
கடலுார் மாவட்டம், நெய்வேலி, க்ளூனி பள்ளியில், 1985ல், 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
வகுப்பு ஆசிரியை ஜானட் லாரன்ஸ், 'கல்லுாரியில் எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கப் போகிறீர்கள்...' என கேட்டார்.
சிலர், 'மேற்படிப்பிற்கு வெளிநாடு போவேன்...' என்றனர். பலவிதமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தனர். எதையும் தீர்மானிக்க முடியாமல் தலை குனிந்தபடி நின்றேன். கண்களிலிருந்து அருவியாக கொட்டியது கண்ணீர்.
இதைக் கண்டதும், 'வகுப்பு முடிந்த பின் ஆய்வுக்கூடத்துக்கு வா...' என ரகசியமாக கூறினார். அதன்படி சென்றேன். அழுகைக்கு காரணத்தை கேட்டார். கணக்குப்பாடத்தில் தவிப்பதை கூறினேன்.
எனக்காக, ஒரு மணி நேரம் செலவிட்டு, கணிதம் தவிர்த்த அறிவியல் பட்டப் படிப்புகள் பற்றி விரிவாக விளக்கினார். அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் என தெளிவு படுத்தினார்.
தக்க சமயத்தில் தந்த ஆலோசனையால் தெளிந்தேன். எனக்கு பிடித்த பாடத்தில் சேர்ந்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்.
இப்போது, என் வயது, 52; பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறேன். அந்த ஆசிரியை வழியில், முன்னேற்றத்துக்கு முடிந்தவரை ஆலோசனை வழங்குகிறேன். அன்று உதவிகரம் நீட்டியவரை மனம் மறக்க மறுக்கிறது.
- ப்ரீதா ரெங்கசாமி, சென்னை.

