தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொற்காசுப்பை !

பொற்காசுப்பை !

பொற்காசுப்பை !


PUBLISHED ON : செப் 24, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 24, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் பொய்கை நாட்டில் பாவண்ணன், மதிவாணன், அறவாணன் என்று மூன்று புலவர்கள் இருந்தனர். நெருங்கிய நண்பர்களாக இருந்த அவர்கள் மூவரும் வறுமையில் வாடினர். அரசவைக்குச் சென்ற பாவண்ணன் அரசரைப் புகழ்ந்து பாடினார். மகிழ்ந்த அரசர் அவருக்கு நூறு பொற்காசுகள் கொண்ட பையை அன்பளிப்பாக வழங்கினார்.

பாவண்ணன் பரிசு பெற்றதை மதிவாணனின் மனைவி அறிந்தாள். கணவரிடம் ''இன்று நாமும் நம் குழந்தைகளும் பட்டினி கிடக்க வேண்டுமே என்று கவலைப்பட்டேன். நம் நல்ல காலம், உங்கள் நண்பர் அரசரிடம் பரிசு பெற்றுள்ளார். உதவி கேட்டு அவருக்கு மடல் எழுதுங்கள்,'' என்றாள்.

அதன்படியே அவரும் பாவண்ணனுக்கு மடல் எழுதினார். பொற்காசுப் பையுடன் வீட்டிற்கு வந்த பாவண்ணன் மதிவாணனின் மடலைப் பார்த்தார். அந்தப் பையைப் பிரிக்காமல் அப்படியே மதிவாணனுக்கு அனுப்பி வைத்தார்.

இதைப் பார்த்த அவர் மனைவி, ''பரிசு முழுவதையும் நண்பருக்கு அனுப்பி விட்டீரே. நம் வீட்டு வறுமை உமக்கு தெரியாதா? இன்று நாமும் நம் குழந்தைகளும் சாப்பிட என்ன செய்வது?'' என்று கவலையுடன் கேட்டாள்.

''அன்பே! நண்பர் அறவாணனுக்கு மடல் எழுதுகிறேன். அவர் உதவி செய்வார்,'' என்றார் அவர். அதன்படியே உதவி கேட்டு அறவாணனுக்கு மடல் எழுதினார். மடலைப் பெற்ற அறவாணனிடம் அப்போது பணம் ஏதும் இல்லை. உடனே அவர் உதவிகேட்டு மதிவாணனுக்கு மடல் எழுதினார். பாவண்ணன் அனுப்பிய பொற்காசுப் பையும், அறவாணனின் மடலும் ஒரே சமயத்தில் மதிவாணனிடம் சேர்ந்தன.

மடலைப் படித்த அவர் பொற்காசுப் பையை அறவாணனுக்கு அனுப்பி வைத்தார். அறவாணன் அந்தப் பையை உடனே பாவண்ணனுக்கு அனுப்பி வைத்தார். அந்தப் பையைப் பார்த்த பாவண்ணன், 'இது நான் மதிவாணனுக்கு அனுப்பி வைத்த பொற்காசுப்பை. எப்படி இது அறவாணனுக்குக் கிடைத்தது?' என்று வியப்பு அடைந்தார்.

அறவாணனின் வீட்டிற்குச் சென்ற அவர் என்ன நடந்தது என்பதை அறிந்து கொண்டார். பையில் இருந்த பொற்காசுகளை மூன்று பங்குகளாகப் பிரித்தார். நண்பர்களுக்கு ஒவ்வொரு பங்கு தந்துவிட்டு வீடு திரும்பினார்.

இதுவல்லவா நட்பு! ***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us