PUBLISHED ON : ஆக 10, 2018

மேற்குமலைக் காட்டில், கோட்டான்களும், காகங்களும் பகை உணர்வோடு வாழ்ந்து வந்தன; நீண்ட கால பகைக்கு காரணம் இருந்தது.
ஒரு முறை, அந்த காட்டில் வசித்த பறவைகள் அனைத்தும் கூடின. தலைவராக, முதிய கோட்டானை தேர்ந்தெடுத்தன. இதைப் பார்த்த ஒரு கிழட்டு காகம், ''பார்க்கவே அருவருப்பாக இருக்கும் கோட்டானையா, போயும் போயும் தலைவனாகத் தேர்ந்தெடுத்தீர்கள்; அதற்கு பகலில் கண் வேறு தெரியாது...'' என்று கிண்டலாக சொல்லி சிரித்தது.
இது, அங்கு திரண்டிருந்த கோட்டான்களுக்கு, கோபத்தை வரவழைத்தது. 'நாங்கள் அருவெறுப்பாக இருக்கிறோம் என்றால், நீங்கள் மட்டும் எப்படி இருக்கிறீர்கள்...' என்று கேட்டு எகிறின. உடனே, காகங்கள் திரண்டு கத்தின; கடுமையான வாய்த் தகராறு எழுந்தது. பின், அடிதடி சண்டையாக மாறியது.
இதுதான் ஆரம்பம். அப்போதிலிருந்து கோட்டான்களும், காகங்களும் எதிர் எதிராக நின்றன.
அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டது.
காகங்களுக்கு, பகலில் நன்கு கண் தெரியும்; ஆனால், கோட்டான்களுக்கு கண் தெரியாது. அதேபோல, இரவில் காகங்களுக்கு கண் தெரியாது; ஆனால், கோட்டான்களுக்கு நன்றாகத் தெரியும்.
இந்த இயற்கை குணத்தைப் பயன்படுத்தி, இரண்டும் தாக்கிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது.
ஒரு நாள், இரண்டு கோட்டான்களை, கொன்றன காகங்கள். இதை அடுத்து, கோட்டான்கள், தங்கள் ராஜாவிடம் புகார் தெரிவித்தன.
கடும் கோபமடைந்த ராஜா, வயதில் மூத்த கோட்டான்களை அழைத்து, ஆலோசனை நடத்தியது. இதற்கு நிரந்தரமான தீர்வு காண கருத்து கூறின. பக்கத்து மரத்தில் தங்கும் காகங்களை எல்லாம் கொன்று குவித்து விட தீர்மானித்தன; அதற்கான திட்டமும், துல்லியமாக வகுக்கப்பட்டது.
அன்று இரவு, காகங்கள் நிம்மதியாக, துாங்கிக் கொண்டிருந்தன. அப்போது, கோட்டான்கள் படை எடுத்து சென்றன. காகங்களை சரமாரியாகக் கொத்தி பெருந்தாக்குதல் நடத்தின.
திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத காகங்கள் நிலைகுலைந்தன; அலறித் துடித்தவாறு மரத்தில் இருந்து, விழுந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தாக்குதலை நடத்திய கோட்டான்கள், வெற்றி களிப்பில், பொந்துகளை நோக்கிப் பறந்தன.
மறுநாள் -
காலையில் பொழுது விடிந்த பின் பார்த்தால், மரத்தின் அடியில் மண் முழுவதும் சிவப்பாக மாறிப் போயிருந்தது. காகங்களின் ராஜாவும், சில காகங்களும் மட்டுமே தப்பிப் பிழைத்திருந்தன; மற்ற காகங்கள் அனைத்தும், இறந்து போய்விட்டன.
தங்கள் இனத்தையே காலி செய்த கோட்டான்களை, பழிக்குப் பழி வாங்க, சில காகங்கள் துடித்தன.
ஆனால், ராஜா காகமோ நிதானமாக, ''நாம் இருப்பதே, பத்தோ, பதினைந்தோ பேர் மட்டுமே; எப்படி கோட்டான்களை எதிர்த்து சண்டையிட முடியும்...'' என்று திருப்பிக் கேட்டது.
''கோட்டான்களுக்கு பகலில் கண் தெரியாது; அப்போது அவற்றை அழித்து விடலாம்...'' என்று, ஒரு காகம் யோசனை தெரிவித்தது.
''அது கோழைத்தனமான செயல்... நியாய, தர்மங்களுக்கு விரோதமாக போரிடுவது தவறு'' என்றது, ராஜா காகம்.
''நம்மை விட வலிமையான கழுகுகளின் உதவியை நாடலாம்; அவற்றின் உதவியால் அப்படியே கோட்டான்களை முழுவதுமாக அழித்து விடலாம்...'' என்றது மற்றொரு காகம்.
''ஆனால், கழுகுகள் உதவ மறுத்தால் என்ன செய்வது...'' என்று ராஜா காகம் கேட்டது.
இப்படியாக, காகங்கள் யோசனை செய்தன; ஆனால், எதுவுமே சரியாகப் பொருந்தி வரவில்லை.
மூத்த காகம் மட்டும், சும்மா இருந்தது. இதை கவனித்த ராஜா காகம், அதன் யோசனையைக் கேட்டது...
''நேருக்கு நேர் எதிர்த்துப் போரிட்டு வெல்வது நடக்காத காரியம்; பகல் வேளையில் பார்வை தெரியாது என்பதைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதும் தவறு. உறவாடிக் கெடுப்பது மட்டுமே நம்மால் செய்ய கூடியது...'' என்றது மூத்த காகம்.
''கோட்டான்களோடு உறவை வைத்துக்கொள்வது எப்படி...'' என்று நம்பிக்கையில்லாமல் கேட்டது ராஜா காகம்.
''அந்த பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். கச்சிதமாக செய்து முடிக்கிறேன். அப்புறம் தக்க நேரத்தில் அவற்றை தாக்கி வெற்றி பெறலாம்...'' என்றது மூத்த காகம்.
இதற்கு ராஜா காகம் சம்மதம் தெரிவித்தது; மற்ற காகங்களும் ஆமோதித்தன.
''அப்படியென்றால், அனைவரும் இந்த நிமிடமே, இந்த ஆலமரத்தை விட்டுப் பறந்து மலையடிவாரத்திற்குச் சென்று விடவேண்டும். ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது; மற்றவற்றை நான் பார்ததுக்கொள்கிறேன்...'' என்றது மூத்த காகம்.
அப்படியே, காகங்கள் அனைத்தும், உடனடியாக கிளம்பின.
மூத்த காகம், செத்துக் கிடந்த காகங்களை கண்ணீர் மல்க பார்த்தது. பின்னர் செத்து விழுந்து கிடந்த காகங்களின் உடல்களுடன் படுத்துக் கொண்டது.
அன்று இருள் சூழ்ந்தது. மூத்த காகம் மட்டும் வலி தாங்க முடியாமல் கதறுவதுபோல் முனகிக் கொண்டிருந்தது. கோட்டான் ராஜாவின் காதில் அந்த முனகல் விழுந்தது. உடனே, ''ஏதோ ஒரு காகம் வலி தாங்காமல் கத்துவது போலத் தெரிகிறது; என்னவென்று பாருங்கள்...'' என்று கட்டளையிட்டது.
சில கோட்டான்கள் சென்று பார்த்தன. 'ஒரே காகம் மட்டும் சாகாமல் வலியில் துடித்துக் கொண்டிருக்கிறது...' என்றன.
இதைக்கேட்டு மனமிரங்கிய கோட்டான் ராஜா, அதை துாக்கி வருமாறு கூறியது. கோட்டான்கள் இணைந்து, காகத்தை துாக்கி வந்தன. முனகுவது போல் நடித்த மூத்த காகத்திடம், ''என்ன ஆயிற்று...'' என்று பரிவோடு விசாரித்தது, கோட்டான் ராஜா.
''காகக் கூட்டத்திலேயே வயதில் மூத்தவன் நான். கோட்டான்களாகிய உங்களோடு பகைமை பாராட்டாமல், நட்போடு இருக்குமாறு எங்கள் ராஜாவிடமும், மற்ற காகங்களிடமும் அறிவுரை வழங்கினேன். என் பேச்சைக் கேட்கவில்லை. சண்டை போட தீய அறிவுரை கூறிய காகங்களின் பேச்சையே ராஜா காகமும் கேட்டது.
''உங்களை பழிக்கு பழி வாங்க வேண்டுமென்று மந்திரம் ஓதின. பகலில் உங்களுக்கு கண் தெரியாத நேரத்தில் பழி வாங்க யோசனை கூறின. ஆனால், இதில் எனக்கு மட்டும் உடன்பாடில்லை. அப்படி செய்வது தவறு என்று எடுத்துக் கூறினேன். இது, ராஜா உட்பட அனைத்து காகங்களுக்கும் பிடிக்கவில்லை. என்னைக் கண்மூடித்தனமாகத் தாக்கிவிட்டு, பறந்து சென்று விட்டன...'' என்று உண்மை போல, ஒரு பொய் கூறியது, மூத்த காகம்.
இதை, கோட்டான் ராஜா, உண்மை என்று நம்பிவிட்டது; சில கோட்டான்களும் அப்படியே நம்பின.
ஆனால், ஒரு சில கோட்டான்கள் மட்டும் நம்பவில்லை.
'ராஜா... இது நம் எதிரி. இதன் பேச்சை நம்ப வேண்டாம். அடைக்கலம் கொடுத்தால், நாளை நமக்கு தீங்கு ஏற்படும்; எனவே கொன்று விடலாம்...' என்றன.
ஆனால், ராஜா கோட்டானுக்கு, கொல்ல விருப்பமில்லை. மூத்த காகத்திற்கு அடைக்கலம் கொடுத்தது. அதற்கு உணவும் அளித்தது. மூத்த காகம் மிகவும் நட்புடன் நடந்து கொண்டதால், நம்பிக்கை பன்மடங்கு கூடியது; அமைச்சர்களில் ஒன்றாக நியமித்தது.
சில நாட்களில் -
அமைச்சர்களிலேயே அதிக அதிகாரம் உள்ளதாக, மூத்த காகம் மாறியது.
'கோட்டான்களைப் பழிவாங்க இதுவே சரியான தருணம்...' என்று நினைத்தது மூத்த காகம். அன்று பகல், குகையில் அனைத்து கோட்டான்களும் நன்றாக துாங்கிக் கொண்டிருந்தன. அப்போது, குகை வாசலை, குச்சிகளால் மூடி, அதில் நெருப்பை மூட்டி விட்டது.
குகைக்குள் புகை மூட்டம் பரவியதால், திடுக்கிட்ட கோட்டான்கள், மூச்சுத் திணறி வெளியேற முயன்றன. அப்போது, நெருப்பு அவற்றைப் பொசுக்கி விட்டது.
அனைத்து கோட்டான்களும் மடிந்தன. மகிழ்ந்த மூத்த காகம், மலையடிவாரம் சென்று, தன் கூட்டத்திடம், விவரத்தைச் சொன்னது.
சந்தோஷம் அடைந்த காகங்கள், கோட்டான் தொல்லையின்றி, அந்த ஆலமரத்தில் நிம்மதியாக வாழ்ந்தன.
குட்டீஸ்... எதிரி திடீர் என நட்பு பாராட்டினால், கவனமாக இருக்க வேண்டும். கவனம் தான் வாழ்க்கையை சரியாக வழிநடத்தும். சரியா...
