PUBLISHED ON : ஜன 07, 2011

அனைவருக்கும் எனது அன்பு.
ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை இப்படி குறிப்பிட்டார்...
''எனக்கு ஒரு மரத்தை வெட்ட எட்டு மணி நேரம் கிடைத்தால், நான் அதில் ஏழு மணி நேரத்தை கோடாரியை கூர்மையாக்க செலவிடுவேன்!''
என் மகனுக்கு எட்டு வயதாகிறது. அதற்குள்ளாக கண்ணாடி அணிய வேண்டிய நிலை. பார்வை குறைபாடு என்றாலே, கண்ணாடி, அறுவை சிகிச்சை போன்றவைதான் தீர்வுகளா? வேறு வழிகளில் இந்த குறைபாட்டை சரி செய்ய இயலுமா?
இது எண்ணற்ற பெற்றோர்களின் உள்ளத்து கேள்வி.
பொதுவாக பார்வை திறன் குறைபாடு ஏற்படுவதற்கு சத்து குறைச்சல், பரம்பரை ஆகியவை காரணமாக இருக்கலாம். பன்னிரண்டு வயதுக்குள் ஏற்படுகிற பார்வை திறன் குறைப்பாட்டை (ஆரம்ப கட்ட நிலையாக இருந்தால்) கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சை இல்லாமலேயே, உணவு பழக்கம் மற்றும் சில வகை யோகாசன பயிற்சிகள் மூலம் சரி செய்ய இயலும்.
அதாவது, ஆறு வயதுக்குள் கண்டறியப்படும் குறைபாடுகளை ஏழு வயதுக்குள் சரி செய்ய முடியும். அதை தாண்டி பன்னிரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவதை தவிர்க்க முடியாது. அதேசமயம், உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் மேற்கொண்டு, 'பவர்' கூடுவதை கட்டுப்படுத்தலாம்.
பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், மேலே சொன்ன சாப்பாடு மற்றும் யோகாசன முறைகளை பின்பற்றுவதன் மூலம், 'பவர் கூடுதல்' போன்ற அடுத்தகட்ட பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம். கண்களுக்கு மிகவும் தேவையான 'பீட்டா கரோட்டின் சத்துகள்' நம்முடைய உணவில் குறைவதாலேயே இத்தகைய பிரச்னைகள் ஏற்படுகின்றன.
'பாலிஷ்டு ரைஸ்' எனப்படும் பட்டை தீட்டப்பட்ட அரிசியில் இந்த சத்து மிகவும் குறைவு. ஆனால், அதைதான் இப்போது நாம் தினசரி சாப்பிடுகிறோம். எனவே, பீட்டா கரோட்டின் அதிகமுள்ள தினை அரிசியை சாதமாக தினமும் சேர்த்து கொள்ளலாம்.
இதேபோல் கேரட்டிலும் அதிகமாக பீட்டா கரோட்டின் சத்து உள்ளது. அடுத்தபடியாக முருங்கைக்கீரையை வாரத்துக்கு மூன்று நாட்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம். 'கலர்டு புட்ஸ்' என்று சொல்ல கூடிய நிறமுள்ள உணவுகளான பப்பாளி, தக்காளி, அன்னாசி போன்றவற்றை தொடர்ச்சியாக சாப்பிடலாம்.
பெரும்பாலும் தற்போது குழந்தைகளை தினசரி தலை குளிக்க வைப்பதே இல்லை. அதேபோல எண்ணெய் குளியலும் செய்வதில்லை. இதுபோன்ற காரணங்களால் உடல் சூடு ஏற்பட்டு, அது பித்தமாக மாறிவிடுகிறது. இதனாலும் பார்வை திறன் குறைபாடு ஏற்படலாம். எனவே, தினசரி தலைக்கு குளிக்க வைப்பது முக்கியம். அதேபோல வாரம் ஒரு முறையாவது எண்ணெய் குளியல் செய்ய வேண்டும். இதை சொன்னதுமே, 'சளி பிடிக்குமே' என்று சொல்வார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. குளித்துவிட்டு சரிவர துடைக்காததாலும், வியர்வையோடு குளிப்பதாலும், வேறு சில காரணங்களாலும்தான் சளி பிடிக்கும். ஆறு வயதுக்குள் பார்வை குறைபாடு கண்டறியப்பட்டு விட்டால், இதையெல்லாம் பின்பற்றினாலே கண்ணாடி போட வேண்டிய அவசியம் இருக்காது.
கேள்வி: இந்தியா வல்லரசாக போகும் 2020ம் ஆண்டுக்குள் ஊழலை ஒழிக்க முடியுமா?
அன்பு காலம்: அது உங்கள் கையில்தான் உள்ளது. ஊழலும், லஞ்சமும் எங்கிருந்து தொடங்குகிறது? நீங்கள் அரசியல்வாதி என்கிறீர்கள். அரசியல்வாதிக்கும் குடும்பம் உள்ளது. குடும்பத்தில் இருந்து தொடங்கும் இந்த ஊழலை தடுக்க வீட்டில் உள்ள மகனோ, மகளோ முயற்சி செய்யலாம். அதாவது தங்களது பெற்றோரை பிள்ளைகள் தடுக்க வேண்டும். அப்படி தடுத்தால் அது பெற்றோருக்கு அவமானமாக இருக்கும். எனவே, இளைஞர்கள் நினைத்தால் இந்த ஊழலை இந்தியாவை விட்டே ஓட்டலாம். அன்புடன்,அங்குராசு. ***
