தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஒரு நெல் மணி....

ஒரு நெல் மணி....

ஒரு நெல் மணி....


PUBLISHED ON : செப் 27, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரபுநாட்டு அரசன் சித்ராங்கதனுக்குக் கதை கேட்பதில், மிகுந்த விருப்பம் இருந்தது. அதனால் தினமும், சில அறிஞர்களை வரவழைத்து, கதைகளைக் கேட்டு வந்தான். சில அறிஞர்கள் கூறிய கதைகள் ஒரு நாளிலேயே முடிந்து விட்டன. சில அறிஞர்கள் கூறிய கதைகள், இரண்டு மூன்று நாட்கள் நீடித்தன. அரசனும் அக்கதைகளைக் கேட்டு, கதை சொன்னவர்களுக்குப் பரிசுகள் வழங்கி அனுப்பி வந்தான்.

திடீரென்று, அந்த அரசனின் மனதில் விபரீத ஆசை ஒன்று முளைத்தது. அதாவது, ''பலரும் வந்து கதை சொல்லிப்போகின்றனர். இருப்பினும், அக்கதைகள் ஒன்றிரண்டு நாட்களில், முடிந்து விடுகின்றனவே! தன் வாழ்நாள் முழுவதும் முடியாத கதையை யாராவது தனக்குச் சொன்னால் தன், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக கதையைக் கேட்டுக்கொண்டு இருக்கலாமே!'' என்று நினைத்தான் அரசன்.

எனவே, அரசன் தனது அமைச்சரிடம், ''அமைச்சரே! முடியாத கதையொன்றைக் கேட்க, எனக்கு ஆசையாக உள்ளது. எனவே, யாரேனும் அரசவைக்கு வந்து, முடியாத கதையை எனக்குச் சொல்ல வேண்டும் என்றும், அவ்வாறு கதை சொல்பவர்களுக்கு மிகச்சிறந்த பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு செய்யுங்கள்!'' என்று உத்தரவிட்டான்.

அமைச்சரும், அரசனின் உத்தரவை நாட்டு மக்களிடம் அறிவித்தார்.

அறிவிப்பைக் கேட்ட அறிஞர் ஒருவர் முதலில் அரசவைக்கு வந்தார். அவர், முடியாத கதையொன்றை அரசனிடம் தான் சொல்லப் போவதாகக் கூறினார். அரசனும் மனம் மகிழ்ந்தான். அவ்வறிஞரை, அரண்மனையில் தங்கும்படி செய்து, அவரை சிறந்த முறையில் உபசரித்தான். தினமும் காலையில் அரசவைக்கு வந்த அவ்வறிஞர், அரசனுக்கு ராமாயணக் காப்பியத்தைக் கூறத் தொடங்கினார். அரசனும் மிக்க மகிழ்ச்சியோடு கதை கேட்கலானான். ஆறு மாதங்கள் சென்றன. ராமாயணக் கதை முடிவுக்கு வந்தது.

கதை முடிந்துவிட்டதை அறிந்த அரசனுக்குக் கோபம் வந்தது. அவன் அவ்வறிஞரிடம், ''முடியாத கதையொன்றைச் சொல்லப் போவதாகக் கூறினீர்கள். ஆனால், கதை முடிந்து விட்டதே!'' என்று சொல்லி, அவ்வறிஞரைச் சிறையில் அடைத்தான்.

சில நாட்களில் வேறொரு அறிஞர் அரசவைக்கு வந்தார். அவர் அரசனிடம், ''நான் உங்களுக்கு முடியாத கதையைச் சொல்கிறேன்!'' என்று கூறினார். அரசனின் மனம் மிகுந்த மகிழ்ச்சி கொண்டது. மறுநாள் முதல் அவ்வறிஞரும் அரண்மனையிலேயே தங்கி, அரசனிடம் மகாபாரதக் காப்பியத்தை கூறத் தொடங்கினார். மன்னனும் மிகுந்த ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும் கதை கேட்கலானான். ஒரு ஆண்டு கடந்தது. மகாபாரதக் காப்பியமும் முடிவுக்கு வந்தது. கதை முடிந்ததும், மன்னனுக்குக் கோபம் வந்தது. அவன் அவ்வறிஞரையும் சிறையில் அடைத்தான்.

அரசனின் செய்கைகள் அமைச்சருக்கு, வருத்தத்தை அளித்தது. ஆனால், அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. அமைச்ச ருக்கு, பதினைந்து வயதே நிரம்பிய சத்திய சீலன் என்ற மகன் ஒருவன் இருந்தான். அவன் தனது தந்தையின் வருத்தத்தை அறிந்தான்.

அவன் தன் தந்தையிடம், ''தந்தையே! முடியாத கதையை அரசனுக்கு நான் போய் சொல்லலாமா?'' என்று கேட்டான்.

மகனின் பேச்சு அமைச்சருக்கு வியப்பை அளித்தது.

''சத்தியசீலா! மிகப்பெரிய அறிஞர்களே அரசனுக்குக் கதை சொல்லப்போய், இன்று சிறையில் துன்புறுகின்றனர். சின்னஞ்சிறு பாலகனான நீ எப்படி அரசனிடம் முடியாத கதையைச் சொல்வாய்? இந்த விபரீத சோதனை எல்லாம் வேண்டாம். நீ சிறையில் துன்புறுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது,'' என்று கூறினார்.

ஆனால், சத்தியசீலனோ, ''தந்தையே! அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். என்னை நம்புங்கள். அரசனிடம் அழைத்துச் செல்லுங்கள்!'' என்று கூறினான்.

மகனின் பிடிவாதத்தைக் கண்ட அமைச்சர், அரசனிடம் அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டார்.

அரசவைக்கு வந்த சத்தியசீலன் அரசன் சித்ராங்கதனிடம், ''அரசே! இன்று முதல் நான் தங்களுக்கு முடியாத கதையொன்றைச் சொல்லப் போகிறேன்!'' என்று பணிவோடு கூறினான்.

பாலகனான சத்தியசீலனைக் கண்ட அரசனுக்கு வியப்பாக இருந்தது.

''சத்தியசீலா! நீ சிறுபிள்ளை! நீ எனக்குக் கதை சொல்லப் போகிறாயா? ஒருவேளை நீ சொல்லப்போகும் கதை முடிந்துவிட்டால், அமைச்சரின் பிள்ளை என்றும் நான் தயங்க மாட்டேன். உன்னை சிறையில் அடைப்பேன். சம்மதமா?'' என்று கேட்டான்.

''அரசே! நான் சொல்லப்போகும் கதை நிச்சயம் முடியாது! எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது!'' என்று உறுதியாகச் சொன்னான் சத்தியசீலன். இறுதியாக, சத்தியசீலனின் கதையைக் கேட்க அரசனும் சம்மதித்தான். அன்றைய தினமே, சத்தியசீலனும் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

''அரசே! ஒரு தோட்டத்திலுள்ள உயர்ந்த மரத்தில் குருவி ஒன்று கூடுகட்டி வசித்து வந்தது. அது தினமும் காலையில் ஒரு வீட்டிலிருந்த நெற்களஞ்சியத்திலிருந்து ஒரு நெல்மணியைக் கொத்தி எடுத்த பின், தன் கூட்டிற்குப் பறந்து போனது. அந்த நெல் மணியை அங்கு வைத்துவிட்டு, பின் திரும்பி அந்த வீட்டிற்குப் பறந்து வந்தது. மீண்டும் நெற்களஞ்சியத்திலிருந்து ஒரு நெல் மணியைக் கொத்தி எடுத்து தன் கூட்டிற்குப் பறந்து போயிற்று,'' என்று மீண்டும் மீண்டும் சொன்னதையே, சொல்லிக் கொண்டிருந்தான் சத்தியசீலன்.

''சரி, அடுத்து என்ன நடந்தது?'' என்று ஆர்வத்தோடு கேட்டான் அரசன்.

''குருவி நெல்மணிகளை எடுத்துவந்து வைத்துக் கொண்டிருக்க, இரவுப் பொழுது வந்துவிட்டது. இனி என்ன நடந்தது என்பதை நாளை கூறுகிறேன்,'' என்று சொல்ல, அரசனும் எழுந்து சென்று விட்டான்.

மறுநாள் கதைகேட்கும் ஆவலில் அரசன் அமர்ந்தான். சத்தியசீலனும் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

''அரசே! மறுநாள் பொழுது புலர்ந்தது. குருவி மீண்டும் அந்த வீட்டிற்குப் பறந்து வந்தது...'' என்று கதையை ஆரம்பித்தான்.

மன்னனுக்கோ சலிப்பு தோன்ற ஆரம்பித்தது. அவன் சத்தியசீலனிடம், ''சரி! முந்தைய தினம் குருவி கூட்டில் கொண்டு போய் வைத்த நெல்மணிகள் என்ன ஆயிற்று?'' என்று கேட்டான்.

''அரசே! அந்த நெல்மணிகளைத்தான் அன்றைய இரவுக்குள் குருவி தின்று விட்டிருக்குமே! மறுநாளுக்கான நெல் மணியைக் அந்தக் குருவி கொண்டுவர வேண்டாமா?'' என்றான் சத்தியசீலன்.

''சரி! அந்த வீட்டின் நெற்களஞ்சியத்தி லுள்ள நெல்மணிகள் எல்லாம் தீர்ந்து விட்டால், குருவி என்ன செய்யும்?'' என்று கேட்டான் அரசன்.

''அரசே! நெற்களஞ்சியத்தில் நிறைந்திருக்கும் நெல்மணிகளை குருவி தின்று தீர்த்துவிட முடியுமா? ஒருவேளை ஒரு சில மாதங்களில் நெல்மணிகள் குறைந்து விட்டாலும், அதற்குள் அடுத்த அறுவடை நடந்துவிடுமல்லவா? மீண்டும் நெற்களஞ்சி யத்தில் நெல் வந்துவிடுமல்லவா?'' என்றான் சத்தியசீலன்.

உடனே மன்னன், ''சரி! ஒருவேளை அந்தக் குருவி முதுமையடைந்து இறந்து விட்டால், என்ன ஆகும்?'' என்று கேட்டான்.

''அதற்குள் அந்தக்குருவி முட்டையிட்டு, குஞ்சு பொரிந்து வேறு குருவி வந்துவிடும் அல்லவா?'' என்று பதிலளித்தான் சத்திய சீலன்.

'மன்னனுக்கு சத்தியசீலனின் நோக்கம் புரிந்தது. சத்தியசீலன் சொல்லிக் கொண்டிருக்கும் கதை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முடியப் போவதில்லை. முடியாத கதை கேட்க வேண்டும் என்ற தனது விபரீத எண்ணத்தை முறியடிக்கும் திட்டத்தோடுதான் சத்தியசீலன் வந்திருக்கிறான் என்பதை' அரசன் அறிந்து கொண்டான். அரசன் சத்தியசீலனிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டான். மேலும், தனது பிடிவாத குணத்தை உணர்த்திய சத்தியசீலனிடம், ''சத்தியசீலா! சிறுவயதிலேயே நீ மிகுந்த அறிவும் புத்திசாதுர்யமும் பெற்றிருக்கிறாய். உன்னைப் பாராட்டுகிறேன். உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்!'' என்று சொன்னான் மன்னன்.

''மன்னா! நான் எந்தப் பரிசும் கேட்கப் போவதில்லை. ராமாயணம், மகாபாரதம் போன்ற மாபெரும் காப்பியங்களைச் சொன்ன அறிஞர்களை நீங்கள் சிறையிலிருந்து விடுவித்தால், போதும்! அதற்காகவே, நான் இங்கு வந்தேன்,'' என்று பணிவோடு கூறினான்.

சத்தியசீலனின் அறிவாற்றலையும், நற்குணத்தையும் பாராட்டிய அரசன் சித்ராங்கதன், தான் சிறையிலடைத்த அறிஞர்களை விடுதலை செய்தான். சத்தியசீலனையும் அந்நாட்டு அமைச்சர்களில் ஒருவராகப் பணியமர்த்தினான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us