PUBLISHED ON : பிப் 07, 2014

படத்திலுள்ள அக்சய் பட்நாயக் ஒரு இன்ஜினியரிங் டிப்ளமோ பட்டதாரி. அசிஸ்டென்ட் இன்ஜினியராக வாழ்க்கையை துவக்கி, பிறகு பெட்ரோல் பங்க் வைத்து எடுபடாமல், போலகார்க் நகரில் குடியேறியவர். பணக்காரர்.
உள்ளூர் அரசியல்வாதி, சமூக சேவகர் என்ற பல தகுதிகள் இவருக்கு உண்டு. ஆனால், அதையெல்லாம் பின்னுக்கு தள்ளியுள்ளது இவருடைய சேமிப்பு ஆர்வம். பலன், இன்று இந்தியாவின், ஒரே தனியார் அறிவியல் மற்றும் தொழிற்சார்ந்த அருங்காட்சியக நிபுணர் என்ற அந்தஸ்தை மத்திய அரசு இவருக்கு வழங்கியுள்ளது.
2008ல் ஸ்ரீருஷ்டிசம்மன் என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் குர்தா ஜில்லாவில் போலகார்க் நகரில் அமைந்துள்ளது இந்த அருங்காட்சியகம். கடந்த 25 ஆண்டுகளாக ஒடிசா முழுவதும் மற்றும் உலகம் முழுவதி லிருந்தும் சேகரித்த அபூர்வ அறிவியல் மற்றும் தொழிற் சார்ந்த பொருட்களை அருங்காட்சியகத்தில் காணலாம்.
கல்கத்தாவில் உள்ள பி.எம்.பிர்லா சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் அருங்காட்சியகம் மற்றும் பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சி யகங்களுக்கு அடுத்தபடியாக இதனை கூறலாம். மிக கடுமையான தண்ணீர் பஞ்ச பூமி இது. 1997ல் தண்ணீருக்கு வழி செய்யுங்கள் என ஒடிசா முதல்வருக்கு உணர்த்த புவனேஸ்வருக்கு 3000 பேருடன் 65 கிலோ மீட்டர் சைக்கிளில் பவனி சென்றவர். இதனால் இவருக்கு 'water ambassador' என்ற செல்லப் பெயருண்டு.
பெகுனியா மற்றும் போலாகார்க் பகுதிகளில் ஒரு லட்சம் மரகன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவியவர். இன்று, இவர் தன் பொருட் களை இரண்டு பெரிய அறைகளில் நெருக்கி, அடுக்கி வைத்துள்ளார். மாறாக இவருடைய சேமிப்பு பொருட்களை, கண்காட்சியாக வைக்க குறைந்தது 10 அறைகளாவது தேவை. முன்னால் நகர சேர்மனான இவர் இதற்காக அரசுடன் மல்லு கட்டி நிற்கிறார். ஆனால், அரசு இதுவரை வழங்கவில்லை. ஒடிசா அரசு தன் பாரா முகத்தை எப்போது விலக்கிக் கொண்டு முழு ஆதரவு தருமோ தெரியவில்லை!
அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்கள்!
* 300 வகையான ரேடியோக்கள் (பல வித பிராண்ட்... பல வித நாடுகள்... பல காலத்தவை)
* 30 விதமான டெலிபோன்கள்... 10 விதமான க்ராமபோன்கள்,
* 20 விதமான கேமராக்கள்,
* 10 விதமான அபூர்வ உலோக மற்றும் கண்ணாடி கூண்டு விளக்குகள்,
* 70 வகையான சுவர் கடிகாரங்கள்,
* 20 வகையான மேஜை கடிகாரங்கள் (இவை 150 ஆண்டுகளான பாரம்பரியம் சார்ந்தவை)
* 10 வகையான ராட்டை கருவிகள்,
* பெர்ரி... மெகூரி என அழைக்கப்படும் இன்று காணாமல் போய் விட்ட இசைக் கருவிகள்.
* காட்டு எருது கொம்பினால் ஆன இசைக் கருவி,
* மண்ணெண்ணெயில் இயங்கும் பிரிட்ஜ்,
* கால்டெக்ஸ் நிறுவனம் உருவாக்கிய பழங்கால டின் டிரம்.
* செராமிக் இங்கிலிஷ் வாட்டர் பில்டர்...
* பராங்கா பிரபல கண்ணாடி தொழிலகத்தில் உருவாக்கப்பட்ட அபூர்வ மூன்று கண்ணாடிகள்,
* சிகை அலங்கார நிபுணர் 100 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய கத்தி,
* கரியால் இயக்கப்பட்ட பிரஷர் குக்கர்!
* இந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சியில், ஒரு இந்தியர், ரிசர்வ் பேங்க் கவர்னராகி கையெழுத்திட்ட முதல் 10 ரூபாய் நோட்டு
* 95 நாடுகளிலிருந்து 2000க்கும் அதிகமான தபால் தலைகள்.
* 200 வகையான, பிரிட்டிஷ் காலத்திய தபால்கார்டுகள், இன்லான்ட் கடிதங்கள்,
* 45 நாடுகளைச் சார்ந்த 1000 க்கணக்கில் ரூபாய் நோட்டுக்கள்,
* 70 நாடுகளில் பயன்படுத்தப்பட்ட, படும் நாணயங்கள் (இவற்றில் திப்புசுல்தான் அக்பர், சத்யவாகன பரம்பரையினர், குவாலியர் மற்றும் இந்தூர் அரசினர் செயல்படுத்திய நாணயங்களும் அடங்கும்)
- ராஜிராதா.
