PUBLISHED ON : ஜூலை 08, 2023

பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். அவற்றில் வித்தியாசமானது, மக்காச்சிக்காடை என்ற தவளைவாயன் பறவை. ஆங்கிலத்தில், 'பிராக்மவுத்' எனப்படுகிறது. இதன் தலையும், அலகும், தவளை வாய் போல் இருக்கும்.
இது, 23 செ.மீ., வரை வளரும். அன்றாடம் காணும் மைனா என்ற பறவை அளவுடையது. நீண்ட தொலைவுக்குப் பறக்கும் திறனுள்ளது போல தோன்றும். ஆனால், நீண்ட துாரம் பறக்க இயலாது. இந்த பறவையினத்துக்கு, வலுவான கால்கள் இல்லை.
மக்காச்சி இனத்தில், ஆண், பெண் பறவைகள் இணைந்தே காணப்படும். இரவில் சுறுசுறுப்பாக இரை தேடும். பூச்சி, சிறிய பல்லி இனங்கள், எலிகள் தான் இதன் உணவு. வேகமாக பறந்து இரைப்பிடிக்க இயலாது. எனவே, இரை மீது துள்ளி விழுந்து பிடிக்கும். பிடித்த இரையை பெரிய வாயால் சட்டென விழுங்கி விடும்.
பாறைகளில் வளரும் பாசிகளைப் பயன்படுத்தி மக்காச்சிப் பறவை கூடு கட்டும். ஆண்டுக்கு ஒரேயொரு முட்டை தான் இடும். ஆணும், பெண்ணும் சேர்ந்து அதை அடைகாக்கும். குஞ்சு வளர்ந்து பெரிதானதும், ஆண் பறவை அந்த கூட்டை சிதைத்து அழித்து விடும்.
இந்த பறவை பகல் நேரத்தில் அடர்ந்த புதர்களுக்குள் அமர்ந்து ஓய்வெடுக்கும். அப்போது ஆந்தை போல தோன்றும். மஞ்சள் நிறக் கண்களை மூடி, அலகை மேல்நோக்கி உயர்த்தியபடி துாங்கிக் கொண்டிருக்கும். அப்போது, மரப்பட்டை மற்றும் புதரின் நிறத்தோடு ஒன்றி காணப்படும்.
எளிதில் பார்வையில் படாது. ஓய்வெடுக்கும் நேரத்தில் யாராவது நெருங்கினால் தேனீக்கூட்டம் மொய்ப்பது போல, 'ஹிஸ்...' என, ஒரு விதமாக ஒலியெழுப்பும். இந்த எச்சரிக்கை ஒலி நீண்ட தொலைவுக்குக் கேட்கும். இரவு நேரத்தில் உறுமல் மாதிரி ஒலி எழுப்பும்.
நம் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அதிகம் காணப்பட்ட பறவை இது. நீண்ட நாட்கள் கண்ணில் படாததால் இந்த இனம் அருகிவிட்டதாக கணிக்கப்பட்டிருந்தது. கடந்த, 1976ல் கேரள மாநிலம், தட்டைக்காடு பகுதியில் மீண்டும் பார்த்தனர் பறவையியல் அறிஞர்கள். தற்போது, கேரள மாநிலம் தட்டைக்காடு, அமைதிப்பள்ளத்தாக்கு, பரம்பிக்குளம், பெரியாறு, கரியன் சோலை, நெல்லியம்பதி, தென்மலை, வயநாடு பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
இந்தப்பறவைக்கு மலையாள மொழியில் பெயர் மக்காச்சி. இதற்கு, பெண் காட்டுப்பூனை என்று அர்த்தம். இப்படியொரு பெயரை சூட்டியதற்கான காரணம் புதிராக உள்ளது. காட்டுத்தீயும், வெருகு என்ற காட்டுப்பூனையும் தான், மக்காச்சி பறவையின அழிவுக்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. காடுகளை பாதுகாப்பதன் மூலம் இந்த பறவையினத்தை அழிவில் இருந்து தடுக்கலாம்.
- மோகன ரூபன்
