PUBLISHED ON : ஜூலை 08, 2023

ஆற்றின் கரையோரம் இரண்டு ஆலமரங்கள் வளர்ந்து கிளை பரப்பி இருந்தன. அங்கு பறந்து வந்தது ஒரு குருவி. அது, முதல் ஆலமரத்திடம், 'உன் கிளையில் கூடுக்கட்டி குஞ்சு பொரிக்க அனுமதி தருவாயா...' என்று கேட்டது.
'அதெல்லாம் முடியாது...'
மறுத்து விட்டது முதல் ஆலமரம்.
வருந்திய குருவி, அடுத்த ஆலமரத்திடம் சென்றது. தன்நிலையை எடுத்து கூறி உதவ வேண்டியது. மிகுந்த கனிவுடன், 'நண்பா... இதென்ன பிரமாதம்; எவ்வளவு காலம் வேண்டுமானாலும் என் கிளையில் தங்கிக் கொள்...' என்று கூறியது.
மகிழ்ச்சியுடன் கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சும் பொரித்தது குருவி.
ஒரு நாள் -
காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு பாய்ந்தது. அதற்கு தாக்குப் பிடிக்க இயலாமல், முதல் ஆலமரம் வேரோடு சாய்ந்தது. அலை புரண்ட வெள்ளம் அதை இழுத்து சென்றது.
இதைக் கண்டதும், 'எனக்கு தங்க இடம் கொடுக்காததால் தான், உனக்கு இந்த கதி...' என ஏளனமாக கூறியது, குருவி.
தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட ஆலமரம் மிகவும் மென்மையாக, 'குருவி நண்பா... என் வேர்களின் பலமின்மை பற்றி நான் ஏற்கனவே தெரிந்திருந்தேன்; காட்டாற்று வெள்ளம் பாய்ந்தால், சுலபமாக அடித்து சென்றுவிடும் என்பதையும் அறிந்திருந்தேன்...
'இது பற்றி தெரிந்திருந்தும், என் கிளையில் உன்னை கூடுகட்ட அனுமதித்திருந்தால், அது உன் வாழ்வை கடுமையாக பாதித்திருக்கும். காட்டாற்று வெள்ளம் உன் குஞ்சுகளை அடித்து சென்றிருக்கும். இது தெரிந்து தான் என் கிளையில் கூடு கட்ட உன்னை அனுமதிக்கவில்லை. புரிந்ததா...' என்றது.
ஆலமரத்தின் கருணை உள்ளத்தை புரிய தவறியதை எண்ணி மன்னிப்பு கேட்டது குருவி.
குழந்தைகளே... எந்த செயலிலும் உண்மையை அறிந்து கொள்ள முயல வேண்டும். வாழ்வில் தடங்கல் ஏற்பட்டால் யாரையும் தவறாக எண்ணக் கூடாது!
- ராதிகா ரவிந்திரன்
