PUBLISHED ON : ஏப் 23, 2022

சென்னையில் பணிபுரிந்து வந்தார், கார்த்திக். அவரது தங்கை மகன்கள் அருண் மற்றும் வருண். இரட்டையர்கள்; பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தனர். சிறு நகரம் ஒன்றில் பெற்றோருடன் வசித்தனர். அலுவலக வேலையாக, அந்த ஊருக்கு வந்தால் மருமகன்களை தவறாமல் சந்திப்பார், மாமா கார்த்திக்.
அன்று மாலை வீட்டிற்கு வந்தார் மாமா. வழக்கமாக சிறுவர் சிறுமியருக்கான கதை, கட்டுரை, அறிவியல், கணினி மற்றும் பொது அறிவு சம்பந்தமான புத்தகங்களை பரிசளிப்பார்.
'இம்முறை, என்ன வாங்கி வந்திருப்பார்' என ஆர்வம் பொங்க காத்திருந்தனர், சிறுவர்கள்.
'நீங்க விரும்பும் பரிசு வாங்கி வந்திருக்கிறேன்; ஊருக்கு புறப்படும் போது தான் தருவேன்...' என்றார் மாமா.
மறுநாள் காலை சிற்றுண்டி முடிந்தது.
இருவரையும் அழைத்து, ''கடந்த முறை கொடுத்த புத்தகங்களை படித்தீர்களா...'' என்று கேட்டார் மாமா.
''ஓ... எல்லாவற்றையும் படித்து விட்டேன்...'' என்றான் அருண்.
''நானும் தான்...'' என்றான் வருண்.
''நல்லது... புத்தகங்களை பத்திரமாக பாதுகாக்கிறீர்களா; எடுத்து வாங்க பார்க்கிறேன்...''
புத்தகங்களை கொடுத்தனர்.
கூர்ந்து கவனித்தபடியே, ''நீ... பொய் சொல்ற... புத்தகங்களை படிக்கவில்லையே...'' என்றார் மாமா.
'எப்படி கண்டுப்பிடித்தார்' என தவிப்புடன் நின்றான் வருண்.
''நற்பண்புகளுடன் கூடிய பழக்க வழக்கத்தை, கற்கத்தான் புத்தகங்களை பரிசாக தருகிறேன்; அவற்றை படித்து, பாதுகாத்து வைத்து இருக்கிறான் அருண். புத்தகங்களை திறந்தால் அழுக்கு படிந்துள்ளது...
''நண்பர்களுக்கும் கொடுத்து உதவி இருக்கிறான் என தெரிகிறது. படித்த பக்க அடையாளத்துக்கு, சீராக வெட்டிய மெல்லிய அட்டையை பக்கங்களில் வைத்திருக்கிறான்...
''ஆனால் வருண் புத்தகத்தை புரட்டியதோடு சரி; அவை, புத்தம் புதிதாகவே இருக்கின்றன...'' என்றார் மாமா.
தலை குனிந்தான் வருண்.
நாளிதழ் ஒன்றில் வெளியான கட்டுரையை காட்டினான் அருண். படித்ததில் பிடித்த புத்தகம் பற்றி எழுதியிருந்தான். உரிய பரிசும் கிடைத்திருந்தது.
வாழ்த்து தெரிவித்ததுடன், அந்த நாளிதழுக்கு ஓர் ஆண்டுக்கு பரிசு சந்தாவும் செலுத்தி, ''புத்தகம் மற்றும் இதழ்கள் எல்லாருக்கும் இனிய நண்பனாக இருக்கும்; சிறப்பாக பொழுது போக்க மட்டுமல்ல, அறிவுப் பசியை தீர்க்கவும் உதவுகிறது... படிப்பதால் உலகை நுட்பமாக பார்க்கலாம்; அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ளலாம்...'' என அறிவுரைத்தார் மாமா.
தயங்கியபடி, ''தவறை உணர்ந்தேன் மாமா... புத்தகத்தை அடுக்கி வைப்பது அழகுக்காகவோ, பெருமைக்காகவோ இல்லை; வாசித்தால் நல்ல வழிக்காட்டியாக இருக்கும் என புரிந்து கொண்டேன்...'' என்றான் வருண்.
''இப்ப இருவருக்கும் கை கடிகாரம் பரிசு தரப்போகிறேன்... அதுவும் ஆடம்பரம், பெருமைக்காக அல்ல; நேரத்தை திட்டமிட்டு, பயனுள்ள வகையில் செலவிட உதவும்; காலம் பொன் போன்றது...'' என்றபடி வழங்கினார்.
நன்றியுடன் பெற்றுக் கொண்டனர்.
குழந்தைகளே... நல்ல புத்தகங்களை படித்து நேரத்தை பயன் மிக்கதாக மாற்றுங்கள்!
டி.ஜானகி
