PUBLISHED ON : ஜன 15, 2016

சர்க்கரை கடலின் அலைகளில், அசைந்து வந்த அக்கரை தேசத்து கரும்புக்கட்டு, பசுமைப் புரட்சியில் பளிச்சென வளர்ந்த, மலர்ந்தும் மலராத மஞ்சள் மலர் மொட்டு, அதகளம் செய்யும் அழகாலே இளைஞர்களின் இதயங்களில் தினமும் நடக்குது ஜல்லிக்கட்டு. பிறந்தது துபாயாக இருந்தாலும் 'மெட்ராஸ்' தான் இவருக்கு 'அட்ரஸ்'. 'கவிதைப்' பொங்கலாய் 'கதகளி' ஆடும் கண்ணாலே திரையை திருவிழாவாக்கி ஆர்ப்பரிக்கும் அழகிய புயல், நடிகை காத்ரின் தெரஸா. 'தினமலர்' பொங்கல் மலருக்கு அளித்த பேட்டி...
* துபாயில் பிறந்த நீங்கள் இந்தியாவை பற்றி...
துபாயை விட இந்தியாவில் பல சிறப்புக்கள் இருப்பதாக உணர்கிறேன். என் தோழிகளை பார்க்க எப்போதாவது துபாய் செல்வேன். மற்றபடி இந்தியா தான் என் தாய்வீடு.
* தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்...
கல்லூரியில் படிக்கும் போது கன்னடம், மலையாளப் படங்களில் நடித்தேன். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இன்று என் ஆசை நிறைவேறியுள்ளது மகிழ்ச்சியாக நடிக்கிறேன்.
* மெட்ராஸ் படத்திற்கு பின் இடைவெளி...
இல்லை, தொடர்ந்து நடித்துக் கொண்டு தான் இருக்கிறேன். 'கதகளி'க்கு பின் 'கணிதன்', 'வீரதீரசூரன்' என, வரிசையாக படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன. இனி இடைவெளிக்கு இடமே இருக்காது.
* உங்கள் பொழுதுபோக்கு...
பொழுதுபோக்கிற்கு நேரம் கிடைப்பதில்லை. கிடைக்கும் நேரத்தில் புத்தகம் படிப்பேன், 'டிவி' பார்ப்பேன். 6 மாதத்திற்கு ஒரு முறை சமையலறை பக்கம் சென்று, சமைக்க முயற்சிப்பேன். அவ்வளவு தான்.
* 'கதகளி' படத்தில் உங்கள் கேரக்டர் ?
'மீனு குட்டி' என்ற கேரக்டரில் மெடிக்கலில் வேலை செய்யும் குறும்புக்கார பெண்ணாக நடித்திருக்கிறேன்.
* விஷாலுடன் ஜோடியாக...
விஷாலுடன் முதல் முறையாக ஜோடி சேர்கிறேன். நல்ல உழைப்பாளி, படப்பிடிப்பிற்கு நேரம் தவறாமல் தினமும் ஆஜர் ஆகிவிடுவார், நல்ல நடிகர்.
* மறக்க முடியாத 'கதகளி' அனுபவம்...
ஒரு நாள் படப்பிடிப்பின் போது 5 காஸ்ட்டியூம்கள் மாற்றி நடித்தது சவாலாக இருந்தது. கடலூரில் செயற்கை மழை வரவழைத்து படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் அன்று இரவு நிஜ மழையே வந்துவிட்டது. இக்காட்சிகள் மறக்க முடியாத அனுபவத்தை தந்தது.
* கிளாமராக நடிப்பீர்களா
என் வேலையே நடிப்பது தானே.
* தமிழ் ரசிகர்கள் பற்றி...
இந்த ஆண்டு வெளியாகும் என் படங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். ரசிகர்கள் மீது அன்பும், பாசமும் வைத்திருக்கிறேன், அவர்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கவிதா