PUBLISHED ON : ஏப் 20, 2018

நான் படித்த பள்ளி, கிறிஸ்துவ அமைப்பின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. எந்த வேறுபாடும் இன்றி, அனைவரும் பழகுவர். ஒருநாள், என் வகுப்பு மாணவி, நெற்றியில் பொட்டு வைக்காமல் வந்தாள். அவள், இந்து சமயத்தைச் சேர்ந்தவள்.
ஆசிரியை அவளை அழைத்து, 'ஏன் பொட்டு வைக்கவில்லை' என்று கேட்டார். அந்த மாணவி, 'இது கிறிஸ்தவப்பள்ளி; அதனால் பொட்டு வைக்க வேண்டாம் என, என் அம்மா கூறினார்...' என்றாள்.
உடனே, ஆசிரியை, 'இவளுக்கு மட்டுமல்ல... எல்லாருக்கும் சொல்கிறேன்... அவரவர் சமயம், அவரவர்க்கு உயர்வு; எனவே, அந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவது தான் சரி... நாங்கள் பிறந்ததும், ஆலயத்தில் பிரார்த்தனை செய்து, நெற்றியில் சிலுவைக்குறி போடுவதால், பொட்டு வைப்பதில்லை... நீங்கள் நம்பும் வழிமுறையை பின்பற்றுங்க; வேண்டாத வழக்கத்தை கடைப்பிடிக்காதீங்க... எல்லா சமயமும் போதிப்பது அன்பு, மனிதநேயம், கருணை, தோழமையைத்தான்... அதை புரிந்து கொள்ளுங்க. மாற்று சமயவத்தவருடன் இணக்கமா இருங்க...' என்று அறிவுரை கூறினார். இப்படிப்பட்ட ஆசிரியை கிடைக்க, நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
- ர.சியாமளா, சென்னை.
