PUBLISHED ON : ஆக 30, 2019

நடுத்தர வருமான குடும்பத்தில் பிறந்த, ஐந்து பெண்களில் மூத்தவள் நான். திருப்பூர் மாவட்டம், பாளையக்காடு, மூ.ந.முருகப்பச் செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1990ல், 6ம் வகுப்பு படித்தேன்.
கனிவும், பொறுமையும் நிறைந்தவர், வகுப்பு ஆசிரியை தனபாக்கியம். பொறுப்புடன் பாடம் நடத்தி, அக்கறையுடன் கவனித்துக் கொள்வார்.
காய்ச்சலால் ஒரு நாள், வகுப்பில் சோர்வாக இருந்தேன். அதைக் கண்ட ஆசிரியை, மதிய உணவு இடைவேளையில், வீட்டிற்கு அழைத்துச் சென்றார்; ரசம் சாதம் சாப்பிட வைத்து, மருந்தும் கொடுத்தார். இந்த செயல், அவர் மீதான மரியாதையையும், அன்பையும் பன்மடங்கு உயர்த்தியது.
தேர்வுகளில், முதன்மை மதிப்பெண் பெறும் போதெல்லாம், 'சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது... மகிழ்ச்சியில் தேங்கிவிடாதே... இன்னும் முயற்சி செய்...' என்று உற்சாகமூட்டுவார்.
கல்லுாரியில் சேர்ந்த பின்னும், சந்திப்பேன். நல்ல ஆலோசனைகள் வழங்கி, சிறப்பாக வாழ நம்பிக்கை ஊட்டினார். குடும்பத்தில் ஒருவராக சுக, துக்கங்களில் பங்கேற்று அறிவுரை வழங்கி வருகிறார்.
அவர் தந்த நம்பிக்கையால், ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நிறுவி, 18 ஆண்டுகளாக வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறேன்.
என் ஒவ்வொரு வெற்றியிலும், அவரது பாராட்டும், உற்சாகம் தரும் அறிவுரையும் நிறைந்திருக்கிறது. அவரை போல ஆசிரியர் வாய்த்துவிட்டால், எப்படிப்பட்டவரும் வாழ்க்கையில் சாதிக்க முடியும்.
அவரது கனிவான சேவையையும், அக்கறை நிறைந்த ஆரவணைப்பையும் வணங்குகிறேன்.
- நித்யகல்யாணி, திருப்பூர்.
