PUBLISHED ON : ஜூன் 22, 2018

கடந்த, டிச., 9, 2016 சிறுவர்மலர் இதழில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி, தனலட்சுமியின் சாதனையைப் பாராட்டி, 'ஸ்டூடன்ட்ஸ் க்ரவுன்' பகுதியில், 1,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டு, அவரைப் பற்றிய செய்தி வெளியானது.
இச்செய்தியைப் படித்த, மதுரை வாசகி ஜானகி, பள்ளி நிர்வாகத்துடன் பேசியதோடு, மகன் கார்த்திகேயனுடன் சென்று, மாணவி தனலட்சுமியின் சாதனை மெடல்களை பார்வையிட்டார். பெற்றோர், கூலித்தொழிலாளிகள் என்பதை அறிந்த ஜானகி, மாணவியின் விருப்பமான, ஐ.பி.எஸ்., படிப்பது வரையிலான, கல்வித்தொகை முழுவதையும், தானே ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார்.
'பல ஆண்டுகளாக, சிறுவர்மலர் இதழை படித்து வருகிறேன்; தீவிர வாசகி. அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை, வெளி உலகிற்கு எடுத்துக் காட்ட முயற்சிக்கும், பள்ளி தலைமை ஆசிரியர், லெ.சொக்கலிங்கம் மற்றும் தனலட்சுமியின் சாதனையை வெளிக் கொண்டு வந்த சிறுவர்மலர் இதழுக்கும், என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...' என்றார் ஜானகி.
மாணவியின் உயர் படிப்பு வரை, தொடர்ந்து உதவி செய்வதாக தெரிவித்ததுடன், இன்று வரை பள்ளிக் கட்டணத்தை மொத்தமாக கொடுத்து வருகிறார். ஜானகியின் மிகப்பெரிய உதவிக்கு, தனலட்சுமியும், அவரது பெற்றோரும் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.
