கி.பி.3003 (அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி ( பகுதி-7)
கி.பி.3003 (அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி ( பகுதி-7)
PUBLISHED ON : செப் 24, 2010

இதுவரை: இந்திய விஞ்ஞானி பிரகடீஸ்வர் மீது சந்தேகம் கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் பிரதமருக்கு தகவல் தெரிவித்ததால், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் பிரகடீஸ்வர்.
இனி-
வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பிரகடீஸ்வர், 'அய்யோ நானா குற்றவாளி? நானா செயற்கை தீவிற்கு உளவாளி? வீடு வீடு என்றிருந்தால் நாட்டின் நலனில் மிகுந்த அக்கறை உள்ள நம்மை போன்ற விஞ்ஞானிகளுக்கு ஒரு சிறு பொழுதாவது வீட்டிற்காக செலவிட நேரிடுமே என்று அஞ்சி திருமணம் செய்யாமல் நாட்டு நலனுக்கே என்று முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்த நானா தேசக் குற்றம் இழைத்தவன்?' அவர் எண்ண ஓட்டங்கள் ஓட ஓட அவர் கண்கள் குளம் ஆகின. அப்போது வந்தான் சிறுவன் கைலாஷ்.
''மாமா... ஏன் இந்த சோகம்? தாங்கள் நிச்சயம் குற்றமற்றவர்; நிரபராதி. தாங்கள் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இந்த நாடே குற்றவாளிதான். உண்மையை வெளிக்கொணர்ந்து நீங்கள் குற்றமற்றவர் என்று இந்த கைலாஷ் நிரூபிக்கிறேன். இது சத்தியம் மாமா!'' என்று அவன் கூறும் போது, அவன் கண்களுள் ஒரு ஒளி மின்னியது.
பிரகடீஸ்வர் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டார்.
''கைலாஷ்... என்னை இந்த நாடு நம்பவில்லை. ஆனால், இந்த மாமா உன்னை முழுமையாக நம்புகிறேன். உன் சபதத்தை நீ செய்து முடி. உளவு நட்சத்திரத்தையே உலகம் அறிய முடியாதபோது, நீ அறிந்து எனக்கு கூறியவன். அதனால் உன்னால் முடியாதது எதுவுமில்லை. ஆம் கைலாஷ். நீ சிறந்த மதிநுட்பம் படைத்த சிறுவன். உன் பணியில் மேலே செல்!'' பிரகடீஸ்வர் உணர்ச்சி வசத்துடன் பேசி அவனை தழுவிக் கொண்டார்.
அப்போது பி.பி.பி., என்ற மெல்லிய ஒலி கேட்டது. அதை கைலாஷ் கேட்டான். ஆனால், பிரகடீஸ்வர் அதை கேட்கவில்லை. சிறுவன் கைலாஷ் யோசித்தபடி நின்ற போது மீண்டும் அதே பி.பி.பி., சமிஞ்சை ஒலி. என்ன இது? இது எங்கிருந்து வருகிறது? ஒருவேளை மாமா ஏதாவது கம்பி இல்லா மின் கருவி வைத்திருப்பாரோ என்று அவரையே வைத்த விழி விலகாமல் பார்த்தபடி இருந்தான்.
''கைலாஷ் என்ன ஆயிற்று? ஏன் என்னையே பார்த்தபடி இருக்கிறாய்?''
மீண்டும் பி.பி.பி., ஒலி. ''மாமா இப்போது ஒரு சமிஞ்சை ஒலி வந்ததே கேட்டீர்களா?'' என்றான் கைலாஷ்.
''என்ன? சமிஞ்சை ஒலியா? எனக்கு ஒன்றும் விழவில்லையே,'' என்றார் பிரகடீஸ்வர்.
அப்போது மீண்டும் அதே ஒலி வரவும் கைலாஷ் உன்னிப்பாக நோக்கினான். அது அவர் தலையில் இருந்து வந்ததாக உணர்ந்தான்.
''ஏன் மாமா... தாங்கள் தலையில் இருக்கும் கருகரு முடி இயற்கையானதா? இல்லை செயற்கை முடியா?''
''கைலாஷ்! இது செயற்கை முடிதான். தேசத்துரோகி சகாணி என் 50வது பிறந்தநாள் பரிசாக பாரிசில் இருந்து வாங்கியதாக இந்த செயற்கை முடியை அணிவித்தான். என் தோற்றத்துக்கு இது மிகப்பொருந்துவதால் நான் இதை தலையில் நிரந்தரமாக பதிய வைத்து விட்டேன்.''
''அய்யோ அப்படியா? அப்படி என்றால் அந்த சமிஞ்சை ஒலி தங்கள் முடியில் இருந்துதான் வருகிறது.''
''என்ன... என் செயற்கை முடியில் இருந்தா?'' என்ற பிரகடீஸ்வர் அதிர்ச்சியுடன் அந்த முடியை பலம் கொண்டு பிடுங்கி எறிந்தார். அது கீழே விழவும் மீண்டும் பி.பி.பி., என்ற ஒலி கேட்டது.
''மாமா கண்டுபிடித்துவிட்டேன். நீங்கள் அணிந்திருந்த செயற்கை முடியில் ஒரு முடியில் இருந்துதான் அது கேட்கிறது,'' என்று கூறி அந்த முடியை காட்டினான். பிரகடீஸ்வர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.
அப்படி என்றால் இந்த முடி உளவு சொல்லும் மின் இழை. ஓ... ஒரு வளையமும் அவனிடம் இருந்து நமக்கு கிடைத்ததே. அது அவன் தலைமுடியில் இருந்து அல்லவா உருண்டு ஓடியது. அப்படி என்றால் அந்த வளையத்தை வைத்து இந்த மின் இழை முடி மூலம் என் முழு செயல்பாடுகளையும் உளவறிந்து செயற்கை தீவிற்கு செய்தி அனுப்பியிருக்கிறான் அந்த தேசத் துரோகி!'' என்ற படபடப்புடன் பேசியபடி தன் உள் பாக்கெட்டில் பத்திரமாக வைத்திருந்த வளையத்தை அந்த மின் இழை முடி மீது வைத்தார். அப்போது சங்கேத மொழி பேசப்பட்டதை இருவரும் கேட்டனர்.
''டிக் டிக் டிக் - 004 - ரோஸ் ரோஸ் - ரெடி - ஓவர்!''
பிரகடீஸ்வர் அதிர்ந்து போயிருந்த வேளையில், ''ஏன் மாமா இதை வைத்தே தாங்கள் நிரபராதி என்று நிரூபித்து விடலாம் இல்லியா?'' என்று கேட்டான் கைலாஷ்.
''முடியாது. என் தலையில் உள்ளது எனக்கே தெரியாமல் போனது அவமானம் இல்லியா? இதை யாராவது நம்புவரா? நானும் உடந்தை என்று தீர்மானம் அல்லவா செய்து விடுவர். நம்மை நாமே காட்டிக் கொண்டு தண்டனை பெற இது வகை செய்து விடும். ஆனால், ஒன்று செய்யலாம். இந்த சங்கேத மொழிகளை நாம் கேட்டு செயற்கை தீவின் செயல்பாடுகளை கண்காணிக்கலாம். ஆனால், அதிலும் சிக்கல் இருக்கிறது...
''இது செயற்கை தீவினர் தன் உறுப்பினர்களுக்கு கொடுக்கும் ரகசிய தகவல். அந்த வளையம் இன்னும் சகாணியிடம் இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதுவும் நல்லதாய் போயிற்று. இப்போது நீ சொல்வது போல் இதற்கான விடையை நாம் உடனே கண்டாக வேண்டும். ஆனால், அதை எப்படி செய்வது?'' என்று யோசிக்கிறேன்.
''ஏன் தயக்கம் மாமா. எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். நான் முடித்து வருகிறேன்,'' என்றான் கைலாஷ்.
தலையாட்டி மகிழ்ந்த பிரகடீஸ்வர் பின்னர் அவனிடம் விளக்கி கூறினார்.
''கைலாஷ்! இந்த விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்தின் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றதும் பல நாட்டு சங்கேத மொழிகளுக்கென்ற எங்கள் நூலகக் கட்டடத்தில் ஒரு தளத்தை அதற்காக ஒதுக்கினேன். அத்தோடு வருபவர்கள் சம்பந்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று ஒரு ஏற்பாட்டையும் செய்து முடித்தேன்.
இந்த நூலக கட்டடத்துக்கு வரும் விஞ்ஞானிகளுக்கு ஏற்கனவே பிரத்யேகமாக விசேஷ உலோக இழைகளால் ஆன ஆடைகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், நான் இன்னும் அதிக பாதுகாப்பு கருதி விஞ்ஞானிகளுக்கு கொடுக்கப்படும் உலோக ஆடைகளுக்குள் ஒரு ரகசிய குறியீட்டு எண்ணையும் பதிவு செய்து விட்டேன். எனவே, ஒவ்வொரு விஞ்ஞானிக்கும் ஒரு ரகசிய எண் அந்த ஆடையில் இருக்கும். அதனால் அவ்வளவு எளிதாக அங்கு யாரும் நுழைந்து விட முடியாது. இருப்பினும் நமக்கு உடனே அந்த சங்கேத மொழிக்கான விளக்கம் வேண்டும்? என்ன செய்யலாம்,'' என்று யோசித்தபடி அவனையே ÷ட்டார்.
''ஏன் மாமா... தங்கள் உடைகள் பத்திரமாக இருக்கின்றன அல்லவா? அதை வைத்து நான் காரியத்தை முடித்து விடுகிறேன்,'' என்றான் கைலாஷ்.
''ஆகா. அருமையான யோசனைதான். ஆனால், என் உடைகளை யார் தரித்து செல்ல முடியும்? சரியாக பொருந்தாத அந்த ஆடையை அணிந்து யாராவது சென்றால் அவ்வளவுதான். நூலக கட்டடத்தின் வாயிலில் இருக்கும் இரு பெரும் ரோபோக்கள் அந்த நபரை பந்தாடி பீஸ் பீஸ் ஆக்கிவிடும்!'' என்றும் எச்சரித்தார் பிரகடீஸ்வர்.
''மாமா... அந்த கவலை தங்களுக்கு வேண்டாம். தங்களின் உடல் அமைப்போடு மிக மிக ஒத்துப் போகக் கூடிய நபர் இருக்கிறார். ஆம். அவர் தங்களுக்கும் அறிமுகமானவர். தேசப்பற்று மிகுந்தவர். எப்போதும் உங்களைப் போல் ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று எந்நேரமும் விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர். அவர் தான் என் பள்ளியின் அறிவியல் ஆசான் சீனிவாசு!'' என்றான் கைலாஷ்.
''ஆகா. சரியான, அருமையான நபர் உங்கள் ஆசான். இந்தா பிடி என் வீட்டு சாவியை. உடைகளை எடுத்து, முழு விவரமும் கூறி அவரிடம் கொடு. சங்கேத மொழிகளுக்கான விடை அளிக்கும் நூலகப் பிரிவு விஞ்ஞான கழக நூலகத்தின் இருநூற்று பத்தாவது தளத்தில் உள்ளது. எங்கே நாம் கேட்ட சங்கேத மொழியினை கூறு பார்க்கலாம்!'' என்றார் பிரகடீஸ்வர்.
''ஓ! டிக் டிக் டிக் - 004 - ரோஸ் ரோஸ் - ரெடி - ஓவர்! சரியா,'' என்று சிரித்தபடி சொன்னான் கைலாஷ்.
''மிகச் சரியாக சொன்னாய். சென்று வா, வென்று வா!'' என்று அவனை வாழ்த்தி அனுப்பினார் பிரகடீஸ்வர்.
கைலாஷ் ஒரு நம்பிக்கையுடன் வேகமாக அறிவியல் ஆசான் இல்லம் நோக்கி விரைந்து ஓடினான். அப்போது எதிர்நோக்கி காத்திருந்த அவன் ரோபோ, ''ஏண்டா இந்த பதட்டம்? நானும் தெரிஞ்சுக்கலாமா?''
''இப்போது அவகாசம் இல்லை. நீயும் என்னுடன் வா போகலாம்!'' என்று அவசரப்படுத்த அவனை பாதுகாத்தபடி ரோபோவும் அவன் பின்னால் வேகமாக ஓடியது.
(— 7 தொடரும்)
