/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
ஐம்பெரும் 'இசை ராணிகள்' - இது வளையோசைகளின் மெல்லிசை கூட்டணி
/
ஐம்பெரும் 'இசை ராணிகள்' - இது வளையோசைகளின் மெல்லிசை கூட்டணி
ஐம்பெரும் 'இசை ராணிகள்' - இது வளையோசைகளின் மெல்லிசை கூட்டணி
ஐம்பெரும் 'இசை ராணிகள்' - இது வளையோசைகளின் மெல்லிசை கூட்டணி
PUBLISHED ON : ஜன 15, 2024

எந்த இசைக் கருவிகளும் மீட்டும் விரல்களில் பேதம் பார்ப்பதில்லை. திறமை இருந்தால் போதும் ஆணோ பெண்ணோ வாசிப்பது யாராக இருந்தாலும் இசையின் மென்மை வெளிப்படும். பெண்களால் முடியாது என ஆண் இசைக்கலைஞர்களால் துரத்தியடிக்கப்பட்டு பாதித்த பெண் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஐவர் கூட்டணி தான் 'ஸ்திரீ தாள தரங்' அமைப்பு.
இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா. கச்சேரியில் கடம், வயலின், மிருதங்கம், மோர்சிங், டோலக் என அனைத்து கருவிகளையும் பெண்களே வாசிப்பது தான். உள்ளூர் மட்டுமின்றி கடல் தாண்டி பல நாடுகளில் பயணித்து இசை ரசிகர்கள் மனங்களை மயக்கும் இந்த 'இசை ஸ்திரீகளின்' டீம் தலைவி சுகன்யா ராஜகோபால்.
அவர்...
சென்னை மாயவரம் தான் பிறந்தது, வளர்ந்தது. 'தமிழ் தாத்தா' என அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யரின் கொள்ளு பேத்தி நான். சிறுவயதிலேயே என்னை அறியாமல் இசையில் ஆர்வம் ஏற்பட்டது. கோயில்களில் கச்சேரிக்கு போனால் அப்போதே பெரிய மனிதர்கள் போல் தொடையில் கை தட்டி தாளம் போடுவேன்.
என் இசை ஆர்வத்தை பார்த்து எனக்கும், அக்காவுக்கும் வீட்டிலேயே பாட்டு கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின் விக்கு விநாயக்ராமின் தந்தை ஹரிஹர ஷர்மாவின் இசை பள்ளியில் சேர்ந்து பாட்டு, வயலின் இசைக்கும் என் இசை பயிற்சி பயணம் துவங்கியது.
மிருதங்கம் போன்ற தோல் வாத்தியங்கள் வாசிப்பதில் அதிக ஈடுபாடு இருந்தது. ஹரிஹர ஷர்மாவும் என் ஆர்வத்திற்கு ஆசி வழங்கி கற்றுக்கொடுத்தார். விக்கு விநாயக்ராமுடன் சேர்ந்த கச்சேரி ஒன்றில் பங்கேற்றபோது அவர் கடம், மிருதங்கம் இரண்டையும் சேர்த்து வாசித்தார். அப்போதுமுதல் கடம் மீதான எனக்கு காதல் அதீதமானது.
ஆனால் 'பெண்களால் கடம் வாசிப்பது கடினம். பெண்ணின் விரல்கள் மென்மையானவை. இதனால் ஆண்கள் போல் அவ்வளவு வாசிப்பது எளிதானதல்ல' என பலர் ஆர்வத்திற்கு 'பிரேக்' போட்டனர். ஆனாலும் என் ஆர்வத்தை பார்த்து 'கடத்திற்கு ஆண், பெண் என பேதம் கிடையாது.கடம் யார் வாசித்தாலும் அதில் இருந்து இசை வரும்' என கூறி விக்கு விநாயக்ராம் என்னை சிஷ்யையாக ஏற்றுக்கொண்டார். எனது 17 வயதில் இருந்து கடம் வாசிக்க ஆரம்பிச்சேன். நாட்டின் முதல் பெண் கடம் இசைக் கலைஞர் என்ற பெருமையும் பெற்றேன்.
பெங்களூருவில் ஒரு கச்சேரிக்கு சென்றிருந்தோம். 'ஒரு பெண் கடம் வாசிப்பதா. என்னால் கச்சேரி செய்ய முடியாது' என ஒரு பிரபல ஆண் கலைஞர் கூறியதால் அங்கு கடம் வாசிக்கும் வாய்ப்பை நான் இழந்தேன். இதற்காக மனதால் பெரிதும் கஷ்டப்பட்டேன்.
அதன் பின் துவங்கியது தான் 'கட தரங்'. ஒரு கட கலைஞர் ஒரே நேரத்தில் ஐந்து முதல் ஆறு கடங்களை வைத்து இசையமைப்பார்கள். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றேன். 'கட தரங்' நிகழ்ச்சியின்போது மட்டும் சொந்தமாக 'நோட்ஸ்' அமைத்து நானே வாசிப்பேன்.இதையடுத்து என்னை போல் இசை உலகில் புறக்கணிக்கப்பட்ட பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது தான 'ஸ்திரீ தாள தரங்'. இதில் நான் உட்பட 5 பேர் டீம் இருப்போம். கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூருவை சேர்ந்த ஜோத்ஷனா (வயலின்) லட்சுமி (மிருதங்கம்), பாக்கியலட்சுமி (மோர்சிங்), தீபிகா (டோலக்) டீம் என்னுடன் வெற்றிகரமாக பயணிக்கின்றனர்.
எங்கள் முதல் இசை கச்சேரி இந்திய கலாசார உறவுகளுக்கான கவுன்சிலில் (ஐ.சி.சி.ஆர்.,) நடந்தது. அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, சுவிச்சர்லாந்து உட்பட 15க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பறந்து ஆயிரக்கணக்கான கச்சேரிகளை நாங்கள் நடத்தியுள்ளோம்.
மத்திய அரசின் சங்கீத நாட்டிய அகாடமி புரஸ்கார் விருது, பெங்களூரு சங்கீத நாட்டிய அகாடமி, சென்னை நாரத கான சபா, சென்னை மியூசிக் அகாடமி, துபாய் ராகமாலிகா என பல அமைப்புகளின் விருதுகள் கிடைத்துள்ளன.
இந்த சாதனைகளை தாண்டியும் தமிழகத்தில் பிறந்த எனக்கு தமிழக அரசின் ஒரு விருது இன்னும் கனவாகவே உள்ளது. இருப்பினும் இந்த 'ஸ்திரீகளின்' இசை பயணம் 'நான் ஸ்டாப்'ஆக தொடர்ந்துகொண்டே இருக்கும்.
பொதுவானது இசை
இசை பொதுவானது. இத்துறையில் பெண்களால் சாதிக்க முடியாது என்ற பார்வை முதலில் மாற வேண்டும். அதை மாற்றும் முயற்சியில் தான் இந்த கூட்டணி உருவாகியது. குடும்ப பொறுப்பு, குழந்தைகள் என கடமைகள் இருந்தாலும் எங்கள் இசை பயணம் எல்லைகளின்றி கடந்து செல்லும்.
- தீபிகா
சங்கீத குடும்பம்
1992 முதல் இசை கலைஞராக உள்ளேன். 'ஸ்திரீ தாள தரங்' மொத்த பலம், தலைவர் சுகன்யா. யாரிடம் திறமை இருந்தாலும் அதை மதித்து அங்கீகரிப்பார். ரசிகர்களின் நாடித்துடிப்புக்கு ஏற்ப கச்சேரி அமைவது தொடர்பாக நடக்கும் ஆலோசனைகளை யாரும் மறுக்காமல் ஏற்றுக்கொள்வோம். அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கு கச்சேரியில் என்ன கொடுக்க வேண்டும் என்று ஆரோக்கியமாகவும் பேசுவோம். டீம் என்பதை தாண்டி சங்கீத குடும்பமாக மாறிவிட்டோம்.
- லட்சுமி