PUBLISHED ON : மே 30, 2020

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 6ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியர் சுப்புராமன், மாத நாட்களை மனதில் கொள்ள, சுலப வழி முறையை சொல்லித் தந்தார்.
பள்ளியில் ஆண்டு இறுதி தேர்வு நடப்பது ஏப்ரல்; பள்ளி திறப்பது ஜூன்; ஆசிரியர் தினம் கொண்டாடுவது செப்டம்பர்; குழந்தைகள் தினம் வருவது நவம்பர். இந்த, நான்கு மாதங்களும், ஆசிரியர், மாணவர் சம்பந்தப்பட்டது; இவற்றுக்கு, 30 நாட்கள்.
இவற்றை மனதில் நிறுத்த கூறியவர், 'பிப்ரவரி தவிர, மற்ற ஏழு மாதங்களும், 31 நாட்களைக் கொண்டது...' என, கற்பித்தார். மாத நாள் கணக்கை மட்டுமல்ல, அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தினங்களையும் நினைவில் பதிக்கத்தக்க வகையில், அவரது பாடம் அமைந்திருந்தது.
இப்போது, என் வயது, 70; இன்றும், அதே முறைப்படி தான் ஆங்கில மாத நாட்களை வரிசைப்படுத்தி மனதில் கொண்டுள்ளேன்.
- ந.வெங்கட்ராமன், தேனி.
