PUBLISHED ON : அக் 29, 2022

தனிமையில் இனிமை!
இரவு நேரங்களில், ஆற்றங்கரையோரம் தனிமையில் அமர்ந்து சிந்திப்பார் ஞானி பால்செம்.
ஒரு சமயம் -
ஒரு வீட்டின் காவலன், 'ஐயா... தினமும் இப்படி இரவு நேரம் தனிமையில் சென்று என்ன செய்கின்றீர்...' என்று கேட்டான்.
'தம்பி... நானும், உன் தொழிலைத் தான் செய்கிறேன்; அதாவது, காவல் காக்கிறேன்...'
'உங்களுக்கு எவ்வளவு சம்பளம்...'
'நிறைய உண்டு...'
அந்த வேலையை வாங்கி தர ஞானியிடம் வேண்டினான் காவலன்.
'நான் காவல் புரிவது வீட்டையோ, ஆற்றையோ அல்ல; என்னையே காவல் புரிகிறேன். ஒவ்வொரு நாளும், எனக்குள் புகுந்து மாசுபடுத்தும், அழுக்கு எண்ணங்களை அப்புறப்படுத்துவதே என் காவல் பணி...' என்று, எடுத்துக் கூறினார் ஞானி.
வியப்பு ஏற்பட அதற்கு பயிற்சி அளிக்கும் படி கேட்டுக் கொண்டான் காவலன்.
'அமைதியான சூழலில், மனதை காப்பதே சிறப்பாக வாழ உகந்தது. பூங்கா, இனிய தென்றல் வீசும் வயல் வெளி எல்லாம் அமைதியை கொண்டு வரும். நல்ல புத்தகங்களை வாசிப்பதும் இனிமை தரும். இதமான இசையும் இதற்கு உறுதுணையாக அமையும்...' என போதித்தார் ஞானி.
தக்காளி மருத்துவம்!
தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால், பக்கவாத நோய் வராமல் தடுக்கலாம்.
தக்காளி, சிவப்பு குடைமிளகாய், தர்ப்பூசணியில் பிரகாசமான சிவப்பு நிறமுள்ள, 'லைகோபீன்' என்ற வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது வாத நோயைத் தடுக்கும் ஆற்றலுள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐரோப்பிய நாடான பின்லாந்து பல்கலையில், மருத்துவ விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வுக்காக, 31 ஆயிரம் ஆண்களை தேர்வு செய்தனர். சோதனை துவக்கத்தில், இவர்களின் ரத்தத்தில், லைகோபீன் என்ற வேதிப்பொருள் அளவு கணக்கிடப்பட்டது. அதன் அடிப்படையில், நான்கு குழுக்களாகப் பிரித்து, 12 ஆண்டுகள் கண்காணித்தனர்.
ரத்தத்தில், லைகோபீன் அளவு மிக குறைந்த குழுவில், 258 பேர் இருந்தனர். இதில், 25 பேரை, வாத நோய் தாக்கியது. அதேசமயம், லைகோபீனின் அளவு, அதிகம் இருந்த, 259 பேரில், 14 பேருக்கு மட்டுமே வாதநோய் தாக்கியிருந்தது.
இதன் அடிப்படையில், லைகோபீன் நிறைந்த தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாப்பிடுவதால், வாதநோயிலிருந்து தப்ப முடியும் என்று, ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லைகோபீன் வேதிப்பொருள் ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்த கொதிப்பை கட்டுப்படுத்துவதன் மூலம், ரத்த கட்டிகள் உருவாகாமல் தடுப்பதாக பேராசிரியர் ஜவ்னி கார்ப்பி தெரிவித்துள்ளார்.
தக்காளியை, சமைத்து உண்ணலாம். பழமாக உண்பது பெரும் பலன் தரும். சாறு பிழிந்து, சிறிது எலுமிச்சம் பழச்சாறு, சர்க்கரை கலந்து பருகினால் உடல் வெப்பம் தணியும். பசி, செரிமான சக்தியை அதிகரிக்கும். தக்காளியை தோலோடு சாப்பிடுவதே நல்ல பலன் தரும்.
- என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.
