PUBLISHED ON : நவ 20, 2021

சென்னை, சேலையூர் கிறிஸ்துராஜா பள்ளியில், 1976ல், 11ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
வறுமையால் மூன்று வேளை சாப்பிடுவதே, குடும்பத்தில் பெரும் போராட்டமாக இருந்தது; எப்போதும் பசி மயக்கத்துடன் இருப்பேன். அன்று, அறிவியல் செய்முறை பதிவேட்டை சமர்பிக்க கூறியிருந்தார் வகுப்பு ஆசிரியை கல்யாணி.
உரிய நேரத்தில் சமர்ப்பிக்க இயலவில்லை. பசி களைப்பால் எழுத முடியாமல் இருந்தேன்; ஆசிரியை கேட்டபோது, 'ஒப்படைத்து விட்டேன்...' என பொய் கூறினேன்.
மறுநாள் செய்முறை பதிவேட்டை எழுதி, யாருக்கும் தெரியாமல், ஆசிரியையின் ஓய்வு அறையில் வைத்து திரும்பிய போது, எதிரே நின்று கொண்டிருந்தார் வகுப்பு ஆசிரியை.
வியர்த்து விறுவிறுத்தது; தாமதமின்றி, சூழ்நிலையை எடுத்துரைத்தேன்.
என்னை திட்டவோ, தண்டிக்கவோ இல்லை. மாறாக, அவர் எடுத்து வந்திருந்த உணவை சாப்பிட சொன்னார். எந்த அறிவுரையும் கூறவில்லை.
எந்த நிலையிலும் தப்பு செய்ய கூடாது என அன்று உறுதி எடுத்தேன்.
என் வயது, 6௧; மத்திய அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். ஒரு செயல் ஒருவரை நல்வழிபடுத்த வேண்டுமே தவிர, தண்டிப்பதாக இருந்துவிடக் கூடாது என, கற்பித்த அந்த ஆசிரியையை மனதில் ஏந்தி வாழ்கிறேன்.
- மீனாட்சி மதுசூதனன், சென்னை.
தொடர்புக்கு: 99627 51421
