PUBLISHED ON : ஏப் 20, 2018

கேரள மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில், ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வகுப்பில், மலையாளம் கற்பிக்கும் ஆசிரியருக்கு, மூக்குப்பொடி போடும் பழக்கம் உண்டு. அவ்வப்போது, உறிஞ்சிக் கொண்டே இருப்பார்...
அவருக்கு ஜலதோஷம் வந்தால், கேட்கவே வேண்டாம்; சளியும், மூக்குப் பொடியுமாக வெளியே வரும். அதை வேஷ்டியின் ஒரு நுனியால் துடைத்துக் கொண்டே இருப்பார். இதைப் பார்க்க, மிகவும் அருவருப்பாக இருக்கும்.
ஆனால், குருவாயிற்றே... எப்படிச் சொல்வது...
இதற்கு ஒரு சந்தர்ப்பம் வந்தது; அதை பயன்படுத்தி ஒரு வழி கண்டுபிடித்தோம்.
அவரது பிறந்த நாள் என்று கூறி, மாணவியருக்கு, ஒருநாள் இனிப்பு கொடுத்தார். நாங்கள் எல்லாரும் சேர்ந்து, ஆசிரியருக்கு ஒரு அன்புப் பரிசு கொடுத்தோம். அது என்ன தெரியுமா... இரண்டு டஜன் கைக்குட்டைகள்.
பரிசு பாக்கெட்டை திறந்து பார்த்தவர் முகத்தில், கிலோ கணக்கில் அசடு வழிந்தது. அன்றிலிருந்து, அந்த கெட்ட பழக்கத்தை கைவிட்டார். மூக்கில் கழிவு வரும் போது, கைகுட்டையால் நேர்த்தியாக துடைக்க ஆரம்பித்தார்.
இந்த சம்பவம் நடந்து, 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது!
- சாவித்திரி, சென்னை.
