PUBLISHED ON : ஜன 14, 2014

'யோகா' உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாய் வைக்கும் என்பதை, உலகமே உணர்ந்ததால், இன்று யோகா பயிற்சிக்கு படையெடுத்து வருகின்றனர்.
யானை உடலாய் இருப்பவர்களுக்கு, பூனை உடலாய் மாற ஆசை; பூனை உடலாய் இருப்பவர்களுக்கு, யானை போன்ற வலுவை வாங்க ஆசை. இவை தான், யோகாவை நாடி வருவோரின் ரகம்.
மனிதர்களுக்கான இப்பயிற்சியை, யானை தேடினால்... அது எப்படி நடக்கும் என்கிறீர்களா? நடிக்கிறது, அதுவும் நாம் வசிக்கும் பகுதியில்... யானையை குத்துவதும், கத்துவதும் தான் பாகனின் வேலை என, நாம் நினைத்திருப்போம், இந்த பாகனோ, தன் யானைக்கு யோகா கற்றுக் கொடுத்து, அதன் ஆரோக்கியத்திற்கு சிரத்தை எடுத்து வருகிறார்.
சிவகங்கை திருப்புத்துலுர் திருத்தளிநாதர் கோயில் யானைப்பாகனான வேலுராஜ் என்பவர் தான், அந்த பெருமைக்கு சொந்தக்காரர். அவர் வளர்க்கும் கோயில் யானை சிவகாமி தான், அந்த 'யோ(க)கா ராணி'.
'30ஐ கடந்துவிட்டால், முன்னெச்சரிக்கை இருக்க வேண்டும்,' என, டாக்டர்கள் கூறுவார்கள். இந்த யானைக்கு 44 வயது கடந்ததால் என்னவோ, அதன் பகனான வேலுராஜிற்கு, அதன் ஆரோக்கியத்தின் மீது அதீத கவனம் செலுத்தும் எண்ணத்தை உருவாக்கியது.
உணவிலும், உடற்பயிற்சிலும் தான், சிவகாமியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்த முத்துராஜ், அதற்கு யோகா கற்றுத்தர முடிவு செய்தார். காட்டில் வாழும் யானைகளுக்கு, அவற்றின் எதார்த்தமான வாழ்க்கையே உடற்பயிற்சியாக மாறுகிறது. அதனால், அவற்றில் ஆயுலும், ஆரோக்கியமும் பாதுகாக்கப்படுகிறது.
ஓரிடத்தில் நிலையாக வாழும் கோயில் யானைகளுக்கு, இது போன்ற பயிற்சிகள் தான் பயனளிக்கும் என்பதை முத்துராஜ், முழுமையாக நம்பினார். 'ருத்ர யோகா, ஆசன யோகா உள்ளிட்ட 12 யோகாக்கள், யானைகளுக்கு கற்றுத்தந்தார். இவை, யானைக்களுக்கான பிரத்யேக யோக முறைகளாம்.
தமிழக அறநிலையத்துறை கோயில் யானைகளில், நீளமான துதிக்கை(7 அடி) கொண்ட சிறப்பு, இந்த பெண் யானைக்கும் உண்டு. கற்ற யோகா மூலம், அதன் துதிக்கை மட்டுமல்ல, ஆயுளும் கூடியுள்ளது.
பொதுவாகவே, கோயிலுக்கு வரும் பக்தர்கள், யானையிடம் ஆசிபெற ஆர்வம் காட்டுவார். அதிலும், இது 'யோகா' யானை என்பதால், பார்க்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
யானைக்கு யோகா கற்றுத்தரும் முத்துராஜிடம் கேட்ட போது, ''மதுரை திருப்பரங்குன்றத்திலுள்ள என் மாமாவிடம், யானை வளர்ப்பு பயிற்சி பெற்றேன். அந்த கலைகளை, சிவகாமிக்கு கற்றுக்கொடுக்கிறேன். நின்று, அமர்ந்து, படுத்தபடி, கால்களை துலுக்கி, தும்பிக்கையை உயர்த்தி, சிவகாமி யோகா செய்யும் அழகு, கண்கொள்ளாதது.
கால்கள், காது, துதிக்கை, தாடை, நாடிக்கு என, தனித்தனி யோகா பயிற்சி தருகிறேன். காலையும், மாலையும் 260 லிட்டர் குடிநீர் தருகிறேன். தினமும் 2 முறை, கோடையில் 3 முறை குளியல். பிரகாரத்திலுள்ள மண் தரையில் நடை பயிற்சி, வாழை மரத்தை மிதிக்க வைத்து, பாதத்திற்கு பயிற்சியளிக்கிறோம்,'' என்றார். இத்தனை பயிற்சிகளுக்கு பிறகும், தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமிற்கும் சிவகாமி சென்றிருக்கிறாள்.
-அன்பு