
ராஜ், கூடைப்பந்து விளையாட்டு வீரன்; ஆறடி உயரம், 'சிக்ஸ் பேக்' உடலமைப்பு; உயரம் காரணமாக விளையாட்டில் முன்னிலை வகித்தான். விருதுகளை வென்றான்.
கல்லுாரி படிப்பை முடித்ததும் விளையாட்டு திறமைக்காக பிரபல நிறுவனம் வேலை தந்தது. இதனால், குள்ளமானவர்களை கேலி, கிண்டல் செய்வான்; அலட்சியப்படுத்துவான். எதிர்த்தால் தாக்குவான்; அராஜகம் செய்து வந்தான் ராஜ்.
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி இறுதி சுற்று அறிவிக்கப்பட்டது; அதில் சிறப்பாக விளையாடினால், உலக போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வரும்.
மைதானத்திற்கு பந்தாவாக புறப்பட்டான்.
வழியில் இருச்சக்கர வாகனம் கோளாறு செய்தது. மைதானத்திற்கு செல்ல இன்னும், 20 கி.மீ., துாரம் இருந்தது.
செய்வதறியாது திகைத்தான் ராஜ்.
கூட்டம் அலைமோத வந்தது பேருந்து. நெருக்கியடித்து ஏறினான்.
''யோவ்... நெட்டை பனைமரமே, டிக்கெட் வாங்கிட்டு உள்ள போயா...'' என சிடு சிடுத்தார் நடத்துனர்.
உயரம் காரணமாக ஐன்னல் வழியாக எட்டி பார்க்க முடியவில்லை. எந்த இடத்தில், பேருந்து செல்கிறது என்பதை அறிய இயலாமல் தவித்தான்.
அருகில் குள்ள உருவமாக நின்றவர், ''தம்பி... நீங்க எங்கு இறங்கணும்...'' என கேட்டார்.
கூறியதும், ''ஓ... கவலைப்படாதீங்க... உதவுகிறேன்...'' என கூறினார்.
இறங்கும் இடம் வந்தது. நடத்துனரிடம் பேருந்தை நிறுத்தக் கூறி உதவினார் குள்ள மனிதர். நன்றி சொல்லி இறங்கினான் ராஜ்.
போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றான்.
குள்ள மனிதர் உதவியால் தான், நேரத்துக்கு சென்று வெற்றி பெற முடிந்தது என்பதை உணர்ந்தான்.
உடலில் அல்ல; நல்ல உள்ளத்தில் தான் உயரம் உள்ளது என அறிந்தான்.
அன்று முதல் அனைவரிடமும் பணிவுடன் நடந்தான்.
தளிர்களே... ஆளும் வளரணும்; அறிவு வளரணும் அதுதான் வளர்ச்சி. இந்த உண்மையை புரிந்து செயல்படுங்கள்.
ஆர்.ரகோத்தமன்

