PUBLISHED ON : ஜன 14, 2014

பாட்டி வைத்தியங்களுக்கும், பச்சிலை வைத்தியங்களுக்கும், அன்றும், இன்றும், என்றும் தனி மவுசு தான். பாட்டிகள் மறைந்து வருவதால், பாட்டி வைத்தியமும் மறைந்து வருகிறது. போலிகள் பலர், படையெடுத்ததால், பச்சிலை வைத்தியம் மேல் பயம் வந்தது.
நம்பிக்கையான பச்சிலை வைத்தியர்களை, பார்ப்பதே அரிதாகிவிட்ட காலத்தில், 'தை' மாதத்தில் மட்டும் பச்சிலை மருத்துவம் செய்யும் ஒருவரை, தேடிப்பிடித்தோம் தேனியில்! மஞ்சிநாயக்கன்பட்டி விநாயகர்கோயில் தெருவில் தான், பச்சிலைகளுடன் பழகும் காளிமுத்து, 65, வசிக்கிறார். அவர் வீட்டருகே சிறிது நேரம் நின்று பார்த்தால், 'அய்யய்யோ... பாம்பு கடிச்சிடுச்சே... தேள் கடிச்சிடுச்சே... வெறிநாய்க்கடிச்சிடுச்சே... எலிக்க
டிச்சிடுச்சே...' என, ஓலமிட்டு, ஓடிவருபவர்களை, காணமுடியும்.
தினமும் மருத்துவம் செய்யும் போது, 'தை' மாத மருத்துவர் என, எப்படி கூறமுடியும்? என்கிறீர்களா? ஆம், பச்சிலை மருந்திற்கு தனி மவுசு இருப்பது போல், 'தை' மாதம் முதல் நாளில் பச்சிலைக்கு தனி மவுசு இருக்குமாம். அன்று, பச்சிலை மருந்து உண்பதை, சடங்காகவே ஒருதரப்பினர் பின்பற்றி வருகின்றனர்.
இதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர், மஞ்சிநாயக்கன்பட்டி வந்து செல்கின்றனர். அதற்கு 'தை பச்சிலை' எனப் பெயர். மக்களின் நம்பிக்கை சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால், அதில் ஆராய்ச்சி மேற்கொள்வதை விட, அதை பின்பற்றி வருவோரின் எண்ணிக்கையை பார்க்கும் போது தான், ஆச்சரியமாக உள்ளது.
இது குறித்து காளிமுத்துவிடம் கேட்ட போது, ''என் குருநாதர் முத்தையாவிடம் தான், பச்சிலை வைத்தியம் கற்றேன். தவிர, முறையாக சித்த மருத்துவமும் படித்துள்ளேன். அவரது மகளை மணமுடித்து, குருவாக்கு பெற்றேன். முத்தையா மறைவிற்கு பின், அவர் பணியை தொடர்ந்து வருகிறேன். 'தை பச்சிலைக்கு' கட்டணம் வசூலிப்பதில்லை. அங்குள்ள உண்டியலில், விரும்பியவர்கள், காணிக்கை செலுத்திச் செல்வர். இது தவிர, அமாவாசை நாட்களில் வழங்கப்படும் பச்சிலைக்கும், தனி வீரியம் உண்டு.திண்டுக்கல் சிறுமலை, தேனி மலை, போடி மரக்காமலை, தரைக்காடுகளில் இருந்து, பச்சிலை சேகரிப்போம். மூலிகை சேகரிக்க நிறைய செலவாகிறது; அந்த ஒரு காரணத்திற்காக தான், மக்கள் தரும் காணிக்கையை ஏற்றுக்கொள்கிறோம். விஷக்கடிக்கு எப்போது அழைத்தாலும், இலவசமாக சிகிச்சை அளிப்பேன்,'' என்றார்.
தை மாதத்தில் எத்தனையோ சிறப்புகளை அறிந்திருக்கிறோம்;
பாருங்கள், இப்படியும் ஒரு சிறப்பு, நமக்கு தெரியாமலேயே, நம் அருகில் இருக்கிறது. உங்களுக்கும் 'தை' பச்சிலை பற்றி அறிய ஆர்வம் இருந்தால்,95005 47473ல் பேசிப்பாருங்கள்!