கி.பி., 3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி
கி.பி., 3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி
PUBLISHED ON : ஜன 07, 2011

இதுவரை: மயக்கம் தெளிந்து எழுந்த விஞ்ஞானி அம்ருடன் தங்களது தீவு செயலிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோய், தலைவன் சாங்கிளிபட்டை எழுப்பினான்.
இனி-
''யார் அம்ருடனா என் அருகில் இருப்பது? ஏன் பதட்டத்துடன் இருக்கிறீர்கள்?''
''பாஸ்! நாம் தோற்று விட்டோம்!'' அம்ருடன் உணர்ச்சி வசப்பட்டு கண்களை துடைத்துக் கொண்டான்.
''என்ன உளறுகிறீர்கள்? ஏதாவது ஏவுகணையை அமெரிக்கா அல்லது இந்தியா இல்லை ஜெர்மனியில் இருந்து மீண்டும் ஏவி நம் தீவுக்கு ஏதாவது ஆபத்து விளைவித்தனரா? அப்படி ஒன்றும் நடக்கவில்லையே? பின் ஏன் இப்படி பிதற்றுகிறீர்கள். இன்னும் போதை தெளியவில்லையா?'' சாங்கிளிபட் கோபத்துடன் கேட்டான்.
''பாஸ்! நாம் ஏமாந்து விட்டோம். நம் மயக்கத்தை சாதகமாக்கி கொண்டு அந்த கிழவன், சிறுவன் கைலாஷுடன் தப்பி விட்டான்.''
''நோ, நோ. நான் நம்ப மாட்டேன். அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருந்தால்... எங்கே நம் காவல் அதிகாரிகள். வான் காவலர்களும், கடல் காவலர்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர். உடனே காவல் அதிகாரியை அழைத்து விவரம் கேளுங்கள்!''
''அதிலும் நாம் ஏமாந்து விட்டோம்!''
''ஏமாற்றம். ஏமாற்றம். ஏமாற்றம். உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது அம்ருடன். தோல்வியை ஒருநாளும் இந்த தலைவன் தாங்க மாட்டான் என்று உங்களுக்கு தெரியும் அல்லவா?'' என்று கூறிக்கொண்டே தன் ரிவால்வரை எடுத்தான். அம்ருடனின் தலைக்கு சரியாக குறி வைத்தான்.
''பாஸ்! என்னை கொன்று விடுங்கள். என் மனசில் ஏதோ ஒன்று நெருடியது. அதனால் தான் நான் போதை பவுடரை சிறிதளவே உபயோகித்தேன். விளைவு மூன்று நாளில் என் போதை தெளிந்தது. இல்லை என்றால் நானும் மற்றவர்கள் போல் இன்னும் மயக்கத்திலேயே இருந்திருப்பேன். ஏதோ உள் மனசு அப்படி செய்ய தூண்டியது. எல்லாரும் தொடர்ந்து ஏழு நாட்கள் மயங்கி கிடந்தால் செயற்கை தீவுக்கு ஆபத்து நேரிடுமோ என்று உள் மனசு அஞ்சியது. அது அப்படியே நடந்து விட்டது. இதில் என் குற்றம் ஏதாவது இருந்தால் இப்போதே என்னை கொன்று விடுங்கள்,'' என்றான் அம்ருடன்.
அப்போது 'டொக் டொக் டொக்' என்று பல்லியின் குரல் கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைந்து மேலே நோக்கினர். ஒரு சிறு பல்லி சுவற்றில் காணப்பட்டது. இது எப்படி இங்கு சாத்தியம்? தலைவன் மேலே பார்த்தபடி கேட்டு அதை சுட எத்தனித்தான்.
''பாஸ் வேண்டாம். அது எங்கிருந்து இங்கு வந்தது என்று தெரியவில்லை. நாம் இதுவரை இந்த மாதிரி ஒரு பல்லியை பார்த்தது இல்லை. எனவே, ஆராய்ந்து முடிவெடுப்பதுதான் நல்லது,'' என்றான் அம்ருடன்.
''ஆம்! அதுவும் நல்லதுதான்,'' என்றான் தலைவன்.
''சரி! உடனே நம் கடல், வான் காவல் வீரர்களின் விளக்கத்தை கேளுங்கள்!'' என்று அவசரப்படுத்தினான் தலைவன்.
''அது உடனடியாக முடியாது. காரணம், நம்மிடம் உள்ள முக்கிய மின் கட்டுப்பாட்டு சாதனங்களையும், உளவு கணினிகளையும் அந்த கிழவன் முடக்கி விட்டு போய் விட்டான். அதோ பாருங்கள்... நமக்கு எச்சரிக்கை கொடுக்கும் இயந்திர மனிதனே உருண்டு சாய்ந்து விட்டான்!'' என்றான் அம்ருடன்.
''என்ன? இது நடக்க சாத்தியமா? உடனே மயங்கி கிடக்கும் அனைவரையும் எழுப்புங்கள். மறுத்தால் அவர்களை சுட்டுத்தள்ளுங்கள்.'' ஆவேசித்தான் தலைவன்.
''தலைவா! அதற்கும் சற்று அவகாசம் தேவை. காரணம், அந்த கருவியும் முடங்கி போய்விட்டது. நான் முதலில் முக்கியமான விஞ்ஞானிகளை மயக்கம் தெளிவிக்கிறேன்.''
அம்ருடன் உடனே சகாணி மற்றும் முக்கிய விஞ்ஞானிகளின் மயக்கத்தை தெளிவித்தான். பின் அந்த விஞ்ஞானிகளுக்கு நடந்த விஷயங்கள் கூறப்பட்டன. அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அனைத்து செயல் கட்டுப்பாட்டு கருவிகளையும் மீண்டும் இயங்கச் செய்யும் பொறுப்பு சகாணிக்கும், விஞ்ஞானிகளின் குழுவின் தலைவனுக்கும் கொடுக்கப்பட்டது. அவரவர்களின் கணினிகளை அவரவர்கள் உடனே சரி செய்ய மற்ற விஞ்ஞானிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
சற்று நாழிகைக்கு பின் முக்கிய மின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சகாணி அம்ருடனையும் தலைவனையும் அழைத்தான். அவர்கள் அங்கு செல்லவும் சாதனங்கள் அனைத்தும் ஒரு வேதியியல் பசையால் மூடப்பட்டுள்ளதாக கூறவும் அதிர்ச்சியுற்ற அம்ருடன் தன் மைக்ரோஸ்கோப் கருவி வாயிலாக அதை பார்த்தான். அவனுக்கு ரத்தம் உறைந்தது. காரணம், அதில் மிக சிறிய அளவில் சிங்கமும் அதன் முன்னும் பின்னும் ஏதோ சில எழுத்துக்களும் காணப்பட்டன.
''பாஸ்! இது திட்டமிட்ட சதிதான். நாம் மயங்கி இருந்த சந்தர்ப்பத்தை அந்த கிழவன் பயன்படுத்தி யாரையோ இங்கு வரவழைத்திருக்கிறான். அப்படி வந்தவன் மாபெரும் கில்லாடி. ஆம் தலைவா. தான் முடக்கிய அத்தனை சாதனங்களிலும் தன் முத்திரையை பதித்தே சென்றிருக்கிறான்.''
''என்ன சிங்கத்தின் குகைக்குள்ளேயே இன்னொரு சிங்கமா? இருக்க முடியாது,'' என்று கர்ஜித்த தலைவன் உடனே அந்த எழுத்துக்களை படிக்க உத்தரவிட்டான்.
''துப்பறியும் ... தாஸ். இடையில் தான் சிங்கம் உள்ளது. அப்படி என்றால் அவன் தான் தன் முத்திரையாக 'துப்பறியும் சிங்கம் தாஸ்' என்று பதித்துவிட்டு சென்றிருக்கிறான். அவனே நம் முதல் எதிரி என்று நினைத்திருந்தோம். அதை அவன் ஊர்ஜிதப்படுத்தி சென்றிருக்கிறான். அந்த நச்சுப்பாம்மை உடனே நாம் அழிக்க வேண்டும் என்று அம்ருடன் ஆவேசமாக கூறவும் மீண்டும் பல்லி 'டொக் டொக் டொக்' என்று சத்தமிட்டது.
''அம்ருடன் நமக்கு இந்த பல்லி வேறு அச்சுறுத்துகிறது. அதை அழித்து விடுங்கள்!'' என்றான் தலைவன்.
''சற்று பொறுப்போம். இன்னும் சற்று நாழியில் நம் அனைத்து சாதனங்களும் சரி செய்யப்பட்டு விடும். பிறகு நம் பிரயோகத்தை செலுத்துவோம்!'' என்றான் அம்ருடன்.
சகாணி, முக்கிய கட்டுப்பாட்டு அறையின் அனைத்து சாதனங்களையும் சரி செய்துவிட்டதாக கூறவும் மற்ற விஞ்ஞானிகளும் தங்கள் தங்கள் கணினிகளும் சரி செய்யப்பட்டதாக கூறினர்.
இயந்திர மனிதனை சரி செய்தான் அம்ருடன். பின் அனைவரையும் மயக்கம் தெளிவிக்கும் கருவிக்கு கட்டளை கொடுத்து எழுப்பினான். உடனே காவல் அதிகாரி வரவழைக்கப்பட்டார்.
தலைவன் கோபத்துடன், ''இங்கு என்ன நடந்தது. யாராவது எதிரிகள் வந்து போனது பற்றி ஏதாவது தடயம் இருக்கிறதா?'' என்று கேட்கவும் அவன் மிகுந்த சோகத்துடன், ''ஆம். ஏதோ நடந்திருக்கிறது. என் கட்டுப்பாட்டில் இருந்த கடல் காவலர்களும் மின் திமிங்கலங்களும் செயலற்று கடலில் விழுந்து கிடக்கின்றனர். அது தவிர எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை,'' என்று கூறவும் மீண்டும் பல்லி 'டொக் டொக்' என்று ஒலி எழுப்பியது.
தலைவன் பெரும் கோபத்துடன் அம்ருடனை பார்க்க, உடனே அம்ருடன் அந்த காவல் அதிகாரியிடம் மேலே உள்ள பல்லியை எடுக்குமாறு உத்தரவிட்டான்.
காவல் அதிகாரி சுவர் மட்டத்துக்கு ஏறினான். சார் அது சிறு பல்லிதான் என்று கூறியபடி அந்த பல்லியை தொட்டதுதான் தாமதம். உடனே அது தன் வால் வழியாக விஷ திரவத்தை வேகமாக பீச்சியது.
''அய்யோ என் கண்கள் எரிகின்றனவே. அய்யோ இப்போது என் கண்கள் சுத்தமாக தெரியவில்லையே...'' என்று புலம்பியபடி தடுமாறி கீழே விழுந்தான் காவல் அதிகாரி.
தலைவனும், அம்ருடனும் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போக தன் உளவுக் கூடத்தின் திரையில் அதை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த தாசும், ஆசானும், பவிஷ்கோஷும் ஒருவரை ஒருவர் கைகளை தட்டியபடி வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.
( — தொடரும்) ***
