/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
கங்கா தேவிக்கு 'சப்த கன்னி பொங்கல்' - மீனவ மக்களின் பாரம்பரிய வழிபாடு
/
கங்கா தேவிக்கு 'சப்த கன்னி பொங்கல்' - மீனவ மக்களின் பாரம்பரிய வழிபாடு
கங்கா தேவிக்கு 'சப்த கன்னி பொங்கல்' - மீனவ மக்களின் பாரம்பரிய வழிபாடு
கங்கா தேவிக்கு 'சப்த கன்னி பொங்கல்' - மீனவ மக்களின் பாரம்பரிய வழிபாடு
PUBLISHED ON : ஜன 15, 2016

தமிழர்களின் பாரம்பரிய விழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு முறையில் பொங்கல் விழாவை கொண்டாடுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலூர் ஊராட்சியை சேர்ந்த மோர்பண்ணை கிராமத்தில் 'சப்த கன்னி பொங்கல்' வைக்கின்றனர்.
இந்த கிராமத்தில் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். மீன்பிடிப்பதே இவர்களின் பிரதான தொழில். மீன்களை அள்ளித்தரும் கடலை 'கங்காதேவியாக' இவர்கள் போற்றுகின்றனர். தை முதல்நாள் பொங்கல் அன்று ஊர்மத்தியில் உள்ள ஸ்ரீரணபத்ர காளியம்மன் கோயில் முன் அனைவரும் கூடி 7 மண் பானைகளில் பொங்கல் வைப்பர். இந்த பொங்கலை சப்த கன்னிகளே (7 பெண் குழந்தைகள்) வைக்கின்றனர். பொங்கலுக்கு 5 தினங்களுக்கு முன்பே குழந்தைகளை தேடும் படலம் துவங்குகிறது. பானையில் பால் பொங்கியதும், பொங்கலை காளியம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்துவர்.
அதே நாளில் தென்னை பாளையில் பாரம்பரிய பாய்மர படகை உருவாக்குகின்றனர். அந்த படகிற்கு பல வண்ணங்களில் பெயின்ட் அடித்து அழகுப்படுத்துகின்றனர்.அதில் பூஜைக்குரிய 2தேங்காய் மூடிகள், பழம், பூ, 7 பானைகளிலிருந்தும் எடுக்கப்பட்ட பொங்கல், ஊதுபத்தி போன்ற அபிஷேக பொருட்களை வைப்பர்.
பின் மேளதாளத்துடன் சப்த கன்னிகள் தங்களது தலையில் கரகத்தை கடலுக்கு எடுத்து செல்வர். கரக செம்பில் மஞ்சள் கலந்த பால், மாவிலை போன்றவை இருக்கும். அவற்றை கடலில் கொட்டி வழிபடுவர். அதேசமயத்தில் பாய்மர படகையும் ஆண்கள் தூக்கி வந்து கடலில் விடுவர். அந்த கப்பல் காற்று அடிக்கும் திசையில் செல்லும்.
அந்த படகு, பூஜை பொருட்களுடன் ஆழ்கடலில் இருக்கும் கங்காதேவியிடம் சேருவதாக கிராமமக்கள் நம்புகின்றனர். கிராமத்தலைவர் பொ.மக்கு வாட்டர்துரை, செயலர் கா.காளிச்செல்வன், பொருளாளர் வீ.காளிதாஸ் கூறியதாவது:
கங்காதேவிக்கு பூஜை நடத்தினால் ஆண்டு முழுவதும் மீன்வளம் கொட்டும் என்பது எங்களது நம்பிக்கை. ஊர் கூட்டம் நடத்தி கன்னி பெண்களை தேர்வு செய்கிறோம். 9 முதல் 13 வயதுள்ள குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொரும் ஆண்டும் வெவ்வேறு குடும்பத்திற்கு வாய்ப்பு கொடுப்போம்.
பெரிய கிராமமாக இருப்பதால் கன்னிகளை தேடுவதில் எந்த சிரமமும் இருந்தது இல்லை. காலண்டரில் குறித்த நல்ல நேரத்திலேயே பொங்கல் வைப்போம். அன்று யாரும் கடலுக்கு செல்ல மாட்டோம். சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த திருவிழாவில் பங்கேற்பர். கடலில் விடும் படகில் எங்களது முன்னோர்கள் ஒரு கிராம் அளவிற்கு தங்கப் பொருள் வைப்பர். இந்த காலக்கட்டத்தில் விலை அதிகம் என்பதால் தங்கத்தை மட்டும் வைப்பதில்லை, என்றனர்.
ஜெகா