தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/விடுதலையின் விதை!

விடுதலையின் விதை!

விடுதலையின் விதை!


PUBLISHED ON : செப் 19, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுதந்திரம் என்றால் நினைவில் நிற்கும் தலைவர்களில் ஒருவர் நேதாஜி. விடுதலை வேட்கையின் விதை, அவர் மனதில் விழுந்த உன்னத தருணத்தைப் பற்றி பார்ப்போம்...

ஆங்கிலேய ஆட்சியில், இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த, வங்க தேசத்தைச் சேர்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். உயர் கல்விக்காக, ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டன் நகருக்கு சென்றார். புகழ்மிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். நன்கு படித்து, ஐ.சி.எஸ்., தேர்வில், 4-வது ரேங்க் பெற்று, பிரிட்டீஷ் அரசு பணியில் சேர்ந்தார். இந்தியாவில் தற்போதுள்ள, ஐ.ஏ.எஸ்., பதவிக்கு இணையானது அது.

அங்கு, 'இந்திய சங்கம்' என்ற அமைப்பில் இணைந்தார். சுதந்திர போராட்ட வீரர்கள் பாலகங்காதர திலகர், கவிக்குயில் சரோஜினி நாயுடு உட்பட பலர், அந்த சங்க கூட்டங்களில் உரையாற்றினர். அவற்றைக் கேட்டு, விடுதலை உணர்வு பெற்றார் நேதாஜி. உள்ளத்தில் சுதந்திர தாகம் சுடர் விட்டு பிரகாசித்தது. போராட்டத்தில் இணைய முடிவு செய்தார்.

இங்கிலாந்து அமைச்சர் மாண்டேகுவை, 1921ல் சந்தித்தார். அவரிடம், 'இந்திய மக்கள் அடிமையாக துன்பப்படும் போது, பிரிட்டீஷ் அரசில் பதவி வகிக்க விரும்பவில்லை...' என்று கூறி, ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

கடிதத்தை படித்ததும், 'நன்றாக யோசித்து முடிவு செய்...' என்றார் அமைச்சர்.

'நிதானமாகத்தான் முடிவு எடுத்தேன். இனி எந்த மாற்றமும் இல்லை...' என, சபதம் ஏற்று வெளியேறினார்.

லண்டனில் அவருடன் படித்தவர்கள், 'மாணவ பருவத்தில் அமைதியாக இருந்தீர். அதனால், ஆன்மிகவாதி என நினைத்தோம். அரசியல்வாதியாக எப்போது மாறினீர்...' என்று கேட்டனர்.

நெஞ்சை நிமிர்த்தி, 'என்னை, தீவிரவாதி என்று சொன்னால் கூட கவலை இல்லை. என் நாடும், மக்களும் தான் முக்கியம். உயிர் உள்ளவரை, விடுதலைக்காக போராடுவேன்...' என்று, கம்பீரமாக இந்தியா திரும்பினார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, நாட்டு விடுதலைக்காக போராடினார். இந்தியர்களின் வீரத்தை, உலகுக்கு பறைசாற்றினார்.

வாழ்வும் வரலாறும்!

* ஒடிசா மாநிலம், கட்டாக்கில், ஜனவரி 23, 1897ல் வங்காள குடும்பத்தில் பிறந்தார் சுபாஷ் சந்திரபோஸ். இவரது தந்தையின் குடும்பம், 27 தலைமுறைகளாக, வங்காள மன்னர்களின் படைத்தலைவர் மற்றும் அமைச்சர் பதவிகளை வகித்து வந்தது

* துறவறம் செல்ல விரும்பிய போஸ், ஞான மார்க்கத்தில் முறையான குரு கிடைக்காததால், தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க, 1915ல் கொல்கத்தா, மாநில கல்லுாரியில் சேர்ந்தார். பின், சர்ச் கல்லுாரியில் இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறினார்; மாணவர் படைப் பயிற்சியிலும் சிறப்பிடம் பெற்றார்

* நாட்டு விடுதலைப்பற்றிய விவாதங்களில் ஈடுபட்டு வந்தவரை, அரசியலில் ஈடுபடுத்த விரும்பாமல், லண்டனில் உயர் படிப்புக்கு அனுப்பினார் தந்தை

* பிரிட்டீஷ், வேல்ஸ் இளவரசர் கொல்கத்தாவுக்கு, 1922ல் வரும் அறிவிப்பு வந்தது. அவருக்கு எதிராக மறியல் நடத்த, இந்திய தேசிய காங்கிரஸ் முடிவு செய்து, தலைவராக நேதாஜியை நியமித்திருந்தது. இதை அறிந்த ஆங்கிலேய அரசு, அவரை கைது செய்து, ஆறு மாதம் சிறையில் அடைத்தது

* காங்கிரசுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து, 1942ல் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அதில், பெண்களுக்காக, 'ஜான்சிராணி படை' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஒருமுறை, ஜான்சிராணி படை கூடாரப்பகுதிக்குள் நுழைந்தார். அடையாளம் தெரியாததால் கோவிந்தம்மாள் என்ற அதிகாரி தடுத்து நிறுத்தினார். அவரது பொறுப்புணர்வை பாராட்டி, 'லாண்ட்ஸ் நாயக் விருது' வழங்கி கவுரவித்தார்

* நேதாஜியின் கடைசி அறிக்கை, ஆகஸ்ட் 15, 1945ல் வெளியானது. அவரது கடைசி புகைப்படம், ஆசிய நாடான வியட்நாம், கோசுமிங் நகரில் எடுக்கப்பட்டிருந்தது

* ஆசிய நாடான தைவான், தாய்பெய் நகரில் நடந்த விமான விபத்தில், ஆகஸ்ட் 18, 1945ல் நேதாஜி இறந்ததாக, ஆசிய நாடான ஜப்பானில் வெளிவந்த பத்திரிகை செய்தி வெளியிட்டது. அப்படி ஒரு விபத்து நடக்கவில்லை என, தைவான் மறுத்துள்ளது

* சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த சர்ச்சை நீடிக்கிறது. அவருக்கு இந்தியாவின் மிக உயரிய, பாரத ரத்னா விருது, 1992ல் வழங்கப்பட்டது. இறப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாததால், டில்லி, உச்சநீதிமன்ற ஆணைப்படி, விருதை திரும்ப பெற்றது இந்திய அரசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us