
மதுரை, அவனியாபுரம், பி.எம்.எஸ்.வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், 2008ல், 1ம் வகுப்பு படித்த போது தமிழ் ஆசிரியையாக இருந்தார் பழனி; மிகவும் கண்டிப்பானவர். அன்று உயிர் எழுத்துக்களை எழுதச் சொன்னார்.
உரிய இடைவெளியுடன், அழகாக அமைய, 'விரல், மூக்கு வைத்து எழுது...' என அறிவுறுத்தினார்.
அதன் பொருள் புரியவில்லை; அதனால், விரலை வாய்மீது வைத்தும், மூக்கை புத்தகத்தில் படுமாறு குனிந்தபடி எழுதிக் கொண்டிருந்தேன்.
இதை கவனித்தவர் தலையில் தட்டி, 'ஏன் இப்படி எழுதுகிறாய்...' எனக் கேட்டார். பயத்துடன், 'மூக்கு வைத்து எழுதுகிறேன்...' என்றேன். வகுப்பே சிரிப்பொலியால் அதிர்ந்தது; அவரும் சிரித்து விட்டார்.
அருகில் வந்து, 'புரியவில்லை என்றால் நன்றாக கேட்டு தெரிந்து கொள்...' என்று, அன்புடன் கூறினார். அது பயத்தை விலக்கி, புதிய நம்பிக்கை தந்தது.
இப்போது எனக்கு, 20 வயதாகிறது. பொறியியல் படித்து வருகிறேன். இன்றும் பாடத்தில் விளக்கம் கேட்கும் போது, அந்த நிகழ்வை நினைவுப்படுத்திக் கொள்கிறேன்.
- சத்தியஸ்ரீ, மதுரை.

