PUBLISHED ON : மார் 26, 2022

பசுநாட்டில், தனியாக வசித்து வந்தார், ஒரு பாட்டி; மிகவும் செல்வந்தர். பார்வை கோளாறு ஏற்பட்டதால், கண் மருத்துவரை அழைத்தார்.
வீட்டிற்கு வந்த மருத்துவர் பரிசோதித்து,''முறையான சிகிச்சை எடுத்தால், பூரண குணமடைய முடியும். மூன்று மாதம் வரை தொடர் சிகிச்சை பெற வேண்டும்; செலவு அதிகமாகும்...'' என எடுத்துரைத்தார்.
அதற்கு சம்மதித்து, ''எல்லாவற்றையும் நன்கு பார்க்கும் திறன் வர வேண்டும்; அது நிகழ்ந்தால், சிகிச்சை முடிந்தவுடன், முழு தொகையும் தருகிறேன்...'' என நிபந்தனை விதித்தார் பாட்டி.
அன்றே சிகிச்சையை துவங்கினார் மருத்துவர்.
நேர்மை, நாணயம், ஒழுக்கம் போன்ற நற்குணங்கள் மிகுந்தவர் அந்த மருத்துவர்; இருந்த போதிலும், பாட்டி வீட்டில் இருந்த தங்கம், வெள்ளி பொருட்களை கண்டதும் சபலம் கொண்டார்.
குறிப்பாக, பூஜை அறையில், தங்க சிலை, வெள்ளி குத்து விளக்கு மற்றும் சமையலறையில் வெள்ளி சாப்பாடு தட்டு போன்றவை கண்ணை உறுத்தின. சிகிச்சை அளிக்க வரும்போதெல்லாம் அவற்றை திருடி எடுத்து செல்வார் மருத்துவர்.
மூன்று மாதங்களுக்குப் பின் -
''சிகிச்சை முடிந்து விட்டது. எல்லாவற்றையும் இனி காண முடியும்; என் மருத்துவ கட்டணத்தை கொடுக்கிறீர்களா...'' என்று கேட்டார் மருத்துவர்.
வீட்டை சுற்றி பார்த்த பாட்டி, விலை உயர்ந்த பொருட்கள் திருடுபோய் இருப்பதை கண்டார். களவாடியது மருத்துவர் தான் என அறிந்தார்.
உடனே, ''இன்னும் முழுப்பார்வை கிடைக்கவில்லை; வீட்டில் அனேக பொருட்களை பார்க்க முடியவில்லை. அதனால் மருத்துவ கட்டணம் தர மாட்டேன்...'' என்றார்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
வழக்கு தொடுத்த பாட்டி, ''ஐயா... வீட்டில் இருந்த என் பொருட்களை பார்க்க முடியவில்லை; அவை கண்களுக்கு புலப்படாத போது, எவ்வாறு மருத்துவருக்கு கட்டணம் அளிப்பேன்...'' என நீதிபதியிடம் கூறினார்.
மருத்துவரை விசாரித்தார் நீதிபதி. உண்மை தெரிய வர, கடுமையாக கண்டித்து, நற்செயல்களை செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
திருடிய பொருட்களை, பாட்டியிடம் ஒப்படைத்து, மன்னிப்பு கேட்டார் மருத்துவர்.
குழந்தைகளே... பிறர் உடைமை மீது ஆசை படக்கூடாது!
வதுவை சுந்தரம்
