கத்துக்கனும். படத்தில் ஒரு காட்சியில் என்னை அடிச்சுடுவார். நடித்து முடித்த பின் என் கையெடுத்து 'சாரி' கேட்டார். அப்படியே ஆடிப்போயிட்டேன்.
* நயன்தாரா உங்க காமெடிக்கு பெரிய ரசிகையாமே?
நயன்தாரா ரொம்ப தைரியமான பொண்ணு. 'ஐரா', 'விஸ்வாசம்', 'மிஸ்டர் லோக்கல்', 'கோலமாவு கோகிலா' படங்களில் அவருடன் நடிச்சிருக்கேன். என் காமெடின்னு இல்லை; பொதுவா காமெடின்னாலே நயன் ரசிச்சு பார்ப்பாங்க.
* உங்களை யாராவது பன்னி வாயா என்று கூப்பிட்டால் கோபம் வருமா?
சத்தியமா எனக்கு வராது; அந்த டயலாக் தான் மக்கள்கிட்ட அதிகம் ரீச்சானது. எனக்கு தெரிந்து நிறைய வெளிநாட்டு நண்பர்கள் கூட அந்த டயலாக் பற்றி என்கிட்ட பேசியிருக்காங்க. பன்றி என்பதே 'வாராஹி'ங்குற சாமியோட அடையாளம் தானே.
* சமீபத்தில் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு...?
அப்படி ஒரு சம்பவம் நடக்கல, 2020ல் பிளான் இருக்கு. வீட்டில் நினைக்கிற மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சால் இந்த ஆண்டு கல்யாணம் நடக்கும்னு நினைக்கிறேன்.
* அஜித் குறித்து சொல்லுங்களேன்?
அஜித் உடன் மூன்று படங்கள் நடிச்சிருக்கேன். அவர் தன்னம்பிக்கை ரொம்ப பிடிக்கும். யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டார், சொல்ல போனால் ரஜினி, விஜய், அஜித் 'ஜீனியஸ்' தான்.
* கை முழுக்க கயிறு கட்டி இருக்கீங்களே ஏன்?
'லொள்ளு சபா' நடித்த நேரத்தில் நிறைய விஷயங்கள் பார்த்திருக்கேன். அப்போ ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு முறை திருத்தணி போயி கோயில் வளாகத்தில் படுத்துட்டேன். நம்ம கையில எதுவும் இல்லையே இதாவது இருக்கட்டுமேனு வாங்கி கட்டினது தான் இந்த கயிறு.
* சில படங்களில் சின்ன சின்ன ரோல் கூட நீங்க நடிக்க காரணம் என்ன?
முதல் முறையாக 'கலகலப்பு' பார்ட் 1ல் தான் சின்ன கேரக்டரில் நடித்தேன். 'பாபு நீ வரும் போது உன் தலைக்கு பின் சக்கரம் சுத்துற மாதிரி இருக்குன்னு சுந்தர் சி., சொன்னாரு. 'என்ன சொல்றீங்க புரியல'ன்னு சொன்னேன். 'நீ பிஸி நடிகனா மாறப் போறே'ன்னு சொன்னாரு. அதே மாதிரி பிஸியா நடிக்கிறேன்.
கவி