தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மர உச்சியில் தவமிருக்கும் வினோத குரங்கு!

மர உச்சியில் தவமிருக்கும் வினோத குரங்கு!

மர உச்சியில் தவமிருக்கும் வினோத குரங்கு!


PUBLISHED ON : ஜன 01, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆப்பிரிக்க காடுகளில் வாழும் ஒருவகை குரங்கு இனம், சூரிய உதயம் மற்றும் மறைவின் போது, மர உச்சியில் அமர்ந்து தவம் செய்யும் வினோத பழக்கத்தை கடைபிடிக்கிறது.

குரங்குகளில், பெருவிரல் இல்லாத ஒரே இனம் கொலபஸ். கொலாபினே குடும்பத்தைச் சேர்ந்தது. விரல்கள் நீண்டு, கொக்கி போல் வளைந்து காணப்படும்.

உடல் முழுதும் கருப்பு வண்ண முடி காணப்படும்; முதுகை ஒட்டி வளைந்த கோடு போல், வெள்ளை நிற முடியும், வால் நுனியில் கொத்தாக வெண் முடியும் அழகு சேர்க்கும். இதை, கருப்பு வெள்ளை கொலபஸ் என்கின்றனர்.

மத்திய ஆப்பிரிக்க காடுகளில் பரவலாக காணப்படுகிறது. ஆற்றங்கரையோரம் அடர்த்தி மிக்க மரங்கள் உள்ள காடு மற்றும் புல்வெளிகளில் வாழும்.

மிக புத்திசாலிதனமாக...

* இலைகள் நிறைந்த மரத்தையே தங்குமிடமாக தேர்வு செய்யும்

* ஒட்டுண்ணி தாக்குதல் மற்றும் எதிரிகளைத் தவிர்க்க, தங்கும் இடத்தை அடிக்கடி மாற்றும்.

தளிர் இலை, பூக்கள், மரப்பட்டை, மூலிகை செடி, கொடிகளை உணவாக கொள்ளும். நெருப்பு கரியையும் சிறிதளவு உண்ணும். இது, செரித்தலின்போது, இலைகளில் அளவுக்கு அதிகம் உள்ள, 'பீனாலிக்ஸ்' என்ற பொருளை வெளியேற்ற உதவும்.

ஆணுடன், எட்டு பெண் குரங்கு மற்றும் குட்டிகள் சேர்ந்து வாழும். கர்ப்ப காலம் ஆறு மாதம். ஈன்ற தாய் மட்டுமின்றி, கூட்டத்தில் அனைத்தும், குட்டிகளை கனிவாக வளர்க்கும்.

சூரியன் உதிக்கும் அதிகாலை, மறையும் மாலைப் பொழுதில், மரங்களின் உச்சியில் ஏறி, சிறிது நேரம் அமைதியுடன் அமர்ந்திருக்கும். இப்படி தவம் மேற்கொள்வதால் ஆப்பிரிக்க பழங்குடியினர், 'கடவுளின் துாதர்' என, அழைக்கின்றனர்.

மனிதனுக்கு ஏற்படும், 'வைட்டமின் - டி' சத்து குறைபாடு, காச நோய் போன்றவை குறித்த ஆராய்ச்சிக்கு, இந்த குரங்கு இனம் பயன்படுத்தப்படுகிறது. இறைச்சி மற்றும் முடிக்காக, அதிக அளவில் வேட்டையாடப்படுகிறது. பழங்குடியினர் மட்டும் இன்றி, சுற்றுலா பயணியரும் இதன் முடியில் செய்த தொப்பி அணிவதை விரும்புகின்றனர்.

ஒருகாலத்தில், பழங்குடியினர் மட்டுமே சாப்பிட்ட இந்த வகை குரங்கு மாமிசத்தை, நகரவாசிகளும் பெருமளவு விரும்ப துவங்கியுள்ளனர். இதுபோன்ற காரணங்களால், இந்த குரங்கு இனத்துக்கு, பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே, அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களின் பட்டியலில் சேர்த்து, பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது, பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்.

- டாக்டர் வானதி பைசல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us