PUBLISHED ON : டிச 04, 2021

இந்திய மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்றது பேரரத்தை தாவரம். புல்வெளி சார்ந்த இஞ்சி இன செடி வகையை சேர்ந்தது. தும்ரஷ்டகம் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில், 'காலங்கல்' என்பர். தாவரவியல் பெயர், அல்பினியா காலங்கா. இரண்டு மீட்டர் வரை வளரும். விரும்பும் நறுமணம் தரும்.
இலை, நீண்ட ஈட்டி வடிவானது. ஒரு போக்கு நரம்புடையது. மேல்பகுதி அடர் பச்சையாகவும், கீழ்ப்பகுதி சாம்பல் பச்சையாகவும், ஓரம் வெண்மையாகவும் காணப்படும். நடுநரம்பு வலிமையானது.
மலர், பச்சை கலந்த வெண் தொகுப்பாக அமைந்திருக்கும். பூ இதழ் வெண்மையாக, சிவப்புக் கீற்றாக காணப்படும்.
பழம், ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். வேரில் உள்ள கிழங்கு, காரச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது.
தென்கிழக்கு ஆசியாவை தாயகமாக கொண்டது பேரரத்தை. தரையடித் தண்டை துண்டித்து நட்டால் வளரும். ஆசியா முழுவதும் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை, இமயமலையின் கிழக்குச் சரிவுகளில் விளைகிறது.
இதே குடும்பத்தில், சிற்றரத்தை என்ற தாவரமும் உள்ளது. தமிழர்கள், 'சித்தரத்தை' என்பர். பாரம்பரிய மருத்துவத்தில் அதிக பலன் தரும்.
அண்டை நாடுகளான சீனா, வங்கதேசத்தில் வாணிக ரீதியாக பயிரிடப்படுகிறது பேரரத்தை. கிழக்காசிய நாடுகளில் உணவில் பெருமளவு சேர்கிறது. வீட்டுத் தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம்.
