
மன்னர் சங்கரசிம்மன், சாகேத நாட்டை ஆண்டு வந்தார். அளவற்ற பக்தி உடையவர்.
ஒருமுறை கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை.
மருத்துவர்கள், 'இயன்ற வரை பார்த்து விட்டோம்; இனி, கடவுள் தான் குணப்படுத்த வேண்டும்...' என, கைவிரித்துவிட்டனர்.
மனம் உருகியபடி, 'என் வயிற்று வலியைக் குணப்படுத்தி விட்டால், கோவில் அருகே, ஒரு குளம் வெட்டி பசும் பால் நிரப்பி வைக்கிறேன்...' என வேண்டினார்.
படிப்படியாக நோய் மறையத் துவங்கியது. சில மாதங்களில் பூரண குணம் அடைந்தார்.
வேண்டுதல்படி, புதிய குளம் ஒன்றை வெட்டினார் சங்கரசிம்மன்.
அது, மிகக் கச்சிதமாக அமைந்திருந்தது.
உடனடியாக, 'இந்த குளத்தை பசுக்களில் கறக்கும் பாலால் நிரப்புங்கள்...' என உத்தரவு பிறப்பித்தார்.
குடம், குடமாக பாலை குளத்தில் ஊற்றினர் சேவகர்கள். ஊற்ற ஊற்ற வறண்டு போனது. முடிவில், ஒரு துளி கூட தங்கவில்லை.
இதைக் கண்டு கவலையடைந்தார் சங்கரசிம்மன். மூளையை கசக்கி யோசித்தார்.
'நகரில் வாழும் மக்கள், பசுவில் கறக்கும் பாலை எல்லாம், இந்த குளத்தில் தான் கொட்ட வேண்டும்... சொந்த பயன்பாட்டுக்கு எடுக்கக் கூடாது...' என, மற்றொரு உத்தரவு பிறப்பித்தார் சங்கரசிம்மன்.
உத்தரவை நிறைவேற்றுவதை கண்காணித்தனர் சேவகர்கள். வலுக்கட்டாயமாக பாலைப் பிடுங்கி குளத்தில் கொட்டினர். அப்போதும் நிரம்பவில்லை. வறண்டு, பொட்டலாக காட்சியளித்தது.
மன்னரின் கவலை அதிகரித்தது.
தொடர்ந்து, 'என் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், கறக்கும் பாலை தினமும் இந்த குளத்தில் கொட்ட வேண்டும்...' என, மீண்டும் ஓர் உத்தரவு பிறப்பித்தார் சங்கரசிம்மன்.
எப்படியாவது குளத்தை பாலால் நிரம்பி விடும் ஆவல் அவர் மனதில் இருந்தது. அதிகாரிகளும், சேவகர்களும், மன்னர் ஆணையை நிறைவேற்ற தீவிரம் காட்டினர். கண்காணிப்பு என்ற பெயரில் கெடுபிடி செய்தனர். கறக்கும் பால் முழுவதையும் குளத்தில் ஊற்றாதவர்களுக்கு, கொடும் தண்டனை அளிக்கப்பட்டது.
வேறுவழியின்றி, பயம், கலக்கத்துடன் குளத்தில் பாலை ஊற்றினர் மக்கள்.
இதன் காரணமாக, பச்சிளங் குழந்தைகள், பால் இல்லாமல் துடித்தன; முதியவர்களும், நோயாளிகளும் அவதியுற்றனர்.
இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை மன்னர். குளத்தை பாலால் நிரம்பிவிட வேண்டும் என்பதில் வெறியாக இருந்தார்.
குடம் குடமாக ஊற்றியும் கூட, குளத்தில் சொட்டும் நிற்கவில்லை.
ஒரு நாள் -
மக்கள் ஒழுங்காக பாலை ஊற்றுகின்றனரா என கண்காணித்து கொண்டிருந்தான் சேவகன். அப்போது, பசுவில் பால் கறந்து குவளையுடன் புறப்பட்டாள் ஒரு பெண். அவள் குழந்தை வீறிட்டு அழுதது. பசி அழுகையை சகிக்க முடியவில்லை.
துணிச்சலுடன், 'வந்தது வரட்டும்' என குவளையில் இருந்த பாலில், பாதியை குழந்தைக்குப் புகட்டினாள். மீதியை எடுத்தபடி குளம் நோக்கி நடந்தாள்.
அவளைப் பின்தொடர்ந்தான் சேவகன்.
உடனடியாக அவளை கைது செய்து, மன்னர் முன் நிறுத்த துடித்தது மனம். கடமையை நிறைவேற்றுவதில் அவசரம் காட்ட வேண்டாம் என தடுத்தது சிந்தனை.
பெண்ணை பின் தொடர்ந்தான் சேவகன்.
வழியில் நின்றான் ஒரு பிச்சைக்காரன். பெண்ணை வழிமறித்தபடி மனம் உருக, 'அம்மா... தாயே... பசி காதை அடைக்கிறது; ஏதாவது இருந்தால் கொடேன்...' என கெஞ்சினான்.
பெண்ணின் உள்ளம் உருகியது.
சற்றும் யோசிக்காமல் சிறிதளவு பால் கொடுத்தாள்.
குடித்தவன், 'தாயே... வாடிய என்னை காப்பாற்றினாய்; நீ நன்றாக இருக்க வேண்டும்...' என வாழ்த்தியபடி நகர்ந்தான்.
இதையும் பார்த்துக் கொண்டிருந்தான் சேவகன்.
சிறிது துாரத்தில், வயிறு ஒட்டியபடி பசியால் துடித்த நாய் அவள் அருகே வந்தது. வாலைக் குழைத்தபடி காலை நக்கியது. அதன் நாக்கு தொங்கியது. பால் குவளை மீது, தாவிக்குதித்தது. மிச்சமிருந்த பாலை நாய்க்கு வைத்தாள் பெண்.
சுவைத்துக் குடித்து, மகிழ்ச்சியுடன் வாலை ஆட்டியபடி சுற்றி வந்தது.
இந்தக் காட்சியையும் பார்த்துக் கொண்டிருந்தான் சேவகன்.
முடிவில் குளத்தை அடைந்தாள் பெண். குவளையைக் கவிழ்த்தாள். ஒரே சொட்டுப் பால் மட்டும் குளத்தில் விழுந்தது. அடுத்த கணம், பொங்கி நிரம்பி வழிந்தது குளம்.
இதைப் பார்த்த சேவகன், ஓடோடிச் சென்று செய்தியை மன்னரிடம் தெரிவித்தான். குளத்தருகே வந்தார் சங்கரசிம்மன். பாற்கடல் போல் பொங்கி வழிந்தது.
கைகூப்பி தொழுதபடி, 'இறைவா... குடம் குடமாக எவ்வளவோ பாலை, கொட்டி விட்டேன். அனைத்தும் பயனற்றுப் போனது. இந்த பெண் ஊற்றிய, ஒரு சொட்டுப் பாலால் தானா நிரம்ப வேண்டும்...' என்று கேட்டார்.
அவர் முன் தோன்றிய இறைவன், 'இந்தப் பெண் ஊற்றிய, ஒரு சொட்டுப் பால் தான் மகிழ்ச்சியை அளித்தது.
'கொடுமைகள் பல புரிந்து, குடம் குடமாகப் பாலைக் கொட்டினாய் நீ... அது திருப்தி அளிக்கவில்லை. அன்பான உள்ளத்துடன், ஒரு துளி தந்தாலும் பெருங்கடலுக்குச் சமம்...
'இனியாவது, ஏழை எளிய மக்களை வருத்த நினைக்காதே... அவர்கள் உள்ளத்தில் தான், நான் குடியிருக்கிறேன். மக்களை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்; அதுவே எனக்கு செய்யும் கொடை...' என்றார்.
அன்று முதல், ஏழை எளியவருக்கு தொண்டு செய்வதை குறிக்கோளாக்கினார் மன்னர்.
குழந்தைகளே... உணவுப் பொருட்களை வீணடிக்காமல் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

