PUBLISHED ON : அக் 29, 2022

அ நிறம் | அளவு
தனுஷ்கோடி, தமிழகத்தின் தெற்கு வால்பகுதி. பாம்பன் தீவுக்கு, தென் கிழக்கே உள்ள ஒரு கைவிடப்பட்ட நகரம். தலைமன்னாருக்கு மேற்கே, 24 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது.
ராமேஸ்வரத்தில், 1964ல் ஏற்பட்ட புயலில், தனுஷ்கோடி முழுதும் நிர்மூலமானது. இலங்கையுடன், கடல் வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக ஒரு காலத்தில் விளங்கியது. வில் போல், வளைந்த கடற்கரையை கொண்டிருப்பதால், 'தனுஷ்கோடி' என அழைக்கப்படுகிறது.
வங்கக் கடலும், இந்திய பெருங்கடலும் கூடும் இடம் தனுஷ்கோடி. இங்கு குளித்தால் தான், காசி புனித யாத்திரை நிறைவடைவதாக கருதுகின்றனர் பக்தர்கள்.
இங்கு கோதண்டராமர் கோவில், ராமேஸ்வரத்திலிருந்து, 12 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ளது இலங்கை தலைமன்னார் பகுதி.
தனுஷ்கோடி கடற்கரையில் இறங்கினர் சிறுவன் மிகிரன், சிறுமி சிற்பிகா மற்றும் நீச்சல் பயிற்சியாளர் கணேசன். நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கப்படும் தனுஷ்கோடி நகரத்தின் சில பகுதிகளை பார்வையிட்டனர்.
கடற்கரையில், முத்து, சிப்பிகளை சேகரித்தாள் சிற்பிகா. பின், படகில் பயணித்து, கடலோர காவல் படையின் கப்பலை அடைந்தனர்.
''ஐயா... வணக்கம்...'' என்றார் கணேசன்.
அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர் கடலோர காவல் படை வீரர்கள். அதில் ஒருவர் மிகவும் அக்கறையுடன், ''இவர்கள் தான், தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே நீந்தப்போகும் சிறுவர், சிறுமியரா...'' என்று கேட்டார்.
மிகிரனும், சிற்பிகாவும் தலையசைத்தனர்.
கை குலுக்கி, வாழ்த்து தெரிவித்தார் வீரர்.
''ஐயா... வானிலை எப்படி இருக்கிறது...'' என்றார் கணேசன்.
''அதிகபட்சம், 33 டிகிரி சென்டிகிரேட். குறைந்தபட்சம், 28 டிகிரி சென்டிகிரேட்; காற்று மணிக்கு, 14 கி.மீ., வேகம். காற்றில் ஈரப்பதம், 77 சதவீதம்; அழுத்தம், 1,008.47 எம்பார். அல்ட்ரா வயலட் இன்டக்ஸ், 11; பார்வைப் புலம், 14.48 கி.மீ., வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்பில்லை; நீந்துவதற்கு மிக சரியான சூழல்...''
''கடலுக்குள் சுறா தாக்குதல் இருக்கிறதா...''
''இந்தியக் கடல்கள், சுறா தாக்குதலில், 10வது இடம் வகிக்கின்றன. மனிதன் நீந்துவதை பார்த்து, குழம்பி போய் தாக்குகின்றன. அதேசமயம், சுறாக்களுக்கு மனிதர்கள் மீது அதிக பயம்...''
''சுறாவை விரட்ட என்ன செய்ய வேண்டும்...''
''சுறா விரட்டியான, 'பாரடாசின்' பயன்படுத்தியும், காந்தம், மின்சாரம் உதவியை நல்கியும் விரட்டுகிறோம். இறந்த சுறாவின் நாற்றம், உயிருள்ள சுறாக்களை பெரிதாய் பயமுறுத்துகிறது...''
''கடலில் நீந்துவதற்கு காத்திருக்கும் மிகிரன், சிற்பிகாவுக்கு இந்திய கடலோர காவல் படை எந்தெந்த வழிகளில் உதவும்...''
''சாதகமான வானிலை இருந்தால் மட்டுமே, நீந்த அனுமதிப்போம். அவர்களை பின் தொடர்ந்து, கண்காணிப்பு கப்பல்கள் செல்லும்; சிறுவர் சிறுமியருக்கு, எந்த மருத்துவ உதவி தேவைப்பட்டாலும் விரைந்து செய்வோம். அவர்களிடம் நீந்தும் துாரம், நேரம் இரண்டையும் அறிவிப்போம்...
''இரவு நீச்சலின் போது, 'சர்ச்லைட்' நீச்சல் வீரர்கள், பாதுகாப்புக்கு உதவுவர். நீச்சல் துவங்கியதும், இவர்களுக்கு முன், இரு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்புக்கு நீந்தி செல்வர். இன்று முதல், இருவரும் நீச்சல் பயிற்சியை ஆரம்பிக்கலாம்...'' என்றார் கடலோர காவல் படை வீரர்.
பாரடாசின் தடவி, கண்களுக்கு கண்ணாடி, தலைக்கு தொப்பி, லைப் ஜாக்கெட் அணிந்து, கடலுக்குள் குதித்தனர் மிகிரனும், சிற்பிகாவும்.
டிரில்லியன் லிட்டர் நீல திரவம் இருவரையும் கை நீட்டி அரவணைத்தது.
நீரில் மிதந்தபடியே, சிற்பிகாவை அழைத்தான் மிகிரன்.
''என்ன மிகிரா...''
''பூமியின் நிலப்பரப்பில், 71 சதவீதத்தை கடல் தான் ஆக்கிரமித்துள்ளது. பூமியின் நீர் இருப்பில், 96.5 சதவீதம், கடல் நீர் உள்ளது. கடல் லட்சக்கணக்கான அதிசயங்களை அடக்கியுள்ளது. மனிதன் விண்வெளியை ஆராய்ந்து பார்க்கும் அளவுக்கு கடலை ஆராயவில்லை...
''எங்கு பார்த்தாலும் நீர். ஆனால், அருந்துவதற்கு துளிகூட இல்லை என்றார் அறிஞர் சாமுவேல் டெய்லர் கோலரிட்ஜ். சூரிய பிரகாசத்தில் வாழ். கடலில் நீந்து; முரட்டுதனமாய் காற்றை குடி என்கிறது ஒரு பழமொழி...'' என்றான் மிகிரன்.
''மிகிரா... எனக்கும் சில பழமொழிகள் தெரியும். அவற்றில் சில... தனித்தனியாக நாம், ஒரு துளி; ஒன்று சேர்ந்தால், கடல்...'' என்றாள்.
''ஒளி கொண்டு போகாத இடத்திற்கு கடலலைகள் நம்மை அழைத்து போகட்டும். கடலை முகர்ந்து பார். வானத்தை உணர்; உன் ஆத்மா ஏழாம் வானில் பறக்கும்...''
''மிகிரா... கடலையும், வானத்தையும் விட, மனிதர்கள் மிக பலவீனமானவர்கள்...''
''அமைதியான கடல் திறமையான மாலுமியை உருவாக்காது...'' என்றான் மிகிரன்.
அப்போது, மிகப்பெரிய கடல் அலை, இருவரையும், பேய் தனமாய் தாக்கியது; கரையில் நின்று, வேடிக்கை பார்த்தோர் அலறினர். பதறினார் பயிற்சி கொடுத்த கணேசன்.
- தொடரும்...
- ஆர்னிகா நாசர்
