PUBLISHED ON : நவ 07, 2020

திருச்சி மாவட்டம், பொன்மலை ரயில்வே உயர்நிலைப் பள்ளியில், 1959ல், 5ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்!
ரயில்வே துறையால் நடத்தப்பட்டது இந்த பள்ளி. இதில் ஒரு நடைமுறை இருந்தது. வழக்கமாக பாடம் நடத்தும் ஆசிரியர் திடீரென்று விடுப்பு எடுத்தால், தற்காலிகமாக ரயில்வே அலுவலக ஊழியர் பாடம் நடத்துவார்.
ஒரு நாள், தமிழ் வகுப்பெடுக்க வந்தார் ராதா; பாடம் முடித்ததும், 10 தமிழ் சொற்களை எழுதச் சொன்னார். அதை வரிசைப்படி சோதனை செய்தார். என் முறை வந்ததும், 'ஒரே ஒரு வார்த்தை தவறு...' என்றார். புரியாமல் விளக்கம் கேட்டேன்.
அன்பாக, 'மண்டு...' என தலையில் தட்டி, 'எழுதியதை நன்றாக பார்... 'இயற்கை' என்ற சொல்லை, 'இயற்க்கை' என தவறாக எழுதியிருக்கிறாய். எப்போதும், வல்லின, 'ற்' எழுத்து வந்தால், அடுத்து புள்ளியுள்ள மெய் எழுத்து வராது...' என்று கற்பித்தார். பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது.
தற்போது என் வயது 72; பேரக்குழந்தைகள் தமிழ் எழுதும்போது, இதுபோன்ற தவறு செய்தால், மற்போர், கற்சிலை, செயற்கை, நற்செயல், பற்கூச்சம் என பயிற்சியளிப்பேன். அப்போது, அந்த ஆசிரியையை முகம் நினைவில் வரும். கண்களில் நீர் நிறையும்.
இலக்கணத்தை எளிதாக பதிய வைத்தவரை மனதில் கொண்டுள்ளேன்.
- கி.முத்து கிருஷ்ணன், சென்னை.
தொடர்புக்கு: 96001 99478
