PUBLISHED ON : அக் 29, 2022

நம்பிக்கையுடன் போராடினால், எதையும் சாதிக்கலாம் என நிரூபிக்கிறது, எழுத்தாளர் ஜீன் டொமினிக் பாபி எழுதிய சுயசரிதையான, 'தி டைவிங் பெல் அன்டு தி பட்டர்பிளை' என்ற ஆங்கில புத்தகம்.
ஆரோக்கியத்துடன், மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார் பாபி; புகழ் பெற்ற பத்திரிகை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
மின்னல் கீற்றை போல், பாய்ந்த அதிர்வுகள் மூளையை தாக்கியது. இது, 42ம் வயதில் நினைவை இழக்க செய்தது. நாளடைவில் இடது கண் தவிர, மற்ற உறுப்புகள் செயல் இழந்தன. ஆடிப்பாடி திரிந்தவர் படுக்கையில் விழுந்தார். எண்ணங்களை வெளிப்படுத்த வழியின்றி தவித்தார்.
இந்த கசப்பான அனுபவத்தால் மரணத்தை விரும்பினார். அந்த நேரத்தில், அவரது கண்கள் பேச ஆரம்பித்தன. அவரது பேச்சு பயிற்சியாளருடன் இடது கண் வழியாக தொடர்பு கொள்ள முயன்றார். இமை அசைவுகள் எண்ணங்களை வெளிப்படுத்தின; அதன் வழியாக, மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள துவங்கினார்.
ஒருமுறை அவர் கண் இமையை அசைத்தால், 'ஆம்' என்று அர்த்தம்; இரண்டு முறை அசைத்தால், 'இல்லை' என்று அர்த்தம். இப்படி இமை மொழியை புரிந்து கொண்டார் பயிற்சியாளர்.
ஏதாவது சொல்ல விரும்பும் போது, பேச்சு பயிற்சியாளர், பிரெஞ்சு மொழி எழுத்துகளை ஒவ்வொன்றாக கூறுவார். சொல்ல வந்த வார்த்தைக்கு, ஏற்ற எழுத்து வந்தவுடன், இமையை அசைப்பார் பாபி. இதே போல் எழுத்துக்களை சேர்த்து, சொல்ல வந்ததை, இமை அசைவில் வெளிப்படுத்தினார்.
இதில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து ஒரு புத்தகமாக எழுத விரும்பினார் பாபி. இதற்கு உதவினார் ஒரு பெண். கண்சிமிட்டலை புரிந்து சொற்றொடராக மாற்றினார். இந்த புத்தகத்தை எழுத, 2 லட்சம் முறை பாபி கண் சிமிட்ட வேண்டியிருந்தது. ஒரு சொற்றொடரை உருவாக்க, இரண்டு நிமிடங்கள் வரை எடுத்ததாக கூறப்படுகிறது.
வாழ்வில், பிடிப்பு, நம்பிக்கை ஏற்படுத்தும் இந்தப் புத்தகம், வெளியான முதல் நாளே, 25 ஆயிரம் பிரதிகளும், முதல் வாரத்தில், 1.5 லட்சம் பிரதிகளும் விற்றன.
இந்த புத்தகத்தை மையக் கருவாகக் கொண்டு, தென்னாப்பிரிக்க எழுத்தாளர் ரொனால்ட் கார்வுட், ஒரு திரைக்கதையை வடித்தார். அமெரிக்க சினிமா இயக்குனர் ஜூலியன் சினபல் அதை திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.
புத்தகம் வெளியானதும் அடுத்த இரண்டே நாளில், பாபி இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சவுமியா சுப்பிரமணியன்
