/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
பெண் கல்வியில் புரட்சி ஏற்படுத்திய தாய்!
/
பெண் கல்வியில் புரட்சி ஏற்படுத்திய தாய்!
PUBLISHED ON : ஜன 02, 2021

சாவித்ரிபாய் புலே, இந்தியாவில், சிறுமியருக்கு கல்வி புகட்டிய முதல் பெண் ஆசிரியர். தற்போதைய மகாராஷ்டிரா மாநிலம் உள்ள பகுதியில், கல்வி வாய்ப்பற்ற குடும்பத்தில், ஜனவரி 3, 1831ல் பிறந்தார். ஏழை எளிய மக்களுக்காகப் போராடிய தீரர் மகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலேயை மணந்தார். அவர் கொடுத்த உற்சாகத்தால் கல்வி பயின்று சாதனைகள் படைத்தார்.
எளியவர்களுக்கு கல்வி புகட்ட, ஒரு பள்ளியை துவங்கினார் ஜோதிபா. அதில், கற்பிக்கும் பணியை ஏற்றார் சாவித்ரி. அந்த பணிக்கு சென்ற போது ஏற்பட்ட கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை. மிகவும் கண்ணியமாக எதிர்ப்பாளர்களை வென்றார். சகிப்பும், கருணை மனமும் அவரது வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தன.
பெண்களுக்கு கல்வி புகட்ட ஒரு பள்ளியை, மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே, 1848ல் துவங்கினார். மிகவும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த, ஒன்பது மாணவியர் அதில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு கல்வி புகட்டினார்.
அப்போது ஏற்பட்ட முரட்டுத் தனமாக எதிர்ப்புகளை சமாளித்தார். கற்பிக்க சென்ற சாவித்ரி மீது, மலம் வீசப்பட்டது.
அதை மிகவும் நுட்பமாக எதிர்கொண்டார். மாற்றுடை ஒன்றை, எப்போதும் உடன் வைத்திருப்பார் சாவித்ரி. எதிர்ப்பாளர்கள் வீச்சால் நாசமாகும் உடையை, வகுப்பறைக்கு சென்றதும் மாற்றி, புதிய உடையை அணிந்து பாடம் நடத்துவார். எதிர்த்தவர் எண்ணத்தை, இவ்வாறு தவிடு பொடியாக்கினார்.
மகாராஷ்டிராவில், 1876ல் பெரும் பஞ்சம் நிலவியது. உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர் மக்கள். பட்டினியைப் போக்க கடுமையாக உழைத்தார் சாவித்ரி. துயரம் தீர்க்க, அரசுக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். இலவச உணவுத் திட்டத்தை அமல்படுத்தினார்; பசிப்பிணியை போக்க அரும்பாடுபட்டார்.
விதவை பெண்களுக்கு உதவும் வகையில், 'பால்ஹத்திய பிரதிபந்தக் கிருஹா' என்ற இல்லத்தைத் துவக்கினார். அது வெற்றிகரமாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் தந்தது.
சாவித்ரியிடம் கற்ற மாணவி முக்தாபாய், ஒரு கவிதை எழுதினார். அது, 'தியானோதயா' இதழில், 'மங்குகள் மகர்களின் துக்கம்' என்ற தலைப்பில் பிரசுரமானது. சாவித்ரிபாயின் பணி அந்த கால சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை அந்த கவிதை வெளிப்படுத்தியது.
கொடிய தொற்றான பிளேக் நோய் தாக்கம், மகாராஷ்டிராவில், 1897ல் அதிகமாக இருந்தது. தொற்று பரவலைத் தடுக்க கடும் சட்டங்களை அமல்படுத்தியது ஆங்கிலேய அரசு. பாதிக்கப்பட்ட மக்கள், தனிமை படுத்தப்பட்டனர். அவற்றை எல்லாம் தாண்டி மக்களுக்கு உதவினார் சாவித்ரி.
அவரது வளர்ப்பு மகன் டாக்டர் யெஸ்வந்த், ராணுவத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் வீடு திரும்பியவரை, ஒரு மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்ரி. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கு இலவசமாக சிகிச்சை அளித்தார்.
கொடிய பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருந்தான், சிறுவன் பாண்டுரங் பாபாஜி. அவனை மருத்துவமனைக்கு துாக்கி வந்தபோது, சாவித்ரிக்கு நோய் தொற்றியது. சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவர் துாக்கி வந்த சிறுவன் பிழைத்தான்.
வாழ்க்கையை, சேவையால் நிறைத்தவர் சாவித்ரிபாய். இந்திய பெண் கல்வியின் தடைகளை தகர்த்த தாய் என போற்றப் படுகிறார். சிறந்த ஆசிரியருக்கான விருதை, 1852ல் ஆங்கிலேய அரசு, இவருக்கு வழங்கி கவுரவித்தது. மத்திய அரசு, இவர் நினைவாக, 1998ல் தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தளிர்களே... சாவித்ரிபாய் போல, எதிர்ப்புகளை தகர்த்து, உறுதியுடன் இலக்கை அடைய பாடுபடவேண்டும்.
லட்சிய பயண சுவடுகள்...
* தீண்டத்தகாதவர் என, ஒரு பிரிவு மக்களை ஒதுக்கி தண்ணீர் கூட தர மறுத்தனர் சிலர். அதை எதிர்த்து, வீட்டிலேயே தண்ணீர் எடுக்க அனுமதித்து, அந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க போராடினார்
* விதவையாகும் சிறுமியரை மொட்டையடிக்கும் கொடிய வழக்கம் அந்த காலத்தில் நிலவியது; அதற்கு எதிராக பிரசாரம் செய்தார் சாவித்ரி. தலை மழிக்கும் பணியைச் செய்தவர்களை திரட்டி கற்பித்து, அந்தக் கொடுமைக்கு முடிவு கட்டினார்
* விதவைகளுக்கு மறுமணம் செய்து ஆதரித்தார்
* மனித மாண்பை உயர்த்த, 'மஹிளா சேவா மண்டல்' என்ற சேவை அமைப்பை, 1852ல் துவங்கினார். பெண் கல்வி குறித்து அந்த அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
நம்பிக்கை விதை...
மராத்தி மொழியில் நவீன கவிதைகள் பல புனைந்துள்ளார் சாவித்ரிபாய். அவை, அனுபவத்தில் இருந்தே பிறந்துள்ளன. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என பல பொருண்மைகளில் பாடியுள்ளார்.
அவரது கவிதை...
போ... போய் படி...
சோராமல் உழை
சொந்தக்காலில் நில்
ஞானத்தை தேடு
செல்வம் சேர்
ஞானம் இழந்தால்...
விலங்கு போல் ஆவாய்
சோம்பல் படாதே
ஏழை மக்களின் துயரை துடை
தடுக்கும் சங்கிலியை உடை...

