/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
வானம் பார்த்த பாலை! - இந்திரா செளந்தர்ராஜன்
/
வானம் பார்த்த பாலை! - இந்திரா செளந்தர்ராஜன்
PUBLISHED ON : ஜன 15, 2024

அந்த 15 நாட்களை அவ்வளவு சுலபத்தில் மறந்து விட முடியாது. ராஜஸ்தானில் உள்ள 'ஜெய்சல்மர்' என்ற நகரில் தான் அந்த நாட்கள் கழிந்தன.
ஜெய்சல்மர்- தமிழர்களாகிய நமக்கொன்றும் அந்நிய நகரம் அல்ல. 1960களில் வெளியான எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்' திரைப்படமும், பின் 90களில் வெளியான கமலஹாசனின் 'விக்ரம்' திரைப்படமும் இந்நகரின் மாட மாளிகைகளையும், அந்த மாளிகை சார்ந்த பாலைவனப் பகுதிகளையும் நமக்கு எப்போதோ பரிச்சயமாக்கி விட்டன.
இப்போது நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மதுரையில் இருந்து மும்பை, அங்கிருந்து நேராக ஜெய்சல்மர் போகும் விமான பயண நேரம் மூன்றரை மணி நேரம் தான். இடையில் டிரான்சிட் எனப்படும் விமான மாற்றத்துக்குத் தான் அதை விட அதிக காலம் செலவானது.
ராஜஸ்தான் மாநில எல்லைக்குள் விமானம் பறக்கத் தொடங்கும் போதே தெரிந்து விட்டது அது பாரத தேசத்திலேயே பல விதங்களிலும் வித்தியாசமான நிலப்பரப்பு என்று... பார்க்கும் இடம் எல்லாம் மணல் மேடுகளும், எருக்கஞ் செடிகளும் தான் காட்சி தருகின்றன. ஒரு ஆலமர
நிழலையோ அரசமர நிழலையோ கற்பனை கூட செய்ய முடியாதபடி காட்சி தந்தது ஜெய்சல்மர்!
ஜெய்சல் என்னும் அரசன் மேரு எனப்படும் சிறுகுன்றின் மீது மாளிகை கட்டி ஆட்சி புரிந்ததன் நினைவாகவே அந்த பெயர் நகருக்கு வந்ததாம்.
ஜெய்சல்மேரு தான் திரிந்து ஜெய்சல்மர் ஆகி விட்டது.
மாளிகைகள் மிரட்டுகின்றன. அவ்வளவும் காவிநிற சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ளன. இன்றல்ல... நேற்றல்ல... ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாகவே...
சுண்ணாம்பு, சிமென்ட் ஏதுமின்றி எதை வைத்து இப்படி கட்டினார்கள் என்பதெல்லாம் இன்ஜினியர்கள் வியக்கும் விஷயம். பெரிதாக ஏரியோ, குளமோ ஏதுமில்லாத வானம் பார்த்த பாலை!
பகலெல்லாம் நெருப்பாய்... இரவெல்லாம் பனியாய் அமைந்த விசித்திர பருவநிலை. விவசாயம், கால்நடை வளர்ப்பு என்று எதற்கும் இடமில்லாத பாலைவன பூமியில் அமைந்திருக்கும் மாளிகைகள் மலைப்பை தருகின்றன. எப்படிக் கட்டினார்கள் இப்படி?
கூம்பு வடிவக் கூரைக் கட்டடங்களே எங்கும் இல்லை. தென்னங்கிடுகு, பனை ஓலைக் குடிசைகள் எல்லாம் தெற்கே நம் பகுதியில் தான்...
கற்சுவர்கள், கல்லால் ஆன தட்டையான கூரைகள் தான் இங்கே வீடுகளாக உள்ளன. சுற்றுலா வருபவர்களை மட்டுமே நம்பி இருக்கிறது இந்நகரம். பெரிய தொழிற்சாலைகளோ, வேலை வாய்ப்புகளோ இல்லை. பெரிய கிராமம் என்றே சொல்லலாம்.
தென் மாநிலங்களோடு ஒப்பிடும் போது 50 ஆண்டுகள் பின் தங்கியுள்ளனர். இந்திய மக்களின்
வாகனமாக ஆட்டோ ரிக் ஷாக்களை அறிவித்து விடலாம். ஜெய்சல்மரின் பிரதான வாகனமே ஆட்டோ தான்!
எத்தனை குறுகலான சந்துகளிலும் வித்தை காட்டிப் பறக்கின்றனர்.
டவுன் பஸ் கிடையாதா... என்று கேட்டேன். ரூட் பஸ்களையே நாங்கள் எப்போதாவது தான் பார்ப்போம் என்றனர். எங்கு பார்த்தாலும் மாடுகள் திரிகின்றன. சாணம் காலில் படாமல் யாரும் வீடு திரும்பவே முடியாது. கொல்லைப்புறம், மாட்டுக் கொட்டில் போன்றவை கலாசார பூர்வமாகவே இல்லாமல் போனதால் தெருவில் விட்டுவிட்டார்கள்! (இங்கே இருக்கிற நாமும் தானே தெருவில் விடுகிறோம்) சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருக்கும். ஜெய்சல்மர் நகருக்குள் ஒரு ஒட்டகத்தைக் கூட பார்க்கவில்லை.
அவைகளைப் பார்க்க 50 கி.மீ., பயணித்து தார் பாலைவனத்தின் துவக்கப் பகுதிக்கு செல்ல வேண்டும். அதற்காக பயணித்த போது வழியெங்கும் ராட்சஷ விசிறிகளோடு காற்றாலைக் கம்பங்கள். ஒருசிறிய விஞ்ஞான வளர்ச்சி! காற்றும், பனியைப் பூசிக் கொண்டு ஆங்காரமாய் வீசியபடி இருந்தது. இப்படி வீசும் காற்றை வைத்துப் பிழைக்க சமீப காலத்தில் ஒரு புதுவழியைக் கணடுபிடித்துள்ளனர்.
அதுதான் பாரா க்ளைடர் என்னும் பலுான் பயணம்! பாராசூட் போல விரிந்து கிடக்கும் பலுானில் ஒரு தொட்டில் கட்டி அதில் பறக்க விரும்புபவர்களை இறுகக் கட்டி மேலேற்றி விடுகிறார்கள். சாலை ஓரமாக அரை கிலோ மீட்டருக்கு ஒரு பலுான் பறந்தபடி இருக்க அதில் ஒருவர் தொங்கிக் கொண்டே நம்மை பரிதாபமாய் பார்க்கிறார். என்னையும் வவ்வாலாக்கப் பார்த்தனர். எவ்வளவு கட்டணம் என்று கேட்டேன். ஒரு சுற்றுக்கு 1500 ரூபாய் என்றனர். நான் எங்கள் ஊரிலேயே தொங்கிக் கொள்கிறேன் என மறுத்து விட்டேன். ஒரு பக்கம் இந்த பலுான்காரர்கள் என்றால் மறுபக்கம் 'டெசாட் ரைடர்' எனப்படும் ஜீப்புகள். அது போக திடுதிடுவென ஓடி வந்து 'ஏறிக்கையா' என்று கூறாமல் கூறும் ஒட்டகங்கள் என்று அந்த பாலைவனப்பகுதி ஒரு புதிய உலகமாக காட்சியளிக்கிறது.
இரவு தங்கி மகிழ டெசாட் கேம்புகள். அதில் குளிருக்கான நெருப்போடு, வித்தியாசமான ராஜஸ்தான் உணவுகள். கூடவே 'ரொய்ங் ரொய்ங்' என்று வயலினுக்கும் கிதாருக்கும் இடைப்பட்ட வாத்திய வாசிப்புகள்!சில இடங்களில் சினிமாவில் வருவது போல அழகிகளின் பெல்லி நடனமும் உண்டு என்றனர். (நான் பார்க்கவில்லை)
நம் வாகனம் அந்த எல்லைக்குள் நுழையும் போதே தேனீக்கள் போல வந்து மொய்த்துக் கொள்கின்றனர். இந்த பனிக்காலம் தான் அவர்கள் சம்பாத்தியத்திற்கான காலம். அதிக பட்சம் நான்கு முதல் ஐந்து மாதங்கள். அதன்பின் வரும் கோடை காலத்தில் சூரியனைத் தவிர ஒரு காக்கை, குருவி கூட அங்கு நடமாட முடியாது. அதிகாலையிலேயே வெப்பம் ஆரம்பித்து விடும்... உச்சிப் பொழுதில் வெப்பம் உச்சம்.
என் மனைவியுடன் 15 நிமிட கால அளவுக்கு நான் ஒட்டக சவாரி செய்தேன். 500 ரூபாய் கொடுத்தேன். அதில் 200 அவனுக்கு... 300 ஒட்டகத்துக்கு...! பாவம் அந்த விலங்கு. பரந்த இந்த உலகில் பசுமையான காட்டையோ, மேட்டையோ இறுதி வரை பார்க்காமல் அந்த பாலை மண் மேலேயே கிடந்து சாகிறது. இப்படி ஒரு இனம் மட்டும் இல்லை என்றால் இப்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் வேறில்லை. கடவுள் ஒட்டகத்தை இவர்களுக்காகவே படைத்ததாகத் தான் தோன்றுகிறது.
வழியெங்கும் உணவகங்கள்...
75 சதம் வெஜிடேரியன் தான். ராஜஸ்தானில் ஜெயினர்கள் அதிகம் இருப்பதே காரணம். கம்பு ரொட்டி தான் பிரதான உணவு. நம் ஊர் சாம்பார், ரசம், பொரியல், ஊறுகாய்க்கு அப்படியே நேர் எதிர்!
உணவுகளில் கலப்படம் இல்லை. விலையும் தேவலை. கொய்யாப்பழம் பார்க்க தேங்காய் சைசில் இருக்கிறது. கேரட் சாந்து வண்ணத்தில் ஒல்லியாக உள்ளது. மக்கள் பரம சாதுக்கள்.
நம் ஊர் போல ஒரு நாலுமுழ வேட்டி, ஒரு குற்றாலத் துண்டு என்றெல்லாம் இருக்கவே முடியாது. தலைப்பாகைக்கே 12 முழம் தேவை.
பெண்களின் உடைகளில் அதீத வண்ணங்கள், டிசைன்கள். அதுபோக ஏராளமான கைவினை அழகுப் பொருட்கள் என்று காட்சி தருகிறார்கள். ஊருக்குள் பெட்டிக் கடைகளோ முகப்பில் தொங்கும் வாரப் பத்திரிகைகளோ செய்தித்தாள்களோ கண்ணிலேயே படவில்லை. பெரிதாக சுவரொட்டி கலாசாரமும் இல்லை. அவ்வளவு பெரிய நகரில் ஒன்றோ இரண்டோ தான் சினிமா தியேட்டர்கள். நோ பஜ்ஜி நோ போண்டா... ஒன்லி பேல்பூரி...!
ஊர் திரும்பும் சமயம் ஜெய்சல்மரில் இருந்து ஜோத்பூர் வந்து பின் மதுரை வந்தேன். ஜோத்பூர் வரை 4 மணி நேர சாலைப்பயணம். இன்னும் நான்குவழிப் பாதை வரவில்லை.
ஜோத்பூர் நம் மதுரை போல பெரிய நகரம். ஊருக்குள் ஓரளவு மரங்களை வளர்த்து பசுமையை ஊட்டியுள்ளனர். நிலமும், நீருமே மனிதர்கள் மற்றும் ஏனைய உயிரினங்களின் வாழ்வைத்
தீர்மானிக்கின்றன என்பதற்கு ராஜஸ்தான் பெரும் சாட்சி. இதன் வளமான பகுதிகளில் ராஜபுத்திர வம்சமும் அவர்களின் வீரம் மிகுந்த வாழ்வும் வியப்பை அளிப்பதாக உள்ளன. அது ஒரு தனிக்கதை!
பூமி உருண்டையில் எவ்வளவோ நாடுகள், கண்டங்கள்! ஆனால் ஒரு ஐந்தாயிரம் சதுர கிலோ மீட்டர் நீள அகல பரப்புக்குள் ஐந்துவித நில அமைப்பு பாரத தேசத்துக்கு மட்டுமே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதனால்தான் உலகின் சர்வ மத இனத்தவர்களாலும் ஆளவும்பட்டிருக்கிறது.
மகா பெரிய கோயிலாக இருந்தாலும் ஒரு சிறு கருவறைக்காகத் தான் அது கட்டப்பட்டிருக்கும். அதே போல மகாபெரிய இந்த பூமியின் கருவறை பகுதியாக நம் பாரத நாடு இருப்பதை இந்த பயணத்தில் சிந்தித்து உணர்ந்தேன்.
'பாரத நாடு பழம் பெரும் நாடு நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்!' என்று பாடிய பாரதியும் நினைவில் வருகிறான்.