தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி

கி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி

கி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி


PUBLISHED ON : செப் 10, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை:- விஞ்ஞானி பிரகடீஸ்வரரையும் மருமகன் கைலாஷையும் அழிக்க வெடிகளை வைத்தது போதை சாம்ராஜ்ஜியம்.

இனி-

டில்லியை உலுக்கிய வெடிகளால் எங்கும் ஒரே பதட்டம். தினமலர் போன்ற  பெரும் செய்தி நிறுவனங்கள், ''அறிவியல் பேரரசு இந்தியாவுக்கு மற்றும் ஒரு சோதனை. யார் அந்த கைலாஷ்? விஞ்ஞான தலைமை ஆராய்ச்சிக்கூடம் தப்பியது எப்படி?'' என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன.

தொலைக்காட்சிகள் அவசர செய்தியாக, ''இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கூடமும், அறிவியல் கழகத்தின் முதல் கட்ட சிகிச்சை கூடமும் நாசம். இரு அவசர நோயாளிகளின் உயிர் சேதம் தவிர மற்ற விஞ்ஞானிகளுக்கோ, அறிவியல் முக்கிய உபகரணங்களுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பிரதமரின் நாட்டு மக்களுக்கான விசேஷ அறிவிப்பு என்றும் செய்திகளை அறிவித்தபடி இருந்தன.

தலைவன் சாங்கிளிபட் மற்றும் அம்ருடனின் முதல் மகிழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன. விஞ்ஞானி பிரகடீஸ்வரும், சிறுவன் கைலாசும் உயிருடன் இருப்பதையும் பிரகடீஸ்வருடனான பிரதமரின் முக்கிய தொலைபேச்சுகளையும் அவர்கள் மின் திரையில் மகாபலி அனுப்பிய அலைவடிவிலான ஒலியை மின்திரை தன் விசேஷ கருவியால் ஒலியாக்கி அவர்களின் பேச்சுக்களை துல்லியமாக வெளியிட்டது. தலைவன் கோபத்துடன் அதை கேட்க அம்ருடன் மிகுந்த வருத்தத்துடன் கேட்டான்.

''மிஸ்டர் பிரகடீஸ்வருக்கும் மற்றும் பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பிய இதர விஞ்ஞானிகளுக்கும் மக்களின் சார்பாக என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார் பிரதம அமைச்சர்.

''என் சார்பாகவும் இதர விஞ்ஞானிகளின் சார்பாகவும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார் பிரகடீஸ்வர்.

''ஏன் பிரகடீஸ்வர் வெடியின் தன்மை மிகவும் சக்தி கொண்டது என்று உளவியல் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்க நம் அறிவியல் கூடத்துக்கு அவ்வளவு சேதம் ஏற்படவில்லையே? அது எப்படி?'' என்று கேட்டார் பிரதமர்.

''சார்! நான் தலைமை பொறுப்பு ஏற்றதும் விஞ்ஞானிகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் பாதுகாப்பு கருதி ஆராய்ச்சிக் கூடத்தின் எல்லா முக்கிய செயல்பாடுகளும் பூமிக்கு அடியில் அமையும்படி குண்டு துளைக்காத வண்ணம் கட்டட அமைப்புகளை மாற்றி விட்டேன். அதனால், அந்த பெரும் வெடி விபத்திலும் கட்டடத்தின் மேல் தளம் தான் சேதம் உற்றதே ஒழிய கீழே பணிபுரிந்து கொண்டிருந்த விஞ்ஞானிகளுக்கோ, விஞ்ஞான உபகரணங்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை.

''மாறாக தொலைநோக்கி கருவி மட்டுமே சேதம் அடைந்துவிட்டது. மாற்று தொலைநோக்கி கருவி இருப்பதால் நாம் அதுபற்றி கவலைப்படவும் வேண்டாம். அதே சமயம் நான் மட்டும் விஞ்ஞானிகள் பணிபுரியும் அலுவலக அமைப்பை பூமியின் அடித்தளத்துக்கு மாற்றியிருக்காவிட்டால் இந்நேரம் ஏற்பட்டிருக்கும் சேதம் தேசத்தின் பெரும் துக்கமாக அமைந்திருக்கும்,'' என்று உணர்ச்சி பொங்க கூறினார் பிரகடீஸ்வர்.

''உங்கள் செயல்திறன் கண்டு பாராட்டுகிறேன். அதேபோல் முதல் உதவி சிகிச்சை கட்டடத்தில் இரு நோயாளிகள் தவிர யாரும் இல்லாதிருந்ததால் அவர்களை மட்டுமே நாம் இழந்து விட்டோம். கட்டடமும் முற்றிலும் சேதமாகிவிட்டது. இருப்பினும் மருத்துவர் குழுவுக்கோ, மற்றவர்களுக்கோ நல்ல வேளையாக உயிரிழப்பு ஏற்படவில்லை. அதுவும் நமக்கு நல்ல செய்தியே,'' என்றார் பிரதம அமைச்சர்.

''இரு விலைமதிக்க முடியாத உயிர்களை நாம் இழந்தமைக்கு விஞ்ஞானிகள் குழுவின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எப்படியோ நம் எதிரிகள் நினைத்தது ஒன்று. நடந்தது வேறாகிவிட்டது.''

''அப்படி என்றால் இந்த ஆபத்துக்களை தாங்கள் எதிர்பார்த்தீர்களா?''

''ஆம். அவர்கள் இலக்கு நானும், எனக்கு முக்கிய ரகசியம் கூறிய என் மருமகன் கைலாசும்தான். அதனால் நாங்கள் இருந்த இரு கட்டடங்களையும் அழிக்க கட்டளை கொடுத்திருக்கின்றனர். நல்லவேளையாக கைலாஷ் முதலுதவி மருத்துவம் முடிந்து வீடு திரும்பிவிட்டான். நானும் நம் எதிரிகளின் உளவு நட்சத்திரத்தை வானில் கண்டுவிட்டு அதை அழிக்கும் முகமாக கீழ்தளத்துக்கு வந்துவிட்டேன். அப்போதுதான் எதிரிகள் தவறாக கணக்கிட்டு ஏமாந்து விட்டனர்,'' என்று சிரித்தார் பிரகடீஸ்வர்.

''ஏன் பிரகடீஸ்வர் தங்களுக்கு ஆபத்து என்றால் அதில் வியப்பில்லை. உங்க மருமகன்?''

''வானில் உளவும் ஒரு உளவு நட்சத்திரத்தைப் பற்றி துப்பு கொடுத்ததே என் கைலாஷ்தான்! முதலில் போதை தீவினரின் செயல்பாடுகளை கண்காணிக்க அமெரிக்கா அனுப்பிய வேவுகணை வெடித்து சிதறியது அல்லவா? அதே போல் நம் நாட்டின் போற்றுதற்குரிய விஞ்ஞானி பவிஷ்கோஷ் கடத்தப்பட்டார் அல்லவா? அந்த இரு நிகழ்வுகளின் போதும் சிறுவன் கைலாஷ் வானில் பச்சை நிறமுள்ள ஒரு மின்மினுக்கும் நட்சத்திரம் கரு மேகங்களுக்கிடையே புகுந்து வெளிவருவதை பார்த்திருக்கிறான். அவன் தான் எனக்கு அந்த தகவலை கொடுத்தவன். அப்போதுதான் அவன் தீக்காயங்களுக்கு உள்ளாகி நம் விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்தின் முதல் உதவி சிகிச்சை மையத்தில் சேர்க்கும்படி ஆனது.

''அந்த உண்மையை அவன் கூறிய போது ஏற்பட்ட விபத்து ஆதலால் அது நிச்சயம் நம் எதிரியின் வேலையாகத்தான் இருக்க முடியும் என்ற என் கணிப்பும் மெய்யாயிற்று. ஆம் சார். கைலாஷ் கூறிய அந்த நட்சத்திரத்தை நானும் கண்டேன். அது விசேஷ அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மின்னல் சக்தி கொண்டு இயங்குகிறது. மேலும், அது இடிகளை வாங்கி அதை தன் நுண்ணிய கருவி மூலம் எதிரிகள் குறிக்கும் இலக்கை சரியாக லேசர் உதவி கொண்டு அழிக்கவல்லது. அப்படித்தான் விஞ்ஞான ஆராய்ச்சிக்கூடமும், முதலுதவி மையமும் வெடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது,'' என்று மூச்சு விடாமல் பேசி முடித்தார் பிரகடீஸ்வர்.

''ஓ... இவ்வளவு நடந்திருக்கின்றனவா? உடனே உங்கள் சிறுவனுக்கு தக்க பாதுகாப்பு கொடுங்கள். அதே போல் அந்த உளவு நட்சத்திரத்தையும் அழிக்க ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் செயல் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!'' என்று கூறி பிரதமர் முடித்தார்.

பதிலுக்கு பிரகடீஸ்வரும் நன்றி தெரிவித்து தொலைபேசியை வைத்துவிட்டு உளவு நட்சத்திரம் எங்கிருக்கிறது என்று காண மாற்று தொலைநோக்கி பொருத்தும் வேலையில் இறங்கிய அதே சமயம் அவருக்கான பிரத்யேகமான தொலைபேசி இசைத்துக் கொண்டே இருந்தது.

இவ்வளவு நிகழ்வுகளையும் மின் திரையில் பார்த்துக் கொண்டிருந்த மொட்டைத் தலையன் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தான்.

''போயும் போயும் அந்த சிறுவன் கைலாஷிடமா ஏமாந்திருக்க வேண்டும். அவன் எவ்வளவு கெட்டிக்காரன். யாரும் கவனியாத, ஏன் எந்த ரேடாருக்குமே பிடிபடாத சிறு நட்சத்திரத்தை இப்போது அந்த கொம்பன் பிரகடீஸ்வரன் அழிக்கப் போகிறான். அவன் அந்த வேலையை செய்யும் முன் உடனே  நீங்களே அதை தரை இறக்கி விடுங்கள். இல்லாவிடில் அது நம் செயற்கை தீவுக்கே பெரும் சவாலாக முடியும்!'' என்று ஆர்ப்பரித்தான் சாங்கிளிபட்.

''தலைவா! சற்று பொறுமை தேவை. நம் உளவாளி தாரகை சரியாக நம் கட்டளைப்படி இலக்கைத்தாக்கி அழித்திருக்கிறது. நாம் தான் சற்று ஏமாந்து விட்டோம். நம் எதிரிகள் இருந்த கட்டடத்துக்கு பதில் எதிரிகளையே தாக்கச் சொல்லியிருந்தால் அது சரியாக காத்திருந்து செயல்பட்டு பணியை முடித்திருக்கும். இருப்பினும் அதற்கான தருணம் காலதாமதம் ஆகிவிட்டது. இப்போது அந்த பிரகடீஸ்வர் மட்டும் அல்ல இந்திய பிரதமருக்கும் விவரம் புரிந்து விட்டது.

''இதற்கு நாம் நிச்சயம் பழிவாங்கித்தான் தீர வேண்டும். இன்னும் பிரகடீஸ்வர் புதிய தொலைநோக்கியை பொருத்தவில்லை. மேலும், அவனுக்கு உள்ள பிரத்யேகமான முக்கிய தொலைபேசி ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அவன் என்ன பேசுகிறான் என்று நாம் பார்த்து விவரம் முழுதும் தெரிந்து கொண்டு தேவைப்பட்டால் மகாபலியை இறக்குவோம்.

 இந்த அம்ருடன் தன் மூளைத்திறன் கொண்டு அதை வானில் நிறுத்தியே எவராலும் அழிக்க முடியாமல் சாகசம் செய்தும் விடுவான். மின் திரையை நோக்கினர். திடீரென மின் திரையில் இருள் சூழ்ந்தது. அனைவரும் அதிர்ச்சியுடன் இருக்க செயற்கை தீவே அதிரும்படி அபாய மணியை ஒலித்துக் கொண்டிருந்தான் அந்த எந்திரன்.

( — 5 தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us