தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குரங்கு போட்ட பிளான்

குரங்கு போட்ட பிளான்

குரங்கு போட்ட பிளான்


PUBLISHED ON : மே 20, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 20, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேதகிரி மலைச்சரிவில் மூன்று புறாக்கள் மிகவும் நட்போடு வாழ்ந்து வந்தன. எந்த நேரமும் மூன்று புறாக்களும் ஒன்று சேர்ந்துதான் இரைதேடச் செல்வது வழக்கம். வெகுநாட்களாகப் புறாக்கள் தங்களுக்குள் பிரிவினை ஏதும் ஏற்படுத்திக் கொள்ளாமல், ஒன்றையொன்று மிகவும் புரிந்து கொண்டு நட்போடு பழகிவந்தன.

புறாக்கள் மூன்றும் நெருங்கிய நட்போடு பழகி வருவதை ஒரு குரங்கு பார்த்தது. அந்தக் குரங்குக்கு எப்படியாவது இந்தப் புறாக்களின் நட்பைப் பிரித்து, அவைகளைப் பிடித்து உண்ண வேண்டும் என்ற ஆசை மனதுள் எழுந்தது. உடனே அதற்கான திட்டத்தையும் அது தயார் செய்தது.

ஒருநாள் புறாக்கள் மூன்றும் தனியாகப் பிரிந்து சென்று வெவ்வேறு இடத்தில் இரை தேடிக் கொண்டிருந்தன. அதனைக் கவனித்த குரங்கு இதுதான் சரியான சமயம் என்று முடிவு செய்து ஒரு புறாவின் அருகே வந்தது.

''பறவை நண்பா! நலமாக இருக்கிறாயா? என்ன இன்று உன்னோடு உன் சகோதரர்களைக் காணவில்லை!'' என்று ஏதும் அறியாதது போல் கேட்டது.

''வாரும் குரங்காரே! என் நண்பர்களும் ஆங்காங்கே என்னைப் போல் இரைத் தேடிக் கொண்டிருப்பார்கள். தாங்கள் வந்த வேலை என்னவோ?'' என்று சந்தேகத்துடன் கேட்டது புறா.

உடனே குரங்கு, ''பறவை நண்பா! நீ எந்த நேரமும் உன் நண்பர்களோடு சுற்றிக் கொண்டிருக்கிறாயே... அது உனக்குக் கேவலமாக இல்லையா... என்னைப்பார் நான் தன்னந்தனியாக சுதந்திரமாகத் திரிகிறேன். என்னைப் போன்று நீயும் இருக்க வேண்டியதுதானே!'' என்று கூறியது.

குரங்கின் குறுக்குப் புத்தியைப் புரிந்து கொண்ட புறா, ''குரங்காரே! பிறரின் விருப்பத்திற்குத் தடைபோட உமக்கு உரிமையில்லை. எனவே, நீர் எனது சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். நீ என்னதான் எனக்கு அறிவுரை கூறினாலும் எங்கள் மூவரின் நட்பை யாராலும் பிரிக்க முடியாது. இனிமேல் இந்த மாதிரி வஞ்சக எண்ணத்தோடு வந்து என்னிடம் பேசாதீர்!'' என்று கூறியது.

இதனைக் கேட்ட குரங்கு திடுக்கிட்டது. 'நமது திட்டம் நிறைவேறவில்லையே...' என்று ஆத்திரமடைந்தது. புறாவைப் பார்க்கப் பார்க்கக் குரங்கிற்கு ஆத்திரமாக வந்தது. உடனே, அருகில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து புறாவை அடிப்பதற்குப் பாய்ந்தது.

அதனைக் கண்ட புறா பயந்து பறந்து ஓடாமல், அமைதியாக குரங்கைப் பார்தது.

''குரங்காரே! சற்றுப்பொறும். மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்கிறேன், நன்றாகக் கேளும். உமது ஆத்திரத்தாலும், ஆணவத்தாலும் எங்களைப் பிரிக்க நினைக்காதீர். உமது கையால் பிறரை அடிக்க நினைக்காதீர். அடுத்தவருக்கு உதவி செய்து வாழத்தான் ஆண்டவன் நமக்கு இரண்டு கைகளைப் படைத்துள்ளார். நீரோ அடுத்தவரை அடித்து வாழ நினைக்கிறீர். இனிமேலாவது பிறருக்குக் கெடுதல் செய்யாமல் வாழக் கற்றுக் கொள்ளும்!'' என்று அறிவுரை கூறியது.

அதனைக் கேட்ட குரங்கு தன் கையிலிருந்த குச்சியை தரையில் போட்டுவிட்டது.

''பறவை நண்பா! என்னை மன்னித்து விடு. நான் உனக்கும் உன் நண்பர்களுக்கும் கெடுதல் செய்யவேண்டுமென நினத்தமைக்கு மனம் வருந்துகிறேன். இனிமேல் உங்கள் நட்பைப் பிரிக்க வேண்டுமென மனதால் கூட நினைக்கமாட்டேன். உன் அறிவுரைப்படி அடுத்தவரை அடித்துவாழ நினைக்காமல் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்தே வாழ்வேன். என் உள்ளத்தில் குடி கொண்டிருந்த பொறாமையைப் போக்கி என்னை நல்லவனாக்கிய உனக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!'' என்று கூறியது குரங்கு.

குரங்கு மனம் மாறியதைக் கண்டு புறாவும் மகிழ்ச்சியடைந்தது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us