/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
நான் ஓர் உலகத்தமிழ் மகள்! - தமிழ் மரபு காக்கும் சுபாஷினி
/
நான் ஓர் உலகத்தமிழ் மகள்! - தமிழ் மரபு காக்கும் சுபாஷினி
நான் ஓர் உலகத்தமிழ் மகள்! - தமிழ் மரபு காக்கும் சுபாஷினி
நான் ஓர் உலகத்தமிழ் மகள்! - தமிழ் மரபு காக்கும் சுபாஷினி
PUBLISHED ON : ஜன 14, 2022

தமிழ் மரபு அறக்கட்டளை என்ற உலகளாவிய அமைப்பை துவங்கி அதன் மூலம் தமிழ்ப்பண்பாடு, வரலாறு, கலை, கலாச்சாரத்தை பரப்பி வருகிறார் முனைவர் சுபாஷினி. ஜெர்மனியில் கணினி இயந்திரவியல் பொறியாளரான இவர் தமிழ் மரபு காக்கும் மாண்புமிக்க பணியில் தன்னை அற்பணித்துக்கொண்டவர். ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் லின்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவருக்கு ஐம்பொன்னால் இரண்டு சிலைகள் வைத்து பெருமை சேர்த்தவர். உலகம் முழுவதும் பயணம் செய்து அத்தனை நாட்டு அருங்காட்சியகங்களையும் அறிந்து வைத்திருப்பவர். கீழடி-வைகை நாகரீகம் (குழந்தைகளுக்கான வரலாற்று அறிமுகம்) என்பது உட்பட 11 நுால்கள் எழுதியவர்.
'உலகம் என் வீடு. உயிர்கள் அனைத்தும் என் உறவு. நான் ஓர் உலகத்தமிழ் மகள்! என்னை பயணி என்றே அறிமுகப்படுத்த விரும்புகிறேன்' என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் இவருடன் ஒரு நேர்காணல்...
* ஜெர்மனியில் இருந்தாலும் அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறீர்களே... உங்கள் பூர்வீகம்?
என் தந்தை மூன்று தலைமுறைக்கு முன்பே கும்பகோணம் பகுதியில் இருந்து மலேசியாவிற்கு இடம் பெயர்ந்தவர். தாயார் தஞ்சாவூரை சேர்ந்தவர். என் பள்ளி படிப்பு முழுவதும் மலேசியாவில் மலாய் மொழி சார்ந்த கல்வியாகத்தான் இருந்தது. ஆஸ்திரேலியாவில் கணினி பட்டப்படிப்பு, ஜெர்மனியில் கணினி இயந்திரவியல் முதுகலைபடிப்பு, பின் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்று தற்போது ஜெர்மனியில் பணிபுரிகிறேன்.
* தமிழ் மீது புலமையும் ஆர்வமும் வந்தது எப்படி
என் அம்மாவிற்கு தமிழ் மீது ஆழ்ந்த பற்று உண்டு. அவர் நிறைய எழுதுவார்; படிப்பார். அவரிடம் இருந்து தமிழார்வம் எனக்கும் வந்தது.
* தமிழ் மரபு அறக்கட்டளை என்ற எண்ணம் எப்படி உருவானது
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு தமிழ் மீது அதீத ஆர்வம் எப்போதும் உண்டு. கிடைக்கின்ற நேரத்தை தமிழுக்காக அர்ப்பணிப்பார்கள். எனக்கும் அப்படித்தான் ஆர்வம் வந்தது. அழிந்து வரும் மரபு சார்ந்த விஷயங்களை கணினி தொழில்நுட்பத்துடன் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்டது. இதற்காக மலேசியாவிலும் ஜெர்மனியிலும் பணியாற்றிய பேராசிரியர் கண்ணனும் நானும் சேர்ந்து தமிழ் மரபு அறக்கட்டளையை 2001ல் துவக்கினோம். உலகளாவிய அளவில் உறுப்பினர்கள் உள்ளனர்.
ஜெர்மனி, மலேசியா, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட அமைப்பு இது. தமிழ், அதன் வரலாறு மீதான ஆர்வம் உடையவர்களை இணைக்கிறோம். தமிழ் மரபு சார்ந்த விஷயங்களை ஆவணப்படுத்துவது தான் எங்கள் முக்கிய நோக்கம்.
* தமிழ் சார்ந்த விஷயங்களை ஆவணப்படுத்துதலின் அவசியம் இன்னும் உள்ளதா
ஐரோப்பியர்கள் தங்கள் பார்வைக்கு உட்படும் அனைத்தையும் ஆவணப்படுத்துவார்கள். அரேபியர்கள், சீனர்களின் ஆவணப்படுத்துதல் தரம் வாய்ந்தது. அது போன்று தமிழர்கள் வரலாறு, பழைய நுால், சித்திரங்கள், கல்வெட்டுகளை ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஆய்வு தரத்துடன், சான்றுகளுடன் ஆவணப்படுத்தும் தேவை உள்ளது. இதனை தமிழ் மரபு அறக்கட்டளை செய்கிறது.
'மின்தமிழ் மேடை' என்ற காலாண்டிதழ் வெளியிடுகிறோம். அதில் ஆய்வு கட்டுரைகள் வெளிவருகிறது. தமிழ்மரபு பதிப்பகம் மூலம் பல நுால்கள் வெளியிட்டு வருகிறோம். நடுகல், கல்வெட்டு, மொழி பற்றி வரும் நுால்களை ஆய்வு நுால் என்று ஒதுக்காமல் மக்கள் படிக்க வேண்டும்.
* தமிழில் மானுடவியல் ஆய்வு நுால்கள் குறைவாக உள்ளதா
சடங்குகளும், குழு முறை வாழ்வியலும், பண்டிகைகளும் நிறைந்த தமிழ்நாட்டு நிலப்பரப்பில் மானுடவியல் ஆய்வுகள் மிகக்குறைவான கவனத்தைப் பெற்றிருக்கின்றன என்பது வேதனை. தமிழக பல்கலைகளும் மானுடவியல் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டு ஆய்வுத் தளத்தில் தரமான மானுடவியல் ஆய்வுகள் என யோசிக்கும்போது நம் நினைவிற்கு வருபவர்களில் முக்கியமானவர் மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவன். அவர்பற்றி நான் தொகுப்பாசிரியராக இருந்து 'அறியப்பட வேண்டிய தமிழகம்' என்ற நுாலை தமிழ் மரபு அறக்கட்டளை அண்மையில் வெளியிட்டது மகிழ்ச்சி.
* அருங்காட்சியகங்கள் மீது இத்தனை ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
பல்வேறு உலக நாடுகளில் 900க்கும் மேற்பட்ட சிறப்புபெற்ற அருங்காட்சியகங்களுக்கு பயணம் செய்துள்ளேன். வரலாற்றை எப்படி பாதுகாப்பது, அதனை பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் விதத்தில் எப்படி காட்சிப்படுத்துவது என அவை இயங்குகின்றன. அருங்காட்சியகங்கள் தொடர்பாக மட்டுமே 2 நுால்கள் எழுதியுள்ளேன். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் மரபு சார்ந்த விஷயங்கள் உள்ளன. கிராமங்களில் ஒரு மண்டம், ஒரு நடுகல் இருக்கும். சென்னை, துாத்துக்குடி, திருநெல்வேலி, கரூரில் அருமையான அருங்காட்சியகங்கள் உள்ளன.
அயல்நாடுகளில் விடுமுறை நாட்களில் மக்கள் அருங்காட்சியகங்களுக்கு செல்கின்றனர். நாம் விடுமுறையில் தொலைக்காட்சி, திரைப்படம் என செல்கிறோம். தமிழ்நாட்டில் பல அருங்காட்சியகங்கள் உள்ளன. ஆனால் அருங்காட்சியகங்கள் என்றால் அது பள்ளி மாணவர்களுக்கானது என்ற நிலை உள்ளது. இது தவறு. அருங்காட்சியகங்கள் நம் வரலாறை நமக்கு நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. பொதுமக்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அருங்காட்சியகங்கள் செல்ல வேண்டும்.
* உங்களை சிந்திக்க வைத்த நுால்
ஏராளம். என் கண்களை திறந்த நுால்கள் பல. நுால்கள் மூலம் வாழ்க்கையை புரிந்து கொள்ள செய்த மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் லியோனார்டோ டா வின்ஸி. பல வகையில் பல துறைகளில் மனிதர்கள் சாதிக்க முடியும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபித்து கொண்டவர். அறிஞராக, ஓவியராக, கலைஞராக, கண்டுபிடிப்பாளராக, உடற்கூறு ஆய்வில் நிபுணராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ராகுல் சாங்கிருத்யாயன் எழுத்துக்களை நினைத்து பார்க்கும் போது உற்சாகம் எழும். அவரது எல்லையற்ற பயணங்கள், வாழ்வில் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன என காட்டிக்கொண்டிருக்கின்றன.
* பயணங்களால் கற்றதும் பெற்றதும்
மனிதர்களின் மொழி, இனம், பண்பாடு, வாழும் சூழல் மாறலாம். ஆனால் பல ஒற்றுமை உள்ளது. இன்று உலகமெங்கும் வாழும் மனிதர்கள் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறியவர்கள் என்று மரபணுவியல் ஆய்வு தெரிவிக்கிறது. இயற்கையை நேசிக்க வேண்டும். மனிதர்களும், விலங்குகளும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை பயணங்கள் காட்டுகின்றன. எங்கும் நன்மையும், தீமையும் உள்ளது.
பிறருக்கு உதவ வேண்டும், மற்றவர்களை துன்புறுத்தாது வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றார்கள். உலகம் நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள் என்ற இரண்டு பெரும் எண்ண அலைகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது. நல்ல சிந்தனை கொண்டு செயல்படுவோர், நிம்மதியும், அமைதியும், மனமகிழ்ச்சியும் அன்பும் சூழ்ந்து வாழ்வர்.
நல்ல சிந்தனைகளை வளர்த்து நலமாக உலக உயிர்களை அன்புடன் எதிர்கொண்டு வாழப்போகின்றோமா, சுயநலத்தோடு அவசர புகழுக்காக தீய முயற்சிகளில் ஈடுபட்டு தீமையில் வாழப்போகின்றோமா என்ற முடிவு நம் ஒவ்வொருவர் கைகளிலும் தான் இருக்கின்றது.
உங்கள் பொழுதுபோக்கு...
பயணம். நுால்கள் படிப்பது இன்னொன்று. ஜெர்மனியிலும், தமிழ்நாட்டிலும் வீட்டில் நுாலகம் வைத்துள்ளேன். தோட்டம் பராமரிப்பது, செடிகள் நடுவதில் அதிக நாட்டம் உண்டு.
உலகை அன்பாலும் அறிவாலும், நல்ல சிந்தனைகளாலும் நிரப்புவோம்!
வாழ்த்த... mythforg@gmail.com
ஜி.வி.ரமேஷ் குமார்