sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 02, 2025 ,கார்த்திகை 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

கதை: குற்றவாளி

/

கதை: குற்றவாளி

கதை: குற்றவாளி

கதை: குற்றவாளி


PUBLISHED ON : ஜன 14, 2014

Google News

PUBLISHED ON : ஜன 14, 2014


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''சே...என்ன பிழைப்புடா இது...'' என்று, நான் அங்கலாய்த்துக் கொண்டிருந்த மாலை நேரம். நான் கம்பவுண்ட்ராக இருந்த கிளினிக்கில் ஒரே கூட்டம். ஏற்கனவே நூத்தி சொச்சம் டோக்கன் ஓடி விட்டது. மணி ஆறு. இன்னும் டாக்டர் வந்தபாடில்லை. இப்போது வந்தால் தான் இரவு பதினொரு மணிக்காவது நான் வீட்டுப்பக்கம் தலை காட்ட முடியும். டாக்டர் இப்போது ஹாய்யாக டென்னிஸ் விளையாடிக் கொண்டிருப்பார்.

கிளினிக் வாசலில் ஒரே சத்தம். என்னவென்று பார்க்க ஓடினேன். தான் வந்து இறங்கிய ஆட்டோ டிரைவரைக் காய்ச்சு...காய்ச்சு என்று காய்ச்சிக் கொண்டிருந்தார், ஒரு மகானுபாவர். ஆனால், பாவம் அந்த ஆட்டோ டிரைவர் எதிர்ப் பேச்சு பேசாமல் தலையை குனிந்தபடி, அவரது திட்டுக்களை வாங்கிக் கொண்டிருந்தான். டாக்டருக்காக காத்துக் கொண்டிருந்த பொழுது போகாத நோயாளி ஒருவர் திட்டிக் கொண்டிருந்தவரிடம் போய், ''என்ன சார் ஆச்சு? என்ன செஞ்சான், இந்த ஆட்டோ டிரைவர்?,'' என்று கேட்டு எரிகின்ற தீயில் எண்ணெய் விட்டு வளர்த்து விட்டார்.

''நீங்களே கேளுங்க சார் நியாயத்தை. நான் பாட்டுக்கு தேமேன்னு கோவிலுக்கு போயிட்டு இருந்தேன். இவன் கண் மண் தெரியாம ஆட்டோவ ஓட்டிக்கிட்டு வந்து என் மேலே மோதிட்டான். பாருங்க

எப்படி ரத்தம் கொட்டுதுன்னு,''

''அப்படி என்னப்பா அவசரம் பார்த்து ஓட்டக் கூடாது? பாவம் பெரியவரு... அவருக்கு சுகர், பிரஷர்னு கம்ப்ளெயின்ட் வேற இருக்கும். அதோட சேத்து இது வேறயா?,''

அடிபட்டவர், ஆட்டோ டிரைவர் இருவரையுமே ஒரு சேர எரிச்சல் மூட்டுவதில் வல்லவராக இருந்தார், நியாயம் சொல்ல வந்தவர்.வேறு ஏதும் ரசாபாசம் ஆகுமுன் நான் அங்கே ஓடினேன்.

''பாத்தியா ராமு, இந்த ஆட்டோக்காரன் பண்ண அக்ரமத்தை. அவன் பாட்டுக்கு என்ன இடிச்சித் தள்ளிட்டான். முழங்கால்ல அடி. இங்கே மோவாய்க்கட்டைல காயம். நெத்தியில ஏதோ காயம். உள்காயம் என்ன பட்டுருக்கோ தெரியல. கட்டைல போற பய. நாய்க்கு பொறந்த பய...,'' வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருந்தவரைப் பார்த்து திடுக்கிட்டேன். இவர் ராமசாமி தானே? எங்கள் டாக்டரின் நெடுநாளைய பேஷன்ட். பயங்கரமான சண்டைக் கோழி. வாயைத்

திறந்தால் வையும் வார்த்தைகள் சரளமாக வந்து விழும். அதுவரை அடிபட்டவருக்காகப் பரிதாபப்பட்ட நான், அதன்பின் ஆட்டோ டிரைவருக்காகப் பரிதாபப்பட்டேன். பாவம் இந்த ராட்சசனிடம் மாட்டிக் கொண்டானே! எவ்வளவு திட்டுத் திட்டி எவ்வளவு பணம் பிடுங்கிக் கொண்டு விடப் போகிறாரோ தெரியவில்லை. பலியிடுவதற்கு முன் நடுங்கிக் கொண்டு நிற்கும் ஆடு மாதிரி தலையைக் குனிந்து கொண்டு நின்றிருந்தான் அட்டோ டிரைவர்.

''டேய் இங்க வாடா. என்னைக்

கைத்தாங்கலாக் கூட்டிக்கிட்டு போய் அந்த பெஞ்சுல உக்கார வை,'' ஆட்டோ டிரைவரை அதட்டிக் கொண்டிருந்தார் ராமசாமி.

''டேய் எனக்கு மயக்கமா வருது.

பக்கத்துல ஜூஸ் கடைல நிறைய குளுக்கோஸ் போட்டு சாத்துக்குடி ஜூஸ் வாங்கிட்டு வா. நான் பாட்டுக்கு மயங்கி

விழுந்துட்டா, ஆக்சிடெண்ட் கேஸ்

இன்னும் சிக்காலப் போயிரும்,'' ராமசாமியின் மிரட்டல்களைக் கேட்கவே வெறுப்பாக இருந்தது. நான் அந்த ஆட்டோ டிரைவராக இருந்தால் ராமசாமியை அடித்துப் போட்டு விட்டு சாகட்டும் என்று அப்படியே போயிருப்பேன். இவன் பாவம் நியாயத்துக்குப் பயந்து கொண்டு அவரை டாக்டரிடம் அழைத்து கொண்டு வந்திருக்கிறான். அவனை இப்படிச் சதாய்க்கிறாரே, இந்த மனுஷன் என்று வெறுப்பு ஏற்பட்டது.ஆட்டோ டிரைவரின் பரிதாபமான முகத்தைப் பார்த்தேன். எங்கள் ஏரியாக்காரன்தான். எங்கள் ஏரியா என்றால் இந்த ராட்சசன் ராமசாமியைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்குமே? அப்புறம் ஏன் ஆட்டோவை நிறுத்தி உதவி செய்தான்? சாகட்டும் என்று விட்டு விட்டுப் போயிருக்க வேண்டாமோ?

அடுத்த அரை மணி நேரத்தில் ராமசாமி அவனைச் சித்திரவதை செய்து விட்டார். அவனை அனுப்பித் தன் மகனை வீட்டிலிருந்து அழைத்து வரச் செய்தார். பின் மகனுக்குக் காபி வாங்கி வருமாறு கட்டளையிட்டார்.

எல்லாவற்றையும் பொறுமையாகச் செய்த ஆட்டோ டிரைவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. டாக்டர் வந்தவுடன் எப்படியாவது கெஞ்சிக் கூத்தாடி, இந்த ராமசாமியை முதலில் உள்ளே அனுப்பி விட வேண்டும். அந்த ஆட்டோ டிரைவருக்குச் சீக்கிரம் விடுதலை வாங்கித் தர வேண்டும் என்ற தவிப்பு என்னுள் ஏற்பட்டது.டாக்டர் வந்தவுடன் அவரை வழியிலேயே மடக்கித் தனக்கு அடிபட்ட விவரத்தைச் சொன்னார் ராமசாமி. கூடவே ஆட்டோ டிரைவருக்கு அர்ச்சனை வேறு. இப்போது கிளினிக்கில் காத்திருந்த மொத்த கூட்டத்தின் பார்வையும் ஆட்டோ டிரைவர் பக்கம் தான் இருந்தது.

என்னதான் தப்பு செய்து விட்டான் என்றாலும், ஒரு ஆளை இப்படியா வறுத்து வாயில் போட்டுக் கொள்வது? டாக்டர் ராமசாமியை முதலில் உள்ளே அனுப்புமாறு சொன்ன போது, முன்னாலேயே டோக்கன் வாங்கிய யாரும் முணுமுணுக்கவில்லை. ஆட்டோ டிரைவரிடம் டாக்டர் பீஸ், மருத்துவ செலவு வாங்கிக் கொண்டு தன்னையும், தன் மகனையும் இலவசமாக வீட்டில் விட்டு விட்டுப் போகுமாறு சொல்லப் போகிறார் அந்த இரக்கமில்லாத மனிதர் என்று ஊகித்தேன்.

ராமசாமியை டாக்டர் உள் அறையில் பரிசோதித்துக் கொண்டிருந்த போது, ஆட்டோ டிரைவர் என்னைத் தனியாக அழைத்துக் கொண்டு போனான்.

''அண்ணே கையில இருக்கற பணம் செலவுக்குப் பத்தாது. நான் பக்கத்துல போய்ப் பணம் வாங்கிட்டு வந்துடறேன். அந்தாளு வெளியே வந்தா சொல்லிருங்க. அப்புறம் நான் விட்டுட்டுப் போயிட்டேன்னு கத்தப் போறான்.

ஆட்டோவ இங்கேயே வச்சிட்டு வாடகை சைக்கிள் எடுத்துட்டுப் போயிட்டு

வந்துடறேன்,''

எனக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது.

''வாடகை சைக்கிள் எதுக்குப்பா?

என்னோட சைக்கிள் இருக்கு.

எடுத்துட்டுப் போ. இந்தா சாவி,''

''ரொம்ப தாங்க்ஸ் அண்ணே,''

''ஏம்ப்பா நாயை அடிப்பானேன்... னு ஒரு பழமொழி கேட்டிருக்கியா?''

சரியான ஆளைப் பார்த்து மோதினயா. நீயா இருக்கப் போய் இவ்வளவு பொறுமையா இருக்க. நானா இருந்தா இவன இன்னொரு தரம் ஏத்திக் கொன்னுட்டுப் போயிருப்பேன்,''

''அண்ணே நான், இந்தாள் மேல

ஏத்தலண்ணே''

''ஏன்யா உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு. நீ ஏத்தலைன்னா போடா நாயேன்னு விட்டுட்டுப்போக வேண்டியது தானே. அவன் உன்ன நாய்

மாதிரி நடத்தறான். நீ அவன் தாடையைப் பிடிச்சிக் கொஞ்சிக்கிட்டு இருக்க?''

''இல்லைண்ணே இந்தாளு மேல

ஆட்டோவ மோதினது என் பிரண்ட்

அப்துல். அப்ப நான் அவன் கூட அதே ஆட்டோவுல வந்துக்கிட்டு இருந்தேன். அவன் மேல முழுத் தப்புன்னும் சொல்ல முடியாது. இந்தாள் மேலயும் முழுத் தப்புன்னு சொல்ல முடியாது. எதிர்பாராத ஆக்சிடன்ட். அவ்வளவுதான். அப்துல் இந்த ஏரியா இஸ்லாமிய சங்கத்துல ஏதோ பதவியில இருக்கான். இந்தாளும் ஏதோ இந்து மதம் சம்பந்தப்பட்ட

சங்கத்துல இருக்கான்.

அப்துல் தான், இவன் மேல ஏத்தினான்னு தெரிஞ்சா இந்தாளு

அதப் பெரிய கலவரமாக ஊதிவிட்டுருவாண்ணே.

அப்புறம் வெட்டியா நாலஞ்சு

உயிரு போகும். நம்ம எல்லோருக்கும் நாலு நாள் பொழைப்பு போகும். அதனால தான் இந்தாளு ஆட்டோல

அடிபட்டுக் கீழ விழுந்து கிடக்கும் போது, நான் அப்துல போகச் சொல்லிட்டு,

நான்தான் மோதினேன்னு சொல்லி

கூட்டியாந்தேன்''

அந்த ஆட்டோ டிரைவரை நோக்கிக் கைகூப்பி வணங்கினேன்.

-வரலொட்டி ரங்கசாமி






      Dinamalar
      Follow us