PUBLISHED ON : செப் 27, 2013

இத்தாலி நாட்டின் மிக நீளமான நதி 'போ'. இது நானூறு மைல் தூரம் ஓடுகிறது. ஆல்ப்ஸ் மலையின் காட்டியன் முடியிலிருந்து உற்பத்தி யாகிறது; கடல் மட்டத்துக்கு 6630 அடிகள் உயரத்தில். முதலில் கிழக்கு நோக்கியும், பிறகு வடக்குத் திசையிலும் பாய்ந்து ஓடுகிறது 'போ' நதி.
அட்ரியாடிக் கடலில் சங்கமிக்கு முன்பாக, 'போ' நதி இத்தாலியிலுள்ள வடக்கு சமவெளியைக் கடக்கிறது. இங்கிருந்து ஏராளமான வண்டல்களைச் சேகரித்துக் கொள்ளுகிறது. இதனால், இந்நதிக்கரைப்பகுதிகளில் சில இடங்கள் நிலப்பரப்பிலிருந்து உயர்ந்து காணப் படுகிறது. ஆகவே, இப்பகுதிகளில் மாரிக் காலத்தில், வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த அணைக்கட்டுகளை நிறுவியுள்ளனர். இதன் வண்டலினால், நதியின் போக்கும் மாறி, பெரும் சுழிமுகங்களை (டெல்டா) உருவாக்கியுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது, நேச நாடுகளுக்கு பெரும் பிரச்னையாக விளங்கியது 'போ' நதி. இந்நதியிலுள்ள பாலங்களில் 23-ஐ ஜெர்மானியர் பயன்படுத்தி வந்தனர். இப்பாலங் கள் 1944ல் அழிக்கப் பட்டன. ஆகவே, இரவில் அவசரகாலப் பாலங்கள் அமைக்கப்பட்டு, பகலில் அவற்றை அகற்ற வேண்டி இருந்தது.
போ நதியின் முக்கிய கிளை நதிகளில் ஒன்று டிசினோ. புராதன நகரமான பாவியாவிற்குச் சமீபத்தில் இது, போவோடு கலக்கிறது. பாவியா நகரம் காண்டர்பரி ஆர்ச்பிஷப்பான லான்பிராங்கின் பிறப்பிடமாகும். இவர் ஆர்ச் பிஷப்பாக 1070 முதல் 1089 வரை பதவி வகித்தார்.
போ நதியின் பெரும் பகுதி படகுப் போக்கு வரத்துக்கு உகந்தது. 130 டன் எடை கொண்ட படகுகளை போ நதியில் செலுத்த டிசினோ நதியின் இணைப்புக்குப் பின் முடிந்தது. க்ரிமோனாவுக்கு அப்பால் அடா என்ற கிளை நதியும் போ வுடன் கலக்கவே, இதன் படகுப் போக்குவரத்தின் சக்திமேலும் அதிகரித்தது. 600 டன் எடையுள்ள மிதவை கப்பல் படகுகளையும் இந்நிலையில் செலுத்த முடிந்தது.
போ நதியின் சுழிமுகப் பகுதி 150 சதுரமைல் அளவுக்கு விரிந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த டெல்டா பகுதியின் சுற்றளவு கால் மைல் அதிகரித்துக் கொண்டு வருகிறது. வண்டல்கள் சேருவதினால் 13 மில்லியன் டன் வண்டல் இச்சுழிமுகப்பகுதியினூடாக, ஏராளமான கால்வாய்கள் உருவாகிச் செல்கின்றன. இக்கால்வாயின் நீர் அனைத்தும் அட்ரியாடிக் கடலில் போய் விழுகிறது.
டிசினோ, அடா கிளை நதிகளைத் தவிர செஸியா, ஓகிலியோ, மின்சியோ, டானரா, டிரிபியா, செச்சியா ஆகிய கிளை நதிகளும் 'போ'வுடன் கலக்கின்றன. 'போ' நதி ஆரம்பத்தில் போடின்கஸ் அல்லது போடன் கஸ் என்றும், பாதுஸ் என்றும் அழைக்கப்பட்டது.
***
