PUBLISHED ON : அக் 21, 2023

இமயமலை என்றாலே அதன் உயரம் தான் மனதில் நிழலாடும். இங்கு தான் உலகின் உயரத்தில் அமைந்த தபால் நிலையம் உள்ளது.
இமாச்சலபிரதேசம், ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது ஹிக்கிம் கிராமம். கடல் மட்டத்தில் இருந்து, 14 ஆயிரத்து, 567 அடி உயரத்தில் இருக்கிறது. இங்கு தான் உலகின் உயரமான இடத்தில் அமைந்த தபால் நிலையம் உள்ளது.
இது, 1983ல் துவங்கப்பட்டது. தனித்துவமாக இயங்கி வருகிறது. போக்குவரத்து வசதியற்ற இமயமலையின் லங்ஜா, கோமிக் பகுதிகளுக்கு தபால் சேவை அளிக்கிறது. கோமிக் கிராமத்தில், 13 வீடுகளே உள்ளன. அங்கு, 40 பெண்கள் உட்பட, 130 பேர் வசிக்கின்றனர். இங்கு ஒரு புத்தர் சிலை உள்ளது. இதுவும் உலகின் உயரமான இடத்தில் அமைந்துள்ளது.
ஒரே ஊழியருடன் இயங்குகிறது, ஹிக்கிம் துணை தபால் நிலையம். தற்போது பணிபுரிபவர் ரின்சென் செர்ரிங். இந்த தபால் நிலையம் குளிர்காலத்தில் வெளியுலகத் தொடர்பு முற்றாக இழந்து விடும். அந்த அளவு பனிப்பொழிவு இருக்கும். அங்கு செல்வதும் மிக கடினம்.
இந்த பகுதியில் வசிப்போருக்கு பணப்பட்டுவாடா, சேமிப்பு கணக்கு, கடிதப் போக்குவரத்து, முதியோர் உதவித் தொகை, ஓய்வூதியம் போன்ற சேவைகளை இந்த தபால் நிலையம் வழங்கி வருகிறது. ஒவ்வொரு நாளும், பல கி.மீ., துாரம் நடந்தே சென்று கடிதங்களை வினியோகிக்கிறார், செர்ரிங்.
அலைபேசி, இணைய தொடர்புகள் இந்தப் பகுதியில் இல்லை. வெளியுலகுடன் தொடர்பு கொள்ள இந்த தபால் நிலையம் மட்டுமே உதவுகிறது. இதை காண ஏராளமான சுற்றுலாப் பயணியர் கோடை காலத்தில் வருகின்றனர். தபால் அட்டை வாங்கி, நண்பர்களுக்கு அனுப்பி மகிழ்கின்றனர்.
தபால் நிலையம், ஹிக்கிம் கிராமத்திற்குள் இருந்தது. சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்ததால், ஊருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளது. அழகான அஞ்சல் பெட்டி வடிவில் கட்டப்பட்டுள்ளது.
- தங்க.ஜெய்சக்திவேல்
