தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நம்பிக்கை விதை!

நம்பிக்கை விதை!

நம்பிக்கை விதை!


PUBLISHED ON : செப் 19, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெடுஞ்சோழிங்கபுரம் நாட்டை ஆட்சி செய்து வந்தார் மன்னர் சோழிங்கன்; நாடு செழிப்புற்றிருந்தது. மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் மக்கள்.

மன்னருக்கு வாரிசு இல்லை. மிகவும் கவலையடைந்தார். திடீர் என, நாட்டின் ஒரு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

அன்று அரசவை கூடியது. அதில் பேசிய மந்திரி, 'நாட்டின், கிழக்கு திசையில், அடர்ந்த காடு உள்ளது; அதன் வழியாக சென்றுதான் அண்டை நாட்டில், வாணிபம் செய்கின்றனர்.

'அவ்வழியாக சென்ற வணிகர்கள் பலர், நாடு திரும்பவில்லை; காட்டில், கொடிய மிருகம், வியாபாரிகளைக் கொன்று குவிப்பதாக கூறுகின்றனர். தற்போது, யாரும் வாணிபத்துக்கு செல்வதில்லை; இதனால் வறுமையில் வாடுகின்றனர் மக்கள்...' என்றார்.

பதறியபடி ராஜரிஷியிடம் ஆலோசனை கேட்டார் மன்னர்.

சோழிகளை உருட்டி, 'வீரர்களை அனுப்பினால் நல்ல முடிவு கிடைக்கும்...' என்று கூறினார் ராஜரிஷி.

வீரர்களை அழைத்து, பணித்தார் மன்னர்.

பயத்தால் யாரும் முன்வரவில்லை.

பின், 'காட்டில் உலவும் கொடிய மிருகத்தை கொல்பவன், அரசனாக முடி சூட்டப்படுவான்...' என்ற அறிவிப்பை வெளியிட்டார் மன்னர்.

உயிர்பயத்தில் அமைதி காத்தனர் மக்கள்.

'ஒருவருக்கு கூடவா துணிச்சல் இல்லை...' என, வருந்தினார் மன்னர்.

சில நாட்களுக்கு பின், அரசவைக்கு வந்தான் அகிலவன். நாட்டின் ஒரு பகுதியில் வசித்த அவன், மரம் வெட்டும் தொழில் செய்தான்.

மிகுந்த பணிவுடன், 'மன்னர் விடுத்துள்ள சவாலை ஏற்க தயாராக உள்ளேன்...' என்று கூறினான்.

அவையோர் சிரித்தனர்.

'மரம் வெட்டுகிற நீ... மன்னராக வேண்டுமா...' என ஏளனம் செய்தனர் மந்திரிகள்.

எதையும் பொருட்படுத்தாமல், கொள்கையில் உறுதியாக நின்றான் அகிலவன். மன்னர் உத்தரவிட்டதும், ஆயுதங்களுடன் குதிரையில் புறப்பட்டான். வெகுதுாரம் பயணித்த களைப்பில், ஒரு மரநிழலில் ஓய்வெடுத்தான்.

அப்போது, முனகல் குரல் கேட்டது.

சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தான்.

முதியவர் மயங்கி கிடந்தார். அவர் முகத்தில் தண்ணீரை தெளித்தான் அகிலவன்.

கண் விழித்தவர் நன்றி தெரிவித்தார். கொடிய மிருகம் பற்றி அவரிடம் கேட்டான்.

'அப்படி எந்த மிருகமும் காட்டில் இல்லையப்பா...'

'அப்படியென்றால், காட்டு வழியாக சென்ற வணிகர்கள் எங்கே...'

'தம்பி... சில விஷச்செடிகள் பார்ப்பதற்கு, மிக அழகாகவும், பார்த்தவுடன் சாப்பிடவும் தோன்றும்; இதை புரிந்து கொள்ளாமல், சாப்பிட்ட வணிகர்கள் மயங்கிக் கிடந்தனர்; காப்பாற்றி உரிய சிகிச்சை அளித்து, பாதுகாப்பாக தங்க வைத்துள்ளேன்...' என்று விளக்கினார். பின், அவர்கள் இருந்த இடத்துக்கு அழைத்து சென்றார்.

வணிகர்களுடன் நாடு திரும்பியவன், விபரத்தை மன்னரிடம் கூறினான்.

அகிலவனின் தன்னம்பிக்கை, தைரியத்தை பாராட்டிய மன்னர், மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மன்னராக அனைத்து தகுதி, திறமைகள் இருப்பதாக, அவனுக்கு முடிசூட்டு விழா நடத்தினார்.

செல்லங்களே... எதையும் நம்பிக்கையுடன் செய்ய முற்பட வேண்டும். நம்பிக்கை என்பது செயலை எளிமையாக்கும். வெற்றிப் பாதையில் பயணிக்க வைக்கும்.

- பி.கவுரி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us